03/08/2018

இன பற்று இழிவானதா?


இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது இனப்பற்று..

ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை... இன உணர்வு என்றுதான் குறிப்பிடுகிறார்கள்..

மேடையில் மார் தட்டுபவர்கள் கூட இன உணர்வு என் இரத்தத்திலேயே ஊறியது என்றுதான் முழங்குகிறார்கள்.

அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று.

இனம், தமிழ், தமிழன் என்று பேசுவதெல்லாம் இன்று அநாகரிகமாகி விட்டது. இப்படிப் பேசுபவர்களையெல்லாம் பிற்போக்குத்தனம் உடையவர்களாக, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக, இழிவானவர்களாகப் பார்க்கிறது இன்றைய தமிழ்நாட்டுச் சமுதாயம்.

குறிப்பாக இளைஞர்கள், அதிலும் பெருநகர இளைஞர்கள் பலர் இன்று இன உணர்வு பற்றி இப்படித்தான் நினைப்பு கொண்டிருக்கிறார்கள்.

இன உணர்வு என்பதும் ஏதோ சாதி உணர்வு போன்ற ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு எனவும் கருதுகிறார்கள்.

ஆனால் தங்களைத் தவிர வேறு யாராவது இந்தியாவில் இப்படிக் கருதுகிறார்களா என்று தமிழர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆந்திரர்களோ, வங்காளர்களோ, கன்னடர்களோ, காஷ்மீரிகளோ யாராவது இப்படி நினைக்கிறார்களா?

முன்னாள் இந்தியப் பிரதமர் கூடத் தாடியும் தலைப்பாகையுமாய் இன்றும் தன் இன அடையாளத்தோடுதானே காட்சியளித்தார்..

சீக்கியர் சீக்கியராகவும், மராத்தியர் மராத்தியராகவும், குஜராத்தியர் குஜராத்தியராகவும் இருந்தாலெல்லாம் கெட்டுவிடாத இந்திய ஒருமைப்பாடு தமிழர் தமிழராக இருந்தால் மட்டும் கெட்டுவிடுமா என்று தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி இந்தியாவில்தான் என்றில்லை. உலகில் எந்த இனத்து மக்களும் தங்கள் இன அடையாளத்தை ஒருபொழுதும்
எதற்காகவும் கைகழுவுவது இல்லை. வெளிநாட்டுத் தமிழர்கள் உட்பட..

இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால் உலகத்திலேயே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தவிர மற்ற எல்லாருமே குறுகிய மனப்பான்மை படைத்தவர்களா?

மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர் இன அடையாளங்களோடு வாழும்பொழுது தமிழர்கள் மட்டும் தங்களுடைய இன அடையாளங்களைக் வெறுப்பது அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாக, அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக ஆகாதா என்பதை ஒவ்வொரு தமிழரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு மொழி, பண்பாடு, வரலாறு போன்றவை இருக்கின்றன.

இனம் என்கிற ஓர் அடையாளத்தை நாம் புறக்கணிப்பதால் பெருமைக்குரிய இத்தனை அடையாளங்களையும் இழக்கிறோம்.

கூடவே நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள் எனப் பல அறிவுசார்ச் சொத்துகளையும் இழக்கிறோம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி முதலான பதினெட்டு விளைபொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியபொழுது அவற்றையெல்லாம் வழக்காடி மீட்க முடிந்ததே இங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த முன்னோர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைதாம் அவை என்பதை நிரூபிக்க முடிந்ததால் தான்.

அப்படி நிரூபிக்க முடிந்ததே, இன்றும் தம் இனப் பழக்கவழக்கங்களையும் அடையாளங்களையும் துறக்காத மக்கள் இங்கு இருப்பதால்தான்.

எனவே இனம் என்பது வெறும் குழு அடையாளத்தைத் தருவது மட்டும் இல்லை. கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்களோ, எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்களோ அந்த அறிவுசார்ச் சொத்துகளுக்கெல்லாமான வாரிசு உரிமையை நமக்குத் தருவதும் கூட!

அது மட்டும் இல்லை. இனம் என்பது இந்நாளில் ஒரு பன்னாட்டு அடையாளம் (International Identity). எல்லா இனத்து மக்களும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் குழு அடையாளமாகவும்தான் இருந்தன.

ஆனால் எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட இந்த உலகமயமாக்கல் காலத்தில் (Globalisation Era) நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தான் ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளமாக விளங்குகின்றன!

அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ளவர்களுக்கு இன அடையாளம் என்பது எந்தக் காலத்திலும் இன்றியமையாதது.

ஏனென்றால் உலகில் மற்ற நாடுகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டுக்கென்று மொழி, பண்பாடு, உணவுமுறை, ஆடைமுறை, வரலாறு முதலானவை இருக்கின்றன.

ஆனால் இந்தியாவுக்கு அப்படி இல்லை. இங்குள்ள பதினான்குக்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும், வரலாறும் தான் இந்தியாவின் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாம்.

மற்றபடி இந்தியாவுக்கென்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது.

எனவே மற்ற நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த இன அடையாளங்களை இழந்தாலும் அவர்கள் வாழும் நாட்டுக்கென்று இருக்கும் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணி அவர்களின் அடையாளமாக நிலைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியர் ஒருவர் அவ்வாறு தன் தாய்மொழியையோ இன அடையாளத்தையோ மறந்தால் அவர் பன்னாட்டு அளவில், சொந்த அடையாளம் (International Self Identity) எதுவுமே இல்லாத ஒருவராகத்தான் ஆகி விடுவார்.

தனித்தன்மை பேணுதல் (Character Maintenance) என்னும் பெயரில் நடை, உடை, பாவனை, தோற்றம், பேசும் முறை, சிந்திக்கும் முறை போன்ற சிறு சிறு அடையாளங்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பன்னாட்டு அடையாளமாகத் திகழும் இனத்தையும் மொழியையும் விட்டுக் கொடுக்கலாமா?

தமிழினமே  சிந்தித்து விழித்தெழு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.