25/09/2020

சிவன் குகை...

 


புராண சம்பவங்களோடு தொடர்புடைய பழமையான தலங்கள் நமது நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை.

அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ரேசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மலைகள் சூழ்ந்த இப்பகுதியில் பௌனி பிளாக் எனப்படும் குன்றுள்ளது. இந்தக் குன்றில் ஒரு குகை அமைந்துள்ளது.

ஷிவ்கோரி (சிவன் குகை) எனப்படும் இந்தக் குகைக்குள்ளே சுயம்புவாகத் தோன்றிய சிவபெருமானின் திருவுருவம் காணப்படுகிறது.

பொதுவாக லிங்க வடிவங்கள் சுயம்புவாய் முகிழ்த்ததைத் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு சிவபெருமானின் தியானக்கோல முழு வடிவமே சுயம்புவாகக் காணப்படுவது அதிசயம். சுமார் நான்கு மீட்டர் உயரம் கொண்டது!

அருகே லிங்கம், பார்வதி தேவி, விநாயகர், முருகன், நந்தி ஆகியோரின் வடிவங்களும் காணப் படுகின்றன. எல்லாமே தான்தோன்றி வடிவங்கள்தான்; சிற்பியால் செதுக்கப்படாதவை.

இந்தக் குகையே அற்புதம் நிறைந்ததாக உள்ளது. அதாவது, சிவன் கையிலிருக்கும் உடுக்கை போன்ற வடிவில் உள்ளது. ஒரே நேரத்தில் 300 பேர் நுழையுமளவுக்கு குகையின் முன்புற வாயில் அமைந்துள்ளது.

போகப்போக அகலம் குறைந்து சிறிதாகி, பிறகு மீண்டும் அகன்று சென்று குன்றின் அடுத்த பகுதியில் முடிவடைகிறது.

குகைக்குள் நுழைந்து சிவனை வணங்கிவிட்டு பின்புற வாயிலில் வெளியேறிவிடலாம். இந்தக் குகையின் நீளம் சுமார் 150 மீட்டர்.

இந்தக் குகைக்குள் 33 கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். குகையின் மேற்பகுதி பாம்புத்தோல் போன்று தோற்றம் தருகிறது. சுதர்சன சக்கர வடிவம், காமதேனு வடிவம் போன்றவை இந்தக் குகைக்குள் காணப்படுகின்றன.

"நான் யார் தலையில் கைவைக்கிறேனோ, அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டு'மென்று சிவபெருமானிடம் வரம்பெற்றான் பஸ்மாசுரன். தான் பெற்ற வரத்தை சோதிக்க எண்ணி சிவன் தலைமீதே கைவைக்க முயன்றான். சிவபெருமான் அங்கிருந்து தப்பியோட, பஸ்மாசுரன் விடாமல் துரத்தினான்.

இதைக்கண்ட மகாவிஷ்ணுவானவர்     மோகினி வடிவம் கொண்டு அசுரனின் எதிரில் வர, மோகினியின் அழகில் மயங்கினான் அசுரன். தந்திரமாக அவனிடம் பேசி, அவன் தலைமேலேயே கைவக்கச் செய்தார் மகாவிஷ்ணு. பஸ்மாசுரன் எரிந்து சாம்பலானான். இந்தப் புராண நிகழ்வு நடந்த இடம் இதுதான் என்கிறார்கள்.

இந்தக் குகைக்குள் வேறொரு வழியும் உள்ளது. அது அமர்நாத் குகையில் சென்று முடிவ தாகக் கூறுகிறார்கள். இதன் வழியேதான் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்களாம். தற்போது இந்தக் குகைவழியை அரசாங்கம் தடைசெய்துள்ளது.

மகாசிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப் பாகக் கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் இங்கு திரளுவார்கள். சிவன் சிலை யின்மீது, குகையின் மேற்புறத்திலிருந்து எப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று யாருக்கும் தெரியாது.

சிவராத்திரியன்று இது பால்போன்ற வெள்ளை நிறத்தில் விழுந்து சிவனை அபிஷேகிப்பதும் அதிசயமே.

சித்தர்களும் ரிஷிகளும் தவமிருந்த மிகப்பழமையான இந்தக் குகைக் கோவிலை, 2003-ஆம் ஆண்டு முதல் ஒரு திருப்பணிக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார்கள்.

குன்றின்மீது ரன்சோகௌன் என்னும் கிராமம் உள்ளது. அந்த கிராமம் வரை வாகனப் போக்குவரத்து உண்டு. அங்கி ருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துசென்றுதான் குகையை அடையவேண்டும். பேட்டரி கார் இயக்குவதற் கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.

சென்னை- டெல்லி- ஜம்மு- கட்ரா வழியாக சிவன் குகை செல்லலாம். வைஷ்ணவா தேவி கோவில் வழியாகவும் செல்லலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.