அதிமுகவின் ஓபிஎஸ்-எடப்பாடி அணிகள் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சசிகலா, தினகரனை ஓரம் கட்டி அதிமுகவையும் கட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளன.
இது தொடர்பாக இருதரப்பிலும் தலா 5 பேர் கொண்ட ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
சசிகலா, தினகரனின் ஆதிக்கத்தால் அதிமுக சுக்கு நூறாக சிதைந்து போய் எஞ்சிய 4 ஆண்டுகால ஆட்சி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் இனி அதிமுக ஆட்சிக்கே வரமுடியாத நிலை உள்ளது.
சசி, தினகரனை ஓரம்கட்டுவது...
இதனால் ஆட்சிக் காலத்தை தக்க வைப்பதில் அதிமுக மூத்த தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். குறிப்பாக சசிகலா, தினகரனை ஓரம்கட்டினால் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இணைந்து விடும். ஆட்சிக்கும் கட்சியின் சின்னத்துக்கும் பிரச்சனை இல்லாமல் போய்விடும் என்பது அதிமுக மூத்த தலைவர்களின் கருத்து.
ஆட்சி கவிழ்ப்பு மிரட்டல்...
இதைத்தான் தினகரனிடம் நேரடியாகவே தம்பிதுரை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூறினர். ஆனால் தினகரனோ, நான் ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என மிரட்டி வருகின்றார்.
இருதரப்பு குழுக்கள்...
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் சசிகலா, தினகரனை ஓரம்கட்டி விட்டு அதிமுக கட்சி, ஆட்சியை எப்படி நடத்துவது என மும்முரமாக விவாதித்து வருகின்றனராம். இதற்காவே இருதரப்பிலும் தலா 5 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யார் யார்?
ஓபிஎஸ் அணியில் கேபி முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அணியில் தம்பிதுரை, வைத்திலிங்கம், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதிகாரப்பூர்வமாக இக்குழுக்கள் அறிவிக்கப்படாத நிலையில் ரகசிய பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
என்ன அஜெண்டாக்கள்?
அதாவது இரு அணிகளும் இணைகிற போது யாருக்கு என்ன பதவிகள் என்பது தான் முதல் அஜெண்டாவாக இருக்கிறது. அதையடுத்து இரு அணிகளும் இணைகிற போது தினகரன் மேற்கொள்ளும் கவிழ்ப்பு முயற்சிகளை முறியடிப்பது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
விஜயபாஸ்கர் தான் போவார்...
தினகரன் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தால் பதவியை இழக்க விரும்பாத எம்.எல்.ஏக்கள் அவரது பக்கம் போக மாட்டார்கள். விஜயபாஸ்கர் போன்ற ஒருசிலர் தான் தினகரனுடன் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறதாம் ஓபிஎஸ்- எடப்பாடி அணிகள். இதனால் இருதரப்பும் பேச்சு வார்த்தைகளை தீவிரமாக்கியுள்ளதாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.