30/09/2017

இந்தியா என்பது தேசியமா அல்லது ஒன்றியமா..?


1.  தேசியம் என்பது என்ன ?

 தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.

2.  தேசம் என்றால் என்ன ?

 சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.

3. தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா ?

இல்லை. தேசம் (Nation) வேறு.

நாடு (Country) வேறு.

ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம்.

ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு.

ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும்.

ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம்.

வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்.

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்...

ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்.

மேலும் அது கூறுகிறது..

பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும்.

சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation ) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல.

இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.

(Article 1(1) India, that is Bharat shall be a Union of States )..

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை படியுங்கள் உண்மை புரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.