02/09/2018

சேலம் 8வழிச் சாலை உண்மைகள்...


சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அதன் சாதக-பாதகங்களை உரிய துறைசார்ந்த நிபுணர்கள் உதவியுடன் பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், இந்த திட்டம் குறித்து அரசுத் தரப்பில் அளிக்கப்படும் தகவல்கள் குறையுடையதாக இருப்பதும், இத்திட்டம் பெரும்பாலான மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிராக இருப்பதையும் கண்டறிந்தோம். எனவே இந்த திட்டத்தை எதிர்த்து ஒரு சட்டப்போராட்டத்தை துவக்கத் திட்டமிடப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பொதுப்பயன்பாட்டுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம் (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) என்று இந்த சட்டத்திற்கு பெயரிடப்பட்டது. பொதுப்பயன்பாட்டுக்கு தங்கள் நிலத்தை கொடுக்கும் மக்களுக்கான உரிமைகளை, மறுவாழ்வை ஓரளவுக்கு உத்தரவாதம் செய்யும் இந்த சட்டத்தில் சில விதிவிலக்குகள் அதன் பிரிவு 105இல் கொடுக்கப்பட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை சட்டம், இந்திய அணுசக்தி சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்களின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்படும்போது மேற்கூறிய நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டத்தின் கூறுகள் பொருந்தாது என்பதே அந்த விதிவிலக்கு.

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் கீழேயே தொடங்கப்பட்டது. எனவே இந்த திட்டத்திற்கான நிலத்தை அளிப்பவர்களுக்கு, “நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம்” வழங்கும் பாதுகாப்புகள் கிடைக்காது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்தோம்.

எனவே, “நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம், 2013” சட்டத்தின் பிரிவு 105ஐ செல்லாதென அறிவித்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பொறியாளர் கோ. சுந்தர்ராஜன் பெயரில் வழக்கு (W.P. No. 15889/2018) பதிவு செய்யப்பட்டது.

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான். இந்த வழக்கு மனுவின் நகலும், இத்திட்டம் குறித்து எங்களிடம் இருந்த ஆவணங்களும் அதைக் கேட்ட அனைத்து நண்பர்களுக்கும் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் திரு. சத்தீஷ் பெயரில் ஒரு வழக்கு (W.P. No. 16961/2018)  பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. அன்புமணி பெயரிலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் காவல்துறை அத்துமீறுவதை குறிப்பிட்டு மூத்த வழக்குரைஞர் பொ. ரத்தினம் அவர்களும் ஒரு வழக்கை அவரது பெயரிலேயே பதிவு செய்தார். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்படலாம்.

இந்த அனைத்து வழக்குகளும் நேற்று (21.08.2018) மதியம் 2.15 மணி அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தபடி பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்திருந்த வழக்கைமட்டும் தனியாகப் பிரித்து நேற்று விரிவாக விவாதிப்பது என்றும், மற்ற வழக்குகளை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பது என்றும் நீதிபதிகள் தீர்மானித்தனர்.

இதன் அடிப்படையில் அனைத்து வழக்குகளின் நிலையை பதிவு செய்து ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். இந்த உத்தரவின் 16வது பத்தியில், “இத்திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலத்திலிருந்து அதன் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்படக்கூடாது” என்று உத்தரவிட்டனர். அப்போது மத்திய அரசின் துணைத்தலைமை வழக்கறிஞர் குறுக்கிட்டு, “இத்திட்டத்திற்கு தடை விதிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இல்லை. நில உரிமையாளர்களை சட்டவிரோதமாக அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்ற தடைவிதிக்கிறோம்” என்று தெளிவு படுத்தினர். இந்த உத்தரவு எந்த ஒரு வழக்கிற்காகவும் தனியாக பிறப்பிக்கப்படவில்லை. பொதுவான ஒரு உத்தரவாகவே பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ந்த வழக்கின் விரிவான விசாரணை தொடங்கியது. மூத்த வழக்கறிஞர் மு. இராதாகிருஷ்ணன் தமது விரிவான வாதத்தை தொடங்கினார். கடந்த 2013ம் ஆண்டில் கொண்டுவந்த “நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம் (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013)” சுய முரண்பாடுகளைக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒரு குடிமகனுக்கு உரிமையான நிலத்தை கையகப்படுத்தும் நிலத்தை எந்த திட்டத்திற்கு பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வது அரசாங்கம். இந்நிலையில் அரசாங்கம் முடிவு செய்யும் ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும் என்பதும், வேறு சில திட்டங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்பதும் அரசியல் சட்டக்கூறு 14 வலியுறுத்தும் சமத்துவ உரிமைக்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த புதிய சட்டத்தின்கீழ் ஒரு திட்டம் பொதுப்பயன்பாட்டுக்காகத்தான் தீட்டப்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் அத்திட்டம் அமையும் இடத்தின் கிராமசபை உள்ளிட்ட அமைப்புகளின் கருத்துகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக பல கிராமசபைகள் தீர்மானம் இயற்றி இருந்தாலும் அவை புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

நிலத்தின் உரிமையாளர்களின் நலன்கள் மட்டும் அல்லாமல், அந்த நிலத்தை சார்ந்து வாழும் மக்கள், அந்த நிலத்தில் வாழும் தாவரங்கள், கால்நடைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான சமூகத் தாக்க மதிப்பீடு (Social Impact Assessment) செய்யப்படவில்லை என்பதை நினைவூட்டினார்.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில், புதிய திட்டங்களுக்காக நிலத்தை கொடுக்கும் மக்கள் அப்புதிய திட்டத்தின் பங்குதாரர்களாக அறிவிக்கப்பட்டு அத்திட்டத்தின் லாபத்தில் நிலத்தைக் கொடுக்கும் மக்களுக்கும் லாபத்தின் பங்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தில் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள்  உறுதி செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

மேற்கூறப்பட்ட காரணங்களால் “நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல், மறுவாழ்வளித்தல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாய இழப்பீடு வழங்கல் சட்டம் (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013)” இன் பிரிவு 105-ஐ செல்லாதென அறிவித்து அச்சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மு. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இதையடுத்து மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தமது இறுதி வாத்த்தை சில மணித்துளிகள் எடுத்துரைத்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகளின் விசாரணை வரும் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.