30/09/2017

கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்...


செம்மொழி ஆய்வரங்கத்தில் ஜுங் நம் கிம் எனும் கொரிய ஆராய்ச்சியாளர், கொரிய மொழியில் பயன்பட்டு வரும் 500 தமிழ் வார்த்தைகளை கண்டறிந்து 'கொரிய மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்' என்ற தலைப்பில் கட்டுரையாக சமர்பித்திருக்கிறார்.

கொரிய மொழியில் உள்ள தமிழ் வார்த்தைகளை கண்டறிந்தது குறித்து கூறியதாவது:-

கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக பணியாற்றி வரும் நான், ஆறு ஆண்டுகளுக்கு முன் டொரோண்டோ நகரில் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தேன்.

அவர்கள் பேசிய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு கொரிய மொழி போல இருப்பதைக் கேட்டு வியந்தேன்.

அவர்களிடம் விசாரித்தபோது, இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள்.

அப்போதுதான் இரு மொழி வார்த்தைகளுகிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்தேன்.

அதை தொடர்ந்து தமிழ் மொழியை கற்க ஆரம்பித்தேன்.

மேலும், இரு மொழி வார்த்தைகளுக்குமிடையே உள்ள உச்சரிப்பு ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன்.

அப்போது கொரிய மொழியில் சுமார் 500 தமிழ் வார்த்தைகள் இருப்பதை கண்டறிந்தேன்.

 ஒரே உச்சரிப்பு மற்றும் ஒரே அர்த்தத்தை உடையவையாக அந்த வார்த்தைகள் இருந்தன.

அப்பாவை 'அபா' என்றும் வணக்கம் என்பதை 'வணக்காம்தா' என்று பாம்பு என்பதை 'பாயெம்' என்றும் சந்தோசம் என்பதை 'சந்துதம்' என்றும் ஏன் என்பதற்கு 'வேன்' என்றும் மனைவி என்பதை 'மனுரா' என்றும் கொரிய மொழியில் அழைக்கின்றனர்.

உரத்துக்கு 'உரம்' என்றும், கண்ணுக்கு 'நுகண்' என்றும், மூக்குக்கு 'கோ' என்றும், பல்லுக்கு 'இப்பல்', புல்லுக்கு 'புல்', கொஞ்சம் என்பதற்கு 'சொங்கும்' என கூறுகின்றனர்.

இதுபோல, உடலியல் செய்கைகளும் இரு மொழிகளுக்கிடையே ஒற்றுமையாக உள்ளன.

குழந்தைகளின் தலையை ஆட்டியபடி 'தோரி தோரி' என கூறுவதும் கைகளை தட்டிக் கொண்டு விளையாடுவதும் 'சா சா க்குங்' என குழந்தைகளை கொஞ்சுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

கொஞ்சுதல் என்ற வார்த்தை கூட 'கொஞ்சு' என்றே கொரிய மொழியில் உள்ளது.

வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால், மாவிலைத் தோரணத்தால் அலங்காரம் செய்வது தமிழக பண்பாடு.

நோய் கிருமிகளை அண்டாமல் தடுக்கும் சக்தியாக மாவிலை கருதப்படுகிறது.

இதுபோல, கொரியாவில் ஆண் குழந்தை பிறந்தால் சிவப்பு மிளகாய் தோரணமும், பெண் குழந்தை பிறந்தால் விறகு கரி தோரணமும் தொங்கவிடுவது வழக்கம். கெட்ட ஆவிகளை தடுக்கும் சக்தியாக அவை கருதப்படுகின்றன.

கிருஸ்து பிறப்பதற்கு முன்னால், ரோமாபுரி பேரரசு மற்றும் தெற்கு சீனாவுக்கு தமிழர்கள் வந்திருக்க கூடும்.

ஏனெனில், தென்னிந்தியா மற்றும் இலங்கை போன்ற பகுதிகள் அப்போதைய வர்த்தக மையங்களாக விளங்கின.

மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பாலமாகவும் அவை விளங்கின.

எனவே, கிழக்கு மார்க்கமாக தெற்கு சீனா, கொரிய தீபகற்பம், ஜப்பானிய தீவுகள் போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வந்துள்ளனர்.

கி.பி.முதலாம் நூற்றாண்டு வரையிலும் கொரியாவுக்கு திராவிட இனத்துக்கும் (குறிப்பாக தமிழர்கள்) இடையே தொடர்பு இருந்துள்ளது.

வெப்பமான சூழ்நிலை காரணமாக, வெள்ளை நிற ஆடை அணிவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால், குளிர் சூழ்நிலை இருந்த போதிலும் கொரிய மக்களும் வெள்ளை நிற ஆடைகள் அணிவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

இவ்வாறு ஜூங் நம் கிம் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.