31/10/2020

வெளி மாநிலத்தவருக்கு வீடு, கடைகள் கிடையாது: சீர்காழி வர்த்தகச் சங்கம் முடிவு...

 


வெளி மாநிலத்தவர்களுக்கு வீடு மற்றும் கடைகளை இனி வாடகைக்கோ, விற்பனைக்கோ கொடுக்க மாட்டோம் என சீர்காழி வர்த்தகச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் துண்டறிக்கைகள் மூலம் சீர்காழி பகுதி மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீர்காழி நகரில் முதலில் அடகுக் கடைகள் வைத்துத் தொழில் செய்துவந்த வடமாநிலத்தவர்கள் தற்போது நகரிலேயே மிகப்பெரிய தொழிலதிபர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறியிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், அடகுக் கடைகள், நகைக் கடைகள், உணவகங்கள், இரும்பு மற்றும் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் என நகரில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் வடமாநிலத்தவர்கள் கைகளிலேயே இருக்கின்றன.

தற்போது தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழர் வேலை தமிழர்களுக்கே என்ற பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. சீர்காழியில் உள்ள வர்த்தகர்கள் நலச் சங்கமும் இந்தப் பிரச்சார இயக்கத்தில தமிழ்த் தேசியப் பேரியக்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.

அதனடிப்படையில் சீர்காழி வர்த்தக நலச் சங்கம் சார்பில், இனி சீர்காழி நகரில் வெளிமாநிலத்தவர்களுக்கு வீடு மற்றும் கடைகளை விற்பனைக்கோ அல்லது வாடகைக்கோ கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதனை சீர்காழி பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டு வர்த்தக நலச் சங்கம் சார்பில் துண்டறிக்கைகளும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்துச் சீர்காழி வர்த்தக நலச் சங்கத்தின் தலைவர் பு.கோபு கூறும்போது, "சீர்காழி நகரில் உள்ளூர்வாசிகள் தற்போது எந்தத் தொழிலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுக நகரின் ஒட்டுமொத்த வர்த்தகத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்ட வெளி மாநிலத்தவர்கள் இங்கு வேறு யாரும் தொழில் செய்து விட முடியாதபடி கடை இடம் மற்றும் கட்டிடங்களின் விலை மதிப்பையும் உயர்த்தி விட்டுவிட்டனர். அத்துடன் தரமற்ற பொருட்களைக் கொண்டுவந்து விலை குறைத்து விற்பனை செய்கின்றனர். அதனால் போட்டியைச் சமாளிக்க முடியாமல் இங்கு தொழில் செய்து வந்த உள்ளூர்க்காரர்கள் நஷ்டமடைந்து தொழிலைக் கைவிட்டுவிட்டனர்.

உதாரணத்திற்கு வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்த 12 கடைகளில் 10 கடைகள் மூடப்பட்டு இரு உள்ளூர்வாசிகள் மட்டுமே கடை வைத்து இருக்கின்றனர். 20க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் உதிரிபாகங்கள் கடைகளை வைத்திருக்கிறார்கள். இதுபோலவே பிற தொழில்களிலும் அவர்களே அதிக அளவில் கடைகளை வைத்திருக்கிறார்கள். இதனால்தான் தமிழர் வேலை மட்டுமல்ல, தமிழர் வணிகமும் இனி தமிழர்களுக்கே என்று முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது" என்றார் கோபு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.