29/11/2017

பிறப்பின் இரகசியம்...


மனிதன்.. உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்..

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்.. இல்லையேல் நாம் சவம்..

உயிர் இருந்தால் தான் வாழ்வு.. உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவு தான்..

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்.. பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை.. உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்..

உடலைவிட உயிரே முக்கியமானது..

உயிர் உடலுடன் இருக்கும் போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி தலை கால் தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே..

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் தேவரகசியம். பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது..

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது. எல்லாம் ஜனிப்பதில்லை. எல்லோராலும் முடியாது..

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே.. இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது..

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டு பிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்..

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே.. இந்த பூமியில் தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்.. எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்து போயினர். இறந்து அவர்கள் போனது எங்கே?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே? பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம். உயிர் இன்றி உடல் இருந்தால் மண் தான்..

உயிர் தான் பிரதானம். உயிர் தான் பிறக்கிறது உடல் கொண்டு. உடலை விட்டு உயிர் பிரிவதே மரணம். பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்..

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே.. அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது..

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டு தான். நம் தாயின் தீட்டு தான் நாம். மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே..

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால் தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்..

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்..

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது. இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கே தான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்..

தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது. உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது.

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது. அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது..

இதுவே தேவரகசியம். எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று..

இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை..

உயிர் என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி. அவனே சித்தன்..

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே. 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி.. கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ஸ்டிரா மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு..

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம். அற்புதம். எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதி உன்னத செயலாகும்..

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான். தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே..

கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே..

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இது போன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டு விடுகிறான். என்னே அவனின் திருவிளையாடல்..

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்..

ஆனால் அறிவோர் உணர்வோர் வெகு சிலரே. எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன். அருங்கடல். எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான். மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது..

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்..

அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்..

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே..
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா..

அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு..

அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்..

அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவம்..

அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்..

ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்..

எல்லாமே அவன் செயலே..

அவனின்றி ஓர் அணுவும் அசையாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.