29/08/2018

ஓணம் பண்டிகையும் தமிழர் அறிவியலும்...


இந்நாள் மலையாளிகள், முன்னாள் சேர-தமிழர்களின் விழா ஓணம்...

தமிழர்களின் திருவிழா என்றாலே அது வானியல் திருவிழா தான். ஓணமும் ஒரு வானியல் திருவிழாவே.

ஓணம் பற்றி சொல்லப்படும் வரலாறு...

மகாபலி என்ற அசுர குல (அசுரன் அப்படின்னாலே தமிழன் தான். பலி-பலம் பொருந்திய வலிமையானவன்; மகாபலி, பாகுபலி - மிகுந்த பலமுடையவன்) மன்னன் நல்லாட்சி செய்தவர். இந்த நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்க நினைத்தார் விஷ்ணு என்ற விண்ணவன். 

விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து வந்து அரசன் மகாபலியிடம் தனக்கு 3 அடி நிலம் தேவை என கேட்டார். 3 அடி நிலம் தானே என தன் குரு சுக்ர ஆச்சாரியாரின் சொல்லையும் மீறி சரி என்றார் மன்னர். உடனே முழு உருவம் எடுத்த விஷ்ணு ஒரு பாதத்தை விண்ணிலும், மறு பாதத்தை பூமியிலும் வைத்து மூன்றாவது அடி வைக்க இடம் கேட்க, மன்னன் தன் தலையையே கொடுத்தார்.

(கெளரவம் திரைப்படத்தில் பெரியவர் சிவாஜி தனக்குப் போட்டி வக்கீலான இளைய சிவாஜியை நினைத்து பாடும் பாடலில் இந்த வரலாறும் சொல்லப்படும். 
அந்தப்பாடல்: நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?)

மன்னரின் தலையில் பாதம் வைத்து  பாதாள உலகம் செல்லுமாறு அழுத்தினார் விஷ்ணு.

தன் நாட்டு மக்களை நேசிப்பதாக மன்னர் மகாபலி சொல்லவே விஷ்ணுவும் சரி ஒவ்வொரு வருடமும் வந்து விட்டு போ என்றார்.

இந்த நல்ல மன்னரை வரவேற்கவே பூக்கோலம் கொண்டு ஓணம் திருவிழா என விழாக் கொண்டாடுகின்றனர் சேர மக்கள்.

இந்த வரலாறுக்குப் பின் இருக்கும் தமிழர் வரலாறு.

கி. மு 10,000 ஆண்டளவில் சிந்துவெளி முதல் கேரள பகுதி வரை ஆண்ட தமிழின காலக்கட்டத்தில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு சென்று வருவது சாதாரண விசயமாக இருந்தது. அதனால் தமிழர் உலகப்பரப்பை 7 பகுதிகளாக, உலகங்களாக பிரித்து வைத்திருந்தனர்.

பாதாளம் அல்லது படு பாதாளம் என்று இன்றும் நாம் சொல்லும் வார்த்தையின் பொருளும் காலடியில் இருக்கும் நிலத்தின் செங்குத்தான பிளவு, மிக ஆழமான குழி என்பதே. தமிழக பகுதியில் ஒரு பெரிய குழியை தோண்டிக்கொண்டே சென்றால் பூமியின் அடுத்த பகுதியில் நாம் வெளியேறும் இடம் மாயன்கள் (தமிழர்கள்) வசித்த அதே தென், மத்திய அமெரிக்கா பகுதி தான்.

ஆக பாதாளம் என்று மிகச் சரியாக கணக்கிட்டு தமிழர்கள் சொன்ன பகுதிக்கு சென்று வந்த தமிழ் மன்னன் தான் மகாபலி மன்னன்.

(மாயன்கள் பற்றி விளக்கமாக விரைவில் இன்னொரு பதிவில் காண்போம்.)

இந்த வரலாறுக்குப் பின் இருக்கும் தமிழரின் வானியல் அறிவியல்

சேர தமிழர்கள் நிலா சிரவன நட்சத்திரத்திலும், சூரியன் சிங்க நட்சத்திரக்கூட்டத்திலும் இருக்கும் நாளில் ஓணம் கொண்டாடுகிறார்கள்.

பழந்தமிழர் குமரிக்கண்ட அழிவைக் கணக்கில் கொண்டு (கி. மு. 10,000 ஆண்டளவில்) துவங்கப்பட்ட "கொல்ல வருஷம்" என்று இன்றும் அந்தக் கோர நிகழ்வை நினைவு கூர்கிறார்கள் அந்த சேர மலையாளிகள்..

சங்க காலத்தில் தமிழர்களின் திருவிழா இந்த திருவோணம்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், பாண்டிய மக்கள் திருவோணத்தை பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

"கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

தமிழரின் 10 நாள் திருவிழா :

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.

அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.

நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர்.

ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

ஆறாம் நாள் திருக்கேட்டை (திரிக்கேட்டா) , ஏழாம் நாள்மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

இது பற்றி மேலும் விளக்கம் காண:

பழந்தமிழர்கள் வருடக்கணக்கை ஆவணியில் (ஆகஸ்ட்-செப்டம்பரில்) வரும் சம பகல்-இரவு (Autumnal Equinox) நாளினைக்கொண்டும் தொடங்கி இருக்கிறார்கள்.

மேற்கத்திய வானியலில் (Aquila- பறவை) நட்சத்திரக்கூட்டத்தில் (தமிழில் அக்கிலா என்பதும் பறவையைக் குறிக்கும் சொல். காண்க:) அல்டைர் (Altair) என்றழைக்கப்படும் மைய நட்சத்திரத்தின் இரு புறமும் இரண்டு நட்சத்திரங்கள் காம்மா, பீட்டா என அழைக்கப்படுகிறது.

இந்த அல்டைர் நட்சத்திரத்திற்கு தமிழர் வைத்த பெயர் திருவோணம். திருவோணம் நட்சத்திரம் சிரவனா என்றும் அழைக்கப்படுகிறது.

27 நட்சத்திரக்கூட்டங்களில் 2 நட்சத்திரங்கள் தான் திரு என்ற அடைமொழி பெறுகிறது. ஒன்று திருவாதிரை (Betelgeuse), மற்றொன்று இந்த திருவோணம் (Altair ).

1. காம்மா, பீட்டா இரண்டு துணை நட்சத்திரங்களும் சம அளவில் நிலை நிறுத்தும் தராசு போன்று செயல்படுவதைக் குறிக்கிறது.

2. மகாபலி மன்னனும் தன் குருவின் பேச்சைக்கேட்டிருந்தால் தூர தேசத்துக்கு செல்ல வேண்டி இருக்காது என்றும் பொருள் குறிக்கிறது.

3. சிரவண நட்சத்திரம் என்ற சொல்லின் சமசுகிருத பொருளும் கேட்டல் என்பதையே குறிக்கும். காண்க:

4. காந்தி அடிகளை பாதித்த இரண்டு நாடகங்களில் ஒன்றான சிரவண நாடகத்தின் கருத்தும் கேட்டல் என்பதையே குறிக்கும். (இன்னொரு நாடகம் அரிச்சந்திரன்).

5. அந்த நாடகத்தில் உடற்குறையுள்ள பெற்றோரை இருபக்க கூடையில் சுமந்து சென்ற சிரவண என்ற அவர்களின் ஒரே மகன் பெற்றோருக்கு தண்ணீர் தர குளத்தில் இறங்கியபோது இராமனின் தந்தை தசரத அரசன் ஏதோ விலங்கு என்றெண்ணி அம்பெய்தி கொல்ல, அவனின் பெற்றோர் தசரத மன்னனுக்கு சாபம் விடுக்கின்றனர்: மகனின் பிரிவால் வருந்துவார் என்று. அதன் பிறகே பிறந்த இராமன் வனவாசம், தசரதனுக்கு பிரிவு வலி. காண்க:

இரண்டு நட்சத்திரங்களும் (காம்மா, பீட்டா) காலத்தால் முந்தைய, அழிவு நோக்கிய நட்சத்திரங்கள். மைய நட்சத்திரமோ (அல்டைர் அ  திருவோணம் அ சிரவனா) பிரகாசமானது, காலத்தால் பிந்தியது.

இப்படி தமிழரின் வானியல் அறிவு பல பழங்கதைகளாய், அறிவுரையாய், வரலாறாய், திருவிழாக்களாய் உருமாறி இருக்கிறது.

முன்னாள், இந்நாள் தமிழர்கள் அனைவருக்கும் திருவோண நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.