31/07/2018

சிலுவை யுத்தங்கள் − 10...


இவ்வாறு சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பீற்றர் சன்னியாசிக்குப் பின்னால் பதினைந்தாயிரம்
சீடர்கள் இணைந்து கொண்டனர்.

இவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.

இவனைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் தமது பொருளாதார நிலைமையை சீர்செய்து கொள்ளுதல் அல்லது புனிதப் போரில் மரணிப்பது என்ற எண்ணத்தில் சிலுவை வீரர்களுடன் இணைந்து கொண்டனர்.

உண்மையில் இந்த ஏழை விவசாயிகள் இணைந்து கொள்வதற்கு அவர்களது மோசமான பொருளாதார நிலையே காரணம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அத்துடன் இப்போரில் மரணிப்பது பாவங்களை அழிப்பதோடு சுவனத்துக்குக் கொண்டு செல்லும் என்று அவர்களது மத நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தை அவர்கள் முழுமையாக நம்பினர்.

இவ்வாறு சூறாவளிப் பேச்சாளர் தனது பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது "முப்ஸில்" என்ற புனைப்பெயருடைய 'வால்டர்' என்ற பாப்பரசரின் சீடர்களுள் ஒருவன், சிலுவைப் போராட்டத் தலைவனாகத் தோன்றினான்.

உடனே அவன் அவசரமாகச் சென்று, போரை ஆரம்பிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த பிரஞ்சுக்காரா்களைத் தனது தலைமையில் அழைத்துக் கொண்டு; ஹங்கேரியாவைச் சென்றடைந்தான்.

பின்பு உரோாமப் பேரரசின் எல்லையில் அமைந்துள்ள பெல்கிரேடை அடைந்தான்.

அவனது அப்படை அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பகுதி மக்களின் மீது அடாவடித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டதோடு அவர்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்தது. இது இவ்வாறிருக்க..

உரோாமப் பேரரசனினால் இந்த சிலுவை வீரா்கள் வரவேற்கப்பட்டனர்.

இந்தப் படையின் ஏற்பாட்டு ஒழுங்கீனமும்,யுத்தம் பற்றிய அடிப்படை அறிவற்ற தன்மையும் வெளிப்படையாகவே விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டத்தில் கி.பி.1096ம் (ஹி. 489)ஆண்டு பீற்றர் சன்னியாசியுடைய படையும் வந்து சேர்ந்து கொண்டது.

ஏழை மக்களைக் கொண்டமைந்த, ஒழுங்கும் கட்டுப்பாடுமற்ற இப்படையினால் தனது நாட்டுக்கும் குடிமக்களுக்கும் ஏற்பட்ட இன்னல்களைச் சகிக்க முடியாத உரோம அரசன் சின்னாசியாவுக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு உதவி புரிந்தான்.

சின்னாசியாவில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த முஸ்லிம் சிற்றரசான ஸல்ஜூக்கிய ஆட்சியின் கீழிருந்த பகுதிகளுக்குள் புகுந்து நூற்றுக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததோடு, வீடுகளையும் தேவாலயங்களையும் கொள்ளையடித்தனர்.

ஆண்−பெண், சிறுவர்−சிறுமியர், வயோதிகர்−குழந்தைகள் என்ற பேதமின்றி தமது கண்ணில் தென்பட்ட அனைவரையும் கொன்று குவித்தனர்.

பிரஞ்சு வரலற்றாசிரியரான Michaud கூறுவது போல, "இயற்கையே நடுங்குமளவுக்கு அநியாயங்கள் புரிந்தனர்" என்று குறிப்பிடுவது பொருத்தமானது.

இவ்வாறு பல அட்டூழியங்களைச் செய்து பல்லாயிரக்கணக்கான  முஸ்லிம்களின் உயிரைக் குடித்த பீற்றர் சன்னியாசியும் வால்ட்டரும் இணைந்து மேற்கொண்ட இப்பொதுப் படையெடுப்பு பிற்காலத்தில் இ்ன்னும் பல படையெடுப்புக்களுக்கு வழிவகுத்தது.

இன் ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவில் முதல் சிலுவை யுத்தத்தின்  பக்கங்களை பார்ப்போம்.

- தொடரும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.