மெட்ராசுக்கும் பாரீசுக்கும் என்ன தொடர்பு?
பிரெஞ்சுக்காரர்களுடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரிட்டீஷார் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு பிரான்சின் தலைநகரத்தின் பெயர் வர எப்படி அனுமதித்தார்கள்?
சென்னையின் மையப் பகுதியான பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பாரிமுனையைக் கடக்கும் போது இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம்.
இந்த கேள்விக்கான விடையை நான் தேடிய போது, சற்றும் எதிர்பாராத ஒரு பதில் கிடைத்தது.
பாரீசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒரு சுவாரஸ்யமான மனிதர்தான் இந்த பெயர் வரக் காரணம் என்றும் தெரிய வந்தது.
தாமஸ் பாரி என்ற அந்த மனிதர், இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக 1788ஆம் ஆண்டு மெட்ராசுக்கு வந்தார்.
கிழக்கு இந்திய கம்பெனியாரிடம் அனுமதி பெற்று தனி வர்த்தகராக தம்மை பதிவு செய்து கொண்ட பாரி, பல்வேறு பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டார். ஆனால் அவரின் முக்கியமான வியாபாரம் வட்டிக்குப் பணம் கொடுப்பது.
வட்டி என்றால் சாதாரண வட்டி அல்ல 12.5% வட்டி, இதுதவிர 1% கமிஷன் வேறு. ஆனாலும் அவரிடம் வட்டிக்கு வாங்க நிறையப் பேர் இருந்தார்கள்.
திப்பு சுல்தான் போன்றவர்களோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதால், நிறைய இளவரசர்களும், கிழக்கிந்திய அதிகாரிகளும் போர்த் தேவைகளுக்காக பாரியிடம் கை ஏந்தினார்கள். பாரியின் வியாபாரமும் ஓஹோவென்று இருந்தது.
இதனால் 1792இல் பாரி சொந்த அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். இந்த அலுவலகம் பல்வேறு துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
திடீரென வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட, அனைத்தையும் விட்டுவிட்டு 1796இல் கர்நாடக நவாப்பின் கருவூல அதிகாரியாக சிறிது காலம் பணி புரிந்தார்.
பின்னர் 1800இல் கிளைவ் பிரபு ஆளுநராக வந்த பிறகு மெட்ராசில் வர்த்தகர்களின் நிலை மாறியது.
கிழக்கிந்திய கம்பெனிக்கு தொடர்பில்லாத தனி வர்த்தகர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி, கோட்டையைவிட்டு வெளியேற்றினார் கிளைவ்.
அப்போது தான் தாமஸ் பாரி, இப்போது பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பகுதிக்கு வந்தார்.
ஒரு பக்கம் சீற்றம் காட்டும் கடல், மறுபுறம் உள்ளூர் மக்கள் தங்கியிருக்கும் கருப்பர் நகரம் என அதிகம் பேர் விரும்பாத இடமாக அது இருந்தது. அங்கு வாலாஜா நவாப்பிற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தது. அதைத்தான் வாங்கி அலுவலகமாக மாற்றினார் பாரி.
1817ஆம் ஆண்டிலேயே அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அடுக்குமாடிக் கட்டடமாக அது இருந்தது.
மெல்ல வியாபாரத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த பாரி, நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார்.
இந்த சூழலில் தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார் ஜான் வில்லியம் டேர் (John William Dare).
பாரி கட்டடத்தின் பெயர் 'டேர் ஹவுஸ்' என்று இருப்பதற்கு இந்த டேர்தான் காரணம்.
கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய அறிவு டேருக்கு நிறைய இருந்ததால், பாரியும் இவரும் சேர்ந்து கப்பல் தொழிலில் நங்கூரம் பாய்ச்சி பணம் பார்த்தனர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக 1823இல் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்தார் பாரி. அவரின் வழியனுப்பு விழாவுக்காக உள்ளூர் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தங்க டீ கப்பை தயார் செய்தனர். ஆனால் பாரி திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதால், அவர் ஊருக்கு போகாவிட்டாலும் தயார் செய்த கப் வீணாகிவிடக் கூடாது என்று அந்த கோப்பையை 1824 பிப்ரவரி மாதம் அவருக்கு பொதுமக்கள் வழங்கினர்.
இந்தளவு மக்கள் மனதில் இடம் பிடித்ததற்கு பாரியின் மனிதாபிமானமும், ஏழைகளுக்கு அவர் செய்த உதவிகளும் தான் காரணம்.
இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்த பாரியால், தனது பரலோகப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.
விடைபெறும் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அதே 1824ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தொழிற்சாலை ஒன்றை ஆய்வு செய்யப் போன போது காலரா வந்து உயிரிழந்தார் பாரி.
உல்லாசமாக வாழ்க்கை நடத்திய தாமஸ் பாரி இரக்க மனசுக்காரரும் கூட. அவர் எழுதி வைத்த உயிலே, இதற்கு அத்தாட்சி.
தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி வேலைக்காரர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தவர் பாரி.
தன் வீட்டில் வளர்க்கப்பட்ட கண் பார்வையற்ற மேரி என்ற பெண்ணிற்கு மாதம் 11 ரூபாயும், செல்லா என்ற வேலைக்காரப் பெண்மணிக்கு மாதம் தலா 5 ரூபாயும், மற்ற வேலைக்காரர்களுக்கு மூன்ற மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமது உயிலில் எழுதியிருந்தார்.
தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மேரி ஆன் என்ற பெண்மணிக்கு மாதம் 5 ரூபாயும், உயில் எழுதப்பட்ட தேதியில் இருந்து 9 மாதத்திற்குள் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு 50 ரூபாயும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பாரி உயிலில் குறிப்பிட்டிருந்தார்.
பாரியின் மறைவுக்கு பின்னர் அவரது தொழில்களை டேர் பார்த்துக் கொண்டார்.
1838இல் குதிரை மீதிருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு அவரும் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தார்.
ஆனால் இரு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை.
எங்கிருந்தோ வந்து, சென்னை வீதிகளில் அலைந்து திரிந்து, மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம் பிடித்து விட்ட அந்த இருவரையும், பாரிமுனையும், அங்கிருக்கும் டேர் ஹவுசும் இன்றும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.
தாமஸ் பாரியின் உடல் கடலூரில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட தேவாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது.
முருகப்பா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பாரி நிறுவனம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அமெரிக்க தூதரகமும் சிறிது காலம் இந்த பாரி கட்டடத்தில் இருந்து இயங்கி இருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.