08/06/2018

குப்பையில் கிடந்த குழந்தைக்கு தாய் பால் கொடுத்த போலீஸ்- பெங்களூர் சிட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்...


தாய்மையை போற்றுவோம்...

பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் குப்பை தொட்டி ஒன்றில் கடந்த 2-ம் தேதி அதிகாலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. எலக்ட்ரானிக் சிட்டி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் நாகேஷ் தலைமையிலான போலீஸார் அக்குழந்தையை பத்திரமாக மீட்டன‌ர். பிறந்து ஓரிரு மணி நேரங்களே ஆன சிசுவை போலீஸார் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்தனர்.

அதே வேளையில் குழந்தையின் பெற்றோர் யார் என அப்பகுதியில் விசாரித்து வந்தனர். போலீஸாரால் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அக்குழந்தையை எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது உதவி ஆய்வாளர் நாகேஷ், “இனி இந்தக் குழந்தை அநாதை அல்ல, அரசு குழந்தை. இதனை குறிக்கும் வகையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமியின் பெயரை, இந்த குழந்தைக்கு சூட்டுகிறேன். இந்த குமாரசாமியை அரசு கவனித்துக் கொள்ளும்''என அறிவித்தார்.

அடுத்த சில நிமிடங்களில் குழந்தை பசியின் காரணமாக‌ அழ ஆரம்பித்தது. இதையடுத்து போலீஸார் பாலை சுட வைக்க பாத்திரங்களைத் தேடிக்கொண்டிருந்தனர். குழந்தை தொடர்ந்து அழுததால் இரக்கப்பட்ட பெண் காவலர் அர்ச்சனா, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். மேலும் குழந்தையை பார்க்கும்போது தன் குழந்தையைப் போல இருந்ததாக அர்ச்சனா நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார். இவருக்கு 3 மாதத்துக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.