03/08/2018

இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே...


கடந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.
இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

ஆனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை..

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.

பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.

பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டு பிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.

ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது. (மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்).

உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.

அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.