30/09/2017

சித்தர் ஆவது எப்படி - 5...


சிவமான சத்திய சித்தரின் பண்புகள்
இந்த தலைப்பில் வரும் தகவல்கள் மிகவும் சிக்கலானதும், திகைப்பினை தரக்கூடியதுமானது... ஆனாலும் இந்த உண்மையினை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுலபமாக சித்தராக முடியும்....

முதலில் சித்தர்கள் தரிசனத்தை காண விரும்புவர்கள், அவரை எப்படி காண விரும்புகிறார்கள்.. தூல தேகத்திலா அல்லது சூட்சும தேகத்திலா ?..

இன்றைய கால கட்டத்தில் பலர் சித்தர்களை போல இருந்தாலும், அவர்களிடம் எதிர் பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து போனதினால், சித்தர்களை சூட்சும தேகத்திலே காண விரும்புகிறார்கள்.. அப்படி காண்பது ஒன்றே நம்ப தகுந்தாக உள்ளது...

முகநூல் பக்கங்களில் சித்தரை கண்டவர்கள் எல்லாம் அவர்களின் ஒளி தேகத்தை மட்டுமே படம் பிடித்து பதிவு செய்வார்கள்... சித்தரை பற்றி அறியாதவர்கள், வேறு உருவங்களை
படம் பிடித்து அவைகளை ஆவி என்று அநேக படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்..

இப்படி சித்தரா அல்லது ஆவியா என்ற குழப்பத்தில் பலர் இருந்து இருக்கிறார்கள்..

அவர்கள் சித்தரை பற்றி அறை குறையாக அறிந்தவர்களே..

இறைவன் தரிசனத்தை கண்டவர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்தையே சூட்சும தேக வடிவில் சற்று மங்கலான ஒளி வடிவில் கண்டு இருக்கிறார்கள்...

இப்படியாக கண்டு கண்டு களித்த மனிதர்கள் பரவசத்தில் ஆழ்ந்து போனார்கள்..

ஆனால் நேரடியாக எந்த உபதேசத்தையும், ஏதாவது பொருட்களையும் பெற்றதாக தெரிய வில்லை.. சிலருக்கு அப்படி நடந்து இருந்தாலும் அது மிகை படுத்திய ஒன்றாகவே முடிவில் இருந்து இருக்கிறது..

சிலருக்கு சித்தர் பழம் கொடுத்தார் என வைத்துக் கொள்ளுங்கள்.. அது எங்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தானே.. அதில் பரவசம் அடைய என்ன காரணம் ?

ஒரு விசித்திரமான பழமாக, உதாரணத்திற்கு பழத்தின் ஒரு பக்கம் ஆப்பிளாகவும் மறு பக்கம் ஆரஞ்சு ஆகாவும் விஞ்ஞானிகள் வியக்கும் வண்ணம் கொடுத்து இருந்தால், ஏதாவது அர்த்தம் இருக்கிறது...

ஆனால் அது போல் எதுவும் நடந்ததில்லை... இனியும் நடக்குமா என்பதிலும் ஐயமே உள்ளது..

மற்றொன்று, சித்தரின் விசித்திரத்தை கண்டவர்கள் அனைவரும் தனி தனியாகத் தான் கண்டார்களே தவிர கூட்டாக யாரும் காணவில்லை.. ஒருவர் அனுபவித்த அனுபவத்தை வேறு ஒருவர் உடன் இருந்து சாட்சியாக இருந்ததில்லை..

இந்த நிலையில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு...

அவர் இஷ்டப்பட்டு வரும் நேரத்தில் மட்டுமே பக்தன் கவனிக்க முடியுமே தவிர தான் நினைத்த நேரத்தில், ஏங்கும் நேரத்தில், ஒரு நாளும் தரிசனத்தை கண்டு களித்ததாக செய்திகள் எதுவும் இல்லை..

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் அது உலத்தை விட பெரியது என்றார் வள்ளுவர்.. காலத்தில் காட்சி தராத, உதவாத சித்தரால் என்ன பயன் என்று மனித குலம் சிந்திப்பது இல்லை...

ஏதோ நம்பிக்கையிலே மனித குலத்தின் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது; அதை ஏன் கெடுக்க முயற்சிக்க வேண்டும் என கேட்கலாம்..

மனிதனின் தவறான மீள முடியாத சிக்கி கொண்ட நிலையிலிருந்து மீள சில உண்மைகளை வெளிப் படுத்தும் பொழுது, சிக்குண்டதில் ஒடுங்கி போன நிலையில் இருந்து மனித குலம் மீள, சரியான வழி கிடைக்கலாம்...

உண்மைக்கு புறம்பான செய்திகளில் சிக்குண்ட இந்த மனித குலம் இதுவரை இந்த சித்தர்களிடமிருந்து என்ன பெற்றது ?..

ஞானத்தையா அல்லது அசாதாரமான பலத்தையா?...

முடிவில் மரணத்தை தவிர, அதையும் சமாதி என்ற கௌரவமான பட்டத்தை தவிர வேறு என்ன கிடைத்தது ?..

தனிப் பட்ட மனிதனுக்கு கிடைத்ததாக கேள்வி பட்டு இருக்கிறோமே தவிர ஒட்டு மொத்த மனித குலத்திற்கு என்ன செய்ய முடிந்தது ?..

காரணம் சித்தர்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு உள்ள மனிதகுலம் அத்தகைய மன கட்டமைப்பில் உள்ளவர்களையே அதாவது உடல் தோரணைகளில், உலக குடும்ப பந்தங்களில் இருந்து விலகி அன்பு என்பதையே என்னவென்று தெரியாதவர்களையே நம்மில் பெரும் பாலும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்..

அத்தகைய வேசதாரிகளிடம் இருப்பது, சோம்பலும், ஒழுக்கமின்னையும், போதை பொருள்களில் சிக்குண்டவர்களாய் ஆற்றல் அற்று ஆனால் மிக பெரிய ஆற்றல் உடையவர்கள் போன்ற நடிப்பும், நடமாடும் தூல தேக நடை பிணங்களாய், தங்கள் பிழைப்பு ஓட்ட பயமுறுத்தி வாழ்வதுமே நாம் கண்டு கொண்டு வருகிறோம்..

பயமுறுத்தல் என்பது மிக பெரிய ஆயுதமாக கையாண்டு, தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.. இது இன்றைய நிலை...

பின் சித்தர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம் ? பேரண்ட பேராற்றலை பெற்ற காரணத்தினால், ஆற்றல் மிக்கவர்களாய், எதையும் சாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்கள்..

பொருள் உதவிக்காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை..

யாருக்காகவும் தன் இயல் நடை உடை பாவனைகளை மாற்றி கொள்ளவேண்டிய அவசியம் இல்லை...

ஆற்றல் மிக்கவர்களாதலால் அன்பு என்ற மகா சக்தி உடையவர்களாதலால் உலக குடும்ப தொடர்புகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும் அவநிலை அவர்களுக்கு இல்லை..

உலகம் எத்தனை வஞ்சனைகள் செய்தாலும், எத்தனை தீங்குகள் செய்தாலும், தாய் உள்ளத்தோடு பொறுத்துக் கொண்டு, வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும், பாராபட்சமின்றி, வேண்டிய நேரத்தில் உதவக் கூடியவர்கள்..

இவர்கள் தன்னை தன் செயல்களை மறைத்துக் கொண்டு உலகிற்கு பலன் தரக்கூடியவர்கள்..

அரசாங்க பணத்தையே அள்ளி அள்ளி கொடுத்து தான் கொடுத்ததாக காட்டிக் கொள்ளும் விளம்பரதாரர்கள் அல்ல..

அன்பே உருவான இவர்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மிக மிக எளிமையானவர்கள்...

அதனால் தான் அப்படி இன்றும் வாழும் இவர்களை அடையாளம் காண முடியாமல், விளம்பர புகழ்ச்சி உலகில் சிக்கி கொண்ட மனிதன் தவிக்கிறான்...

உண்மையான சித்தர் பண்புகளை அறிந்து கொண்ட இன்றைய எந்த மனிதனும், சித்தராக விரும்பமாட்டான்..

காரணம் எங்கும் எதிலும் ஆதாயம் தேடும் நிலையிலேயே மனிதன் உள்ளதால் சத்திய சித்தராக விரும்புவதே இல்லை..

ஆனால் சத்திய சித்தர் பண்புகளே அந்த சித்தர்க்கு பிரபஞ்சம் பேரண்டம் தன் பேராற்றலை வழங்கும் என்ற இரகசியத்தை மனிதன் அறிவதில்லை..

அதனால் தான் அன்பின் ஆற்றலே எழுந்த மனிதன் மட்டுமே சித்தராக முடியும் என்ற பெரும் பதிவினை மனதில் கொண்டு, அன்பே சிவம் என்ற சத்திய வார்த்தையில் சிவமாகி நின்ற சத்திய சித்தர் வழிமுறைகளை ஆராய்ந்து சித்தராக முனைவோம்..

தூலதேகத்திலும் சித்தராக இருப்பவரே சூட்சும தேகத்திலும் இருக்கும் வல்லமையை, பேரண்ட பேரறிவின் துணையால் பெற்ற காரணத்தினால், கண்டம் விட்டு கண்டம் நகரும் ஆற்றலும் உடையவராக இருப்பார்...

அவர் ஒருவரே வேண்டிய நேரத்தில் துணையாய் வந்து நிற்பார்..

முதலையிடம் சிக்கிய யானை ஆதி மூலமே என்று அலறிய அக்கணமே வந்து உதவிய இறைவனை போன்று உதவும் வல்லமை உடையவராகவும் இருப்பார்..

வெறும் காட்சிகளை மட்டும் அளித்து காணாமல் போகும் மாயா தோற்றங்கள் கொண்ட சித்தரை போல் இல்லாமல், சத்திய சித்தராய் தேகம் உருவிலும், கண்டம் விட்டு கண்டம் இயங்கக் கூடிய சூட்சும சக்தியிலும் இருப்பவரே உண்மை சித்தர் ஆவார்..

இத்தகைய சித்தர் ஆகும் உளவுகள் உலகிற்கு நன்மை தரும் என்பதை மறக்காமல் இனி வரும் பகுதிகளை உற்று கவனிப்போமாக...

முதலில் கண்ட சித்தர் பிம்பங்கள் அனைத்தும் தனி பட்ட மனிதனின் மாயா மன தோற்றங்கள்.. இவைகளை முதன்முதலில் கண்டு ஏமாந்த மனிதன் இன்று வரை ஏமாந்து கொண்டே இருக்கிறான்..

கண்டேன் கண்டேன் என பரவச புலம்பலை தவிர வேறு ஒரு பலனை பெற இயலாதவனாய் இருக்கிறான்...

இவைகள் எல்லாம் நெருப்பு என்ற பூதத்திலிருந்து பிரிந்து வந்த வெளிச்சம் என்ற கழிவால் ஆனது...

ஆனால் நெருப்பு என்ற பூதத்தை முறையாக பயன் படுத்தி கனல் என்ற உயிர் ஆற்றலை பெறும் போது மட்டுமே சத்திய சித்தர் உருவாகிறார்.. அதற்கு சிவ கலப்பே உகந்த வழி..

சிவ கலப்பு என்பது ஒரு மதத்தை சார்ந்த சொல் அல்ல... அது ஒரு பயிற்சி..

புத்தி அறிவும் இணைந்து செயலாற்றும் உன்னத பயிற்சி.. இனி வரும் பகுதிகளில் அதில் கவனம் செலுத்தி காண்போமாக....

அகத்தியர், போகர், வள்ளலார், திருமூலர் சிவ வாக்கியர் அருணகிரி நாதர் போன்ற மகான்களை நாம் சித்தர்களாக போற்றி வணங்குகிறோம்...

இப்போது நாம் அவர்களை மேலே குறிப்பிட்ட சித்தர் கருத்தோடு பொருத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு, அவர்களை பற்றி தெளிவான கருத்தினை பின்னால் பார்ப்போமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.