06/06/2018

தரமற்ற முறையில் நடைபெறும் உளுந்தூர்பேட்டை பாதாள சாக்கடை திட்டம்...


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து தண்ணீர் தேங்கி கழிவுநீர் குடிநீரோடு கலப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிப் பகுதிக்கு பாதாளசாக்கடைத் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்காக 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளும் நடைபெற்று வருகிறது. நகரின் பல பகுதிகளில் இதற்காக கழிவுநீர் தொட்டிகள் கட்டப்பட்டதோடு, அனைத்து தெருக்களையும் இணைக்கும் வகையில் குழாய்களும் பதிக்கப்பட்டு வருகின்றன.

60 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பணிகள் அனைத்தும் தரமற்ற முறையில் நடந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் புதிதாக அமைக்கப்பட்ட் கழிவுநீர் தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் குழாய்கள் பதிக்கப்பட்ட இடம் மழை காரணமாக ஆங்காங்கே மண்ணில் புதைந்துள்ளதாகவும் தரமற்ற குழாய்கள் பல இடங்களில் உடைந்துவிட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக பல இடங்களில் குழாய் பதிக்க பள்ளங்களைத் தோண்டி, பாதியிலேயே பணிகளை நிறுத்திச் சென்றுள்ளனர்.

அந்தப் பள்ளங்களில் மழை நீர் தேங்கி, அவற்றுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறும் குடியிருப்புவாசிகள், குடிநீரோடும் அவை கலப்பதால் நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பணிகளை ஆய்வு செய்து தரமாகவும் விரைவாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டை மக்கள் கேட்டுக்கொண்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.