தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்...
நடுவண் அரசின் ஐட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கூட்டம் நாளைக்கு (06.09.2018) பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் புதுதில்லியில் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பெட்ரோலியம், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுப்பதற்கு ஏலமெடுத்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி முதல் கட்டமாக, மரக்காணத்திலிருந்து கடலூர் வரை உள்ள வட்டாரத்தையும், பரங்கிப்பேட்டையிலிருந்து வேளாங்கண்ணி வரையுள்ள இன்னொரு வட்டாரத்தையும் வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கிறார்கள். குள்ளஞ்சாவடியிலிருந்து தரங்கம்பாடி வரையுள்ள வட்டாரத்தை ஓ.என்.ஜி.சி.க்குக் கொடுக்கிறார்கள். இங்கு குறிப்பிடப்படும் ஒரு வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான குழாய்களை இறக்கி அவர்கள் ஐட்ரோகார்பன் எடுத்துக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்ட பகுதிகள் அனைத்தும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள வேளாண் மண்டலமாகும். இந்த ஐட்ரோகார்பன் திட்டம் செயல்பட்டால், முழுமையாக வேளாண்மை அழிந்துவிடும். கிராமங்கள் காலி செய்யப்படும். நிலத்தடி நீர் மாசுபடும். ஆறுகள் மற்றும் கால்வாய்களின் நீரோட்டங்கள் தடுக்கப்படும் அல்லது திசைமாற்றப்படும். மக்கள் வேறு வழியின்றி வெளியேற வேண்டிய நிலை உருவாகும். ஒட்டுமொத்தத்தில், பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் தாய் மண்ணும் வாழ்வுரிமையும் பறிக்கப்படும்!
நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் தகர்ந்து வீழ்ந்துவிட்டது. ரூபாய் மதிப்பு படு வீழ்ச்சி அடைந்து, பாதாளம் நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் நசிந்து, மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இவற்றையெல்லாம் ஈடுகட்ட, தமிழர் வாழ்வைச் சூறையாடி, தமிழ்நாட்டுக் கனிமங்களை எடுத்து, அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, வெளிநாட்டு செலாவணி ஈட்ட மோடி அரசு முயல்கிறது.
தூத்துக்குடி வட்டாரத்தில் மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி – 13 மனித உயிர்களைப் பலி கொண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு பரிசளிப்பதுபோல், தமிழ்நாட்டின் காவிரி மண்டலத்தை மோடி அரசு காவு கொடுக்கிறது!
ஏற்கெனவே, வரிகள் மற்றும் கட்டணங்கள் வழியாக இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிகமாக இந்திய அரசுக்கு பணம் கொடுக்கும் மாநிலமாக இருக்கிறது. ஓராண்டுக்கு 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிலிருந்து வரிப்பணமும், இதரக் கட்டணங்களும் தில்லிக்குப் போகிறது. அதற்குரிய முறையில், தில்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் பணம் வருவதில்லை; திட்டங்களும் வருவதில்லை! நாம் அனுப்பும் பணத்திற்கும், அங்கிருந்து வரும் தொகைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது!
தமிழ்நாட்டு மண்ணின் வளத்தை அழித்து – மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஐட்ரோகார்பன் திட்டம் பற்றி, தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மட்டும் போராடுவார்கள் என்ற நிலையை மாற்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இத்திட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும். கணக்குப் பார்த்தால், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் இந்திய அரசு விட்டுவைக்கவில்லை. தூத்துக்குடியில் போராட்டம், சேலம் பகுதியில் எட்டுவழிச்சாலை பாதிப்பால் போராட்டம் என்று தமிழ்நாடு முழுக்க நடுவண் அரசு கை வைத்து மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணுரிமையையும் பறித்து வருகிறது. எனவே, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் போராட வேண்டிய தேவை உள்ளது! நாம் நடத்தும் போராட்டம், மக்கள் திரள் நடத்தும் அறப்போராட்டம் - வன்முறையற்ற போராட்டம்!
இந்திய அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, ஐட்ரோ கார்பன் திட்டங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு, மேற்படி திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று நடுவண் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையெனில், நாம் போராட்டக் களத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அனைத்து மக்களும் வர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.