29/11/2017

தேனியில் பதினேழு வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்...


தேனியில் பதினேழு வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து தங்களது சிரமத்தை தெரியப்படுத்தினர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அவர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், "பொம்மிநாயக்கன்பட்டி வடக்கு காலனியில் கடந்த 17 வருடங்களாக குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம்.

இரவு நேரங்களில் வி‌ஷப் பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் மிகுந்த அச்சத்துடன் வாழ்கிறோம். குடிநீர் கிடைக்காமல் தனியார் தோட்டத்து கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். எனவே, எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

குள்ளப்புரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்கள் அளித்த மனுவில், "குள்ளப்புரத்தில் நாங்கள் விவசாயம் செய்து வந்த பகுதியில் தற்போது கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு குவாரி நடத்துபவர்கள், அதிகாரிகள் துணையுடன் விவசாயிகளை விவசாய நிலங்களுக்கு செல்ல விடாமல் பாதையை மறித்து இடையூறு செய்கின்றனர். எனவே, இந்த குவாரியை ரத்து செய்து, விவசாயிகள் விவசாய பணிகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறியிருந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.