04/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 55...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனப் பகுதி 55-ம் பகுதியாகும். மனித செயல்களை காட்டிலும் கடவுளின் செயல்கள் மிக, மிக சூட்சமமானவை. அவைகளை புரிந்து கொள்ள மனிதனுக்கு அவகாசம் இல்லை என தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

கடவுள் நம்பிக்கை என்பது என்ன? என்ற கேள்வியை இந்த 55-ம் தீர்க்க தரிசனப்பகுதி மக்கள் சமூகத்திற்கு முன் வைக்கின்றது. தன்னுடைய மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்த சமூகத்தை சுற்றியே இருக்கும் பட்சத்தில் கடவுளிடம் மனித சமூகம் வசதி, வாய்ப்புகளை எதிர்பார்ப்பது எவ்வளவு இழிவான செயல் என்று தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் இங்கு ஒரு விளக்கத்தை தருகின்றது. தன் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பது யார்? தீர்மானிப்பது... அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் சமூகம் இங்கு எங்குள்ளது? என்ற கேள்வியை தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் மக்கள் சமூகத்திற்கு இங்கு ஒரு வினாவை எழுப்புகிறது. தன் உழைப்பை நம்பாமல், தான் வணங்கும் கடவுள் நமக்கு இன்று தருவார் என்று நம்பிக்கையோடு சுற்றி திரியும் மக்கள் கூட்டத்தின் நிலையை எவ்வாறு புரிய வைப்பது என்பதே இன்றைய கடவுள் நம்பிக்கை என்ற தலைப்பின் முக்கிய அம்சம் என்று 55-ம் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் ஒரு குறிப்பை தருகின்றன.


தன் சமூகத்தில் உள்ள வசதி, வாய்ப்புகளை ஒருவன் உழைப்பின் வழி மட்டுமே அடைய வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை தனது அறிவாலும், ஆற்றலாலும் அடைய வேண்டும் என்றும், அதற்கான வழிமுறை தேடுதல்களில் ஏற்படும் தடைகளை நீக்கவே கடவுள் என்ற மகாசக்தியிடம் மனிதன் முறையிட வேண்டும் என்றும், தனது பிறப்பு, இறப்பு என்ற நிலைகளை, தான் தீர்மானிக்க முடியாத சூழல்களில் மட்டுமே தன்னை காக்கும்படி கடவுளிடம் மன்றாட வேண்டும் என்றும், இதுவே முழுமையான கடவுள் நம்பிக்கை என்பதை மனித குலம் மறந்து விடக்கூடாது என 55-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


மேலும் ஆன்மீகம், பக்தி, தேடுதல், யோகம், தியானம், தவம் என்ற பெயரில் மக்கள்குலம் தன் உழைப்பையும், அறிவாற்றலையும் நம்பி முயற்சி செய்யாமல் மலை, மலையாக, ஜீவ சமாதி உள்ள இடங்களை நோக்கி அலைவது எதற்காக என்று இங்கு ஒரு கேள்வியை எழுப்புகிறது. அக்கால சித்தர்களும், ஞானிகளும், அரசர்களும் தங்களது பதவி, அந்தஸ்து, மனைவி, மகன், மகள், சொத்து, உறவுகளை விட்டுவிட்டு, நிலையான சந்தோஷம், ஆத்ம திருப்தி, நிலையான வாழ்க்கை, உண்மையான கடவுள் என தனது அறிவின் ஆற்றலையும், உயிர் வாழும் உன்னத நிலைகளை தேடியே மலை, மலையாக ஏறி அலைந்து ஜீவசமாதி ஆனார்கள். ஆனால் இன்றைய மக்கள் கூட்டமோ இதனை அறியாது அந்த ஜீவ சமாதி உள்ள இடத்திற்கு கூட்டம், கூட்டமாக சென்று அவர்களிடத்தில் பொன், பொருள், அருள் வேண்டி அலைகின்றனர். அவர்களுக்கு எத்தனை சித்தர்கள் காட்சி கொடுத்து ஆசி வழங்கி அவர்களுக்கு வழிகாட்டி உள்ளனர் என்ற கேள்வியை 55-ம் தீர்க்க தரிசனம் எழுப்புகிறது.

சித்தர்களின் நோக்கத்தையும், அவர்களின் தவத்தின் தன்மையை அறியாது இன்று மக்கள் கூட்டம் வெறும் ஆன்மீகம் என்ற பெயரில் அலைகிறது என 55-ம் தீர்க்க தரிசனம் குற்றம் சாட்டுகிறது. இதுவரை எந்த சித்தராவது கூட்டமாக செல்லும் மக்கள் கூட்டத்திற்கு முன் ஒரு சேர காட்சி கொடுத்துள்ளனரா? என்று 55-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு கேள்வியை எழுப்புகிறது.

சித்தர்களின் அனைத்து ஜீவ சமாதிகளும் இறைவன் ரூபம் கொண்டுள்ள ஏதாவது ஒரு ஸ்தலத்தில் மட்டுமே காணப்படும். இதன் நோக்கம் அவர்கள் தேடியது இறைவனை மட்டுமே என்பதே இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். ஆக மக்கள் சித்தர்களின் ஜீவசமாதியை தேடி சென்று அங்குள்ள இறைவனை முழுமையாக உணர வேண்டும் என்று 55-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மக்கள் தங்களை மறந்து வேடமிட்டு மலை, மலையாக ஏறி, இறங்கியும் தன் மீது இறைவன் மனம் இறங்கவில்லையே என்று புலம்புவதை இன்று நாம் காணலாம். மலை ஏறவும் வேண்டாம், மனதால் புலம்பவும் வேண்டாம். யாருக்கும் துன்பம் கொடுக்காமல் இறைவனை மனதில் நிலைநிறுத்தி, சித்தர்கள் முயற்சித்த செயல்முறைகளை அறிந்து அதன் வழியில் மனிதன் முயற்சித்தாலே அவன் பாவம் குறைந்து அவன் வாழ வழி கிடைக்கும் என்று 55-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. சித்தர்களின் ஜீவசமாதியில் அவர்களின் ஆற்றல் மட்டுமே நிறைந்திருக்கும் என்றும், அவர்கள் அனைவரும் இறைவனிடத்தில் ஒன்றிணைந்து இருப்பார்களே ஒழிய அவ்விடத்தில் இருக்க மாட்டார்கள் என 55-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு விழிப்புணர்வை மக்கள் சமூகம் அறிய வேண்டும் என எடுத்துக் கூறுகிறது.


சித்தர்களின் ஜீவசமாதியில் உள்ள ஆற்றல்களை சாமான்ய மக்களால் அடைய முடியாது என்றும், அது சித்தர்களின் சொத்து என்று 55-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. நல்ல மனம் உடைய மாந்தர்கள், மனிதர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உலக நோக்கத்திற்காக வாழும் அந்த மக்கள் சமூகம் சித்தர்களின் ஜீவசமாதியை தேடி வந்து அங்கு தவமியற்றும் சமயத்தில் சித்தர்கள் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து அவர்களின் ஆத்மாவில் அமர்ந்து, தாமும் இறைவனை நோக்கி தவமியற்றி மனமகிழ்ந்து, அவர்களை விட்டு விலகும்சமயத்தில் தனது தவசக்திகளை அந்த மனிதர்களின் புனித ஆத்மாவிற்கு வழங்கி விட்டுச் செல்வார்கள் என்றும், அவ்வாறு சித்தர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த மனிதர்களை மக்களால் அவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியாது என்று 55-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இனி மக்கள் அதிகமாக கூடி, தவம், யோகம் என்று தங்களுக்கு தாங்களாகவே பெயர் சூட்டிக் கொண்டு பௌர்ணமி, அம்மாவாசை தினங்களில் கொட்டம் அடிக்கும் மக்கள் கூட்டத்தில் திடீர் என்று பல சோகச் சம்பவங்கள் நடக்கும் என்றும், இனி மக்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்று 55-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

தன்னைவிட இவ்வுலகில் சிறந்த ஆன்மீகவாதி யாரும் இல்லை என்று சொல்லிக் கொள்ளும் அத்தனை நபர்களுக்கும் இது போதாத காலம் என்று 55-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் ஒரு மகா பாதகன் ஆன்மீகவாதியாக தன்னை சித்தரித்து கொண்டு வாழ்ந்து வருவதாகவும், அவனின் முகத்திரையை விலக்கி அவனின் சுயரூபம் என்னவென்று உலக மக்கள் அறியும்படி செய்யும் ஒரு மகா சம்பவம் ஒன்று தற்போது நிறைவேற உள்ளதாக 55-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.