29/11/2017

கேப்டன் சரஸ்வதி ராஜமணி...


சரஸ்வதி ராஜமணி. குழந்தை வயதில் காந்தியுடன் அஹிம்சை பற்றி விவாதம் செய்தவர். இளம் வயதில் INA உளவாளியாக பணியாற்றியவர். அதிகம் பேசப்படாதா பெண் சாதனையாளர்.

சரஸ்வதி ராஜமணி பர்மாவில் வசித்த பெரும் செல்வந்தரின் தமிழ்மகள். தன் 16 வயதில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னிடமிருந்த தங்கத்தையும், வைரத்தையும் நிதியாக நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு கொடுக்கிறார்.

இதை கேள்விப்பட்ட நேதாஜி அந்த நகைகளுடன் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் "விவரம் தெரியாத இளம் பெண் ஆர்வத்தில் நகையை கொடுத்துள்ளார், இதை திரும்ப வாங்கி கொள்ளுங்கள்" என்று கொடுக்கிறார். "இல்லை அது என் நகை, திரும்ப வாங்க முடியாது" ராஜமணி பதில் அளிக்கிறார்.

அவரது ஆர்வத்தை கண்ட நேதாஜி அவரை INAவின் உளவு பிரிவில் இணைத்து கொள்கிறார். இளம் வயதில் உளவாளியாகிறார். மணி என்ற பெயரில் ஆணாக உளவு பார்த்து ஒருமுறை ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் துப்பாக்கி தோட்டாவுடன் தப்பிக்கிறார்.

அதன் பின் நேதாஜியின் பெண்கள் படையணியில் முக்கியமானவராக அறியப்பட்டவர். சுதந்திரத்திற்கு பின்னும் நேதாஜி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் போராடுகிறார். டெல்லியில் அது சமந்தமான பேரணி என்றதும் உற்சாகமாக எங்களுடன் கிளம்பி வந்தார்.

90 வயதாகிறது. உடலில் முன்பிருந்த வலு இல்லை. குடும்ப உறவுகள் அதிகம் இல்லை. மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படவுமில்லை. அரசாங்கத்தின் பென்சனில் வாழ்கிறார்.


சென்னையில் சுனாமி வந்த போது சேர்த்து வைத்த பென்சன் தொகையும் நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார்.

அவரை சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்திருக்கிறார்.

இந்தி, ஆங்கிலம் சரளமாக பேசுகிறார். கையெழுத்து கேட்பவர்களுக்கு தமிழில் கவியெழுதி கையெழுத்திடுகிறார்.

முதுமை, வறுமை, தனிமை, வெறுமை எதுவும் அவரை கலங்க வைக்கவில்லை.

ஆனால் நேதாஜி பற்றியும் அவர்களது விடுதலை போராட்டம் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது அழுகிறார்.

ஆம் ஒரு உண்மையான போராளிக்கு அது தானே செல்வம், அது தானே இழப்பு.

இந்தியா தன் புதிய உலக அழகியை கொண்டாடிக் கொண்டிருந்தது. எனக்கு அம்மா சரஸ்வதி ராஜமணி அழகியாக தெரிந்தார்.. வாழ்க அவரது தொண்டு.. வளர்க நேதாஜி புகழ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.