தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கடலோர மீனவ கிராமம் ஆகும். தாமிரபரணி ஆறு சங்கமிக்கும் இப்பகுதியில் கடற்கரையில் இருந்து கடலுக்கு படகுகள் எளிதில் செல்லும் வகையில் 2 தூண்டில் வளைவு பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று இரவில் இந்த தூண்டில் வளைவு பாலங்களின் அருகில் சுமார் 20–க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியவாறு கிடந்தன.
உடனே அப்பகுதி மீனவர்கள், மாலுமிகள் நாட்டுப்படகுகளில் சென்று அந்த டால்பின் மீன்களை கைகளால் பிடித்தும், கயிற்றால் கட்டியும் கடலுக்குள் இழுத்து சென்று ஆழமான பகுதியில் விட்டனர். ஆனாலும் அந்த டால்பின் மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியவாறு இருந்தன. சிறிது நேரத்தில் 4 டால்பின் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் மழையை பொருட்படுத்தாமல் இரவிலும் கரை ஒதுங்கியவாறு இருந்த டால்பின் மீன்களை மீனவர்கள் கடலுக்குள் கொண்டு சென்று விடும் பணியில் ஈடுபட்டனர். இதில், உயிரிழந்த 4 டால்பின்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கடற்கரையில் புதைக்கப்பட்டன.
வானிலை மாற்றம் காரணமாக டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புன்னக்காயலை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், டால்பின் மீன்கள் கூட்டமாக அணிவகுத்து செல்லக்கூடியவை. கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக டால்பின் மீன்கள், ஆழம் குறைவான கடற்கரை பகுதிக்கு கரை ஒதுங்கி இருக்கலாம். அவைகளை ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விட்டாலும், அவைகளால் நீந்தி செல்ல முடியாமல் மீண்டும் கரை ஒதுங்கி விடுகிறது. எனவே கரை ஒதுங்குகிற பெரும்பாலான டால்பின் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.