முடியாததை உணர உணர முடியாததை எளிதில் முடிக்கலாம்...
இயல்பான சுவாச ஒழுங்கில் இருக்கும் பொழுது, அது அவ்வளவு எளிதல்ல என்பதும் உலகத்தையே வென்றாலும் கூட சுவாச ஒழுங்கில் நீடிப்பது என்பது மிக கடினமான நிலைப்பாடு என்பது புரிய வரும்..
காரணம் பிரபஞ்ச சக்தியையே உள் வாங்கி பிரபஞ்சத்தையே ஆளுமை செய்யும் அளவிற்கு பேரறிவு பெறும் ஆற்றலை தரக் கூடியது இந்த சுவாச ஒழுங்கு..
உலகத்தையே வென்றவன் அந்த பிரபஞ்ச ஆற்றல் இன்றி மரணத்தை தழுவி உலகத்தின் மண்ணுக்குள் புதைப் படுபவன் அறிவு அற்றவன்..
இந்த ஒரு உண்மையை அறிந்தாலே ஞான கதவு திறக்கப் படும்..
ஞானி எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நாடி பயணப் படுபவன்...
உலகத்தையே வென்றாலும் ஜீவ ஆற்றலான பிரபஞ்ச ஆற்றலை இழப்பதை காட்டிலும் முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ ?
ஆனாலும் அதை தானே மனித குலம் செய்து கொண்டு இருக்கிறது...
இன்னும் அதை தானே மனித குலம் செய்யப் போகிறது..
உலகத்தையும் உலக உடமைகளை வெல்வதற்கு, உலகத்திற்கு சொல்ல முடியாத துன்பத்தை கொடுத்து விட்டு, தன் உயிர் ஆற்றலான பிரபஞ்ச ஆற்றலை பூரணமாக தேகத்தில் இழந்து, பெற்றதையும் அனுபவிக்க முடியாமல், மண்ணுக்குள் புதையும் மனிதனை அறியாமையின் மொத்த உருவம் என்று தானே சொல்ல வேண்டும்...
மிக மிக எளிய சுவாச ஒழுங்கில் இருக்க முடியவில்லை என்று கவலைப் பட தேவை இல்லை..
பேரண்ட பேரறிவு நமக்காக பல கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது..
மூடிய கதவிலே முட்டி முட்டி மண்டையை உடைக்கும் அவல நிலையிலிருந்து விடுபடவும் பேரறிவு ஒரு கதவையும் திறந்து வைத்து இருக்கிறது..
இன்னும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு தரக் கூடிய கதவுகள் திறந்தே வைத்து இருக்கிறது..
சுவாச ஒழுங்கில் நீடிக்க அந்த பிரபஞ்சம் திறந்து வைத்து இருக்கும் மற்ற கதவுகளை அடையாளம் காண வேண்டும் என்றால் அதை நோக்கி பயணப் படும் போது மட்டுமே அடையாளம் காண சாத்தியம் ஆகும்..
சரி இப்போது மற்ற ஒரு கதவினை காணலாம்..
அதாவது சுவாச ஒழுங்கிலே தோல்வி என்ற ஒரு மூடிய கதவை தவிர வெற்றியை தரக்கூடிய வேறு ஒரு கதவினை காணலாம்..
அதுதான் தோல்வியை உணர்த்தும் இன்னொரு கதவு...
சுவாச ஒழுங்கிலே மனதின் நிலையற்ற தன்மையாலே, உறுதியற்ற தன்மையாலே, சுவாச ஒழுங்கிலே ஏற்படுகின்ற ஒழுங்கின்மை என்ற தோல்விகளை உணர்த்தும் கதவு..
ஒழுங்கின்மை ஒரு தோல்வி என்றால் ஒழுங்கின்மையை உணராத அறிவின்மை அதை விட மிகப் பெரிய தோல்வி..
தோல்வி அடைந்ததை உணராத போது தோல்விகள் நீடிக்கும் என்பது ஒரு சத்தியமான உண்மை..
அதை உணர வைப்பது உணர்வின் அதிபதியான புத்தி..
சுவாச ஒழுங்கின்மையில் இருந்து மீள முடியாமல், அந்த ஒழுங்கின்மையில் இருக்கும் சமயம் தான் ஒழுங்கின்மையில் இருக்கிறோம் என்பதை உணர தொடங்கும் போது, புத்தி விழித்து எழ தொடங்குகிறது...
இப்படி விழித்து விழித்து எழுந்த புத்தி பலம் அடைகின்ற போது மட்டுமே அது மனதின் மேல் ஆளுமை தன்மை பெற முடிகிறது..
ஆளுமை தன்மை பெற்றவுடன் மனதை திருத்தி மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு மனதை வர வைக்கிறது..
இப்படியான தோல்விகளிலும் பொன்னை எடுக்கும் வழி முறையை அந்த இன்னொரு கதவு நமக்கு தருகிறது..
பொன் என்பது பலன், வெற்றி. என்பதாகும்..
ஆரம்ப நிலையிலே தோல்விகளை சந்திக்கும் போது அதை சரி செய்ய முடியவில்லை யென்றால் அச்சமயம் அந்த தோல்வியை உணர்ந்தாலே போதும்..
உணரும் அச்சமயம் புத்தி விழித்துக் கொள்ளும் ஒரு பெரும் புனித செயல் நடக்கின்றது..
எந்த ஒரு காரியம், வேலை, நேரங்களில் அந்த சுவாச ஒழுங்கில் இருப்பது சற்று கடினமே..
அந்த அந்த சமயங்களில் தன்னில் ஓடும் சுவாச ஒழுங்கின்மையை கவனித்து உணர்ந்தாலே போதும்...
மிக விரைவில் புத்தி விழித்து எழுந்து மனதை ஆட்கொண்டு அந்த அந்த வேலையில் சுவாச ஒழுங்கினை ஏற்படுத்தி, அந்த அந்த வேலையை திறம் பட செய்ய பிரபஞ்ச ஆற்றலை செயல்பட வைத்து விடுகிறது ..
இதனை சற்று உணர்ந்து, கவனித்துப் படித்து, சுவாச ஒழுங்கின்மை சமயம், அந்த ஒழுங்கின்மையை கவனித்து உணர்ந்து இருக்கும் நிலையில் பெரும் ஆன்ம இலாபம் கிடைக்கின்றதை மறக்காமல் இருந்து அந்த உணர்வின் பயனாய் சித்தர் நிலை நோக்கி விரைவான முன்னேற்றம் அடைவோமாக....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.