30/09/2017

தமிழ்நாடு...


தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடையும் போது தமிழ்நாடு என்பது மெட்ராஸ் மாகாணமாக இருந்தது.

இப்போதைய கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளும் அடங்கிய விரிந்த நிர்வாகப் பகுதியாக மெட்ராஸ் மாகாணம் இருந்தது.

1956 -ல் இந்திய பாராளுமன்றம் மாநில மறுசீரமைப்பு சட்டம் ஒன்றை இயற்றியது.

அதன்படி மெட்ராஸ் உள்பட 14 மாநிலங்களும், அந்தமான் நிகோபார், டெல்லி உள்பட 6 மத்திய ஆட்சி பகுதிகளும் உருவாக்கப்பட்டன.

மாநில மறுசீரமைப்பு பரிந்துரை மீது 1956 மார்ச்சில் சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது.

அப்போது மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் க.பெ.சங்கரலிங்கனார்.

1956 செப்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமானது.

நவம்பர் முதல் தேதியில் இருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டன.

கூடலூர் பகுதி நீலகிரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இவ்வாறு தமிழ்பேசும் மாநிலமாக 1956 நவம்பர் முதல் தேதி புதிய மெட்ராஸ் மாநிலம் பிறந்தது.

பழைய மெட்ராஸ் மாகாணத்தில் தெற்கு கானரா, மலபார், நீலகிரி கோயமத்தூர், மதுரை திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு, மெட்ராஸ், சித்தூர், கடப்பா, அனந்தபூர், பெல்லாரி, கர்னூல், நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் என்று 26 மாவட்டங்கள் இருந்தன.

இவற்றில் தமிழ் பேசும் பகுதி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு புதிய மெட்ராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது.

அதில் மெட்ராஸ், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி என்ற 13 மாவட்டங்கள் இருந்தன.

1967 ஜூலை 18 - ந்தேதி மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1969 ஜனவரி 14 -ந்தேதி தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அனைத்து ஆவணங்களிலும் தமிழ்நாடு என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.