சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவை தான் உணர்ச்சிகளை உருவாக்குகின்றன.
நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத் தொடங்குகிறோம்.
அதைச் சொல்லி விட்டதாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம்.
பெரும்பாலான பகைகளும் சினங்களும் சொல்லை விட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.
ஆன்மா குடியிருக்கும் வீட்டில் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை தான் என்று நாக்கை சுக்ர ஸ்மிரிதி வகுக்கிறது.
நாக்கு நம் நலன்களைப் பேணத் தெரியாத பேதை.
சொற்களை அடுத்து எழுத்து...
ஓலை எத்தனை மிதமாக எழுதப் பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதாலேயே ஒரு உறுதியைக் கொண்டிருக்கிறது.
அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது.
வாசிப்பவரின் மனமே அந்த சொற்களுக்குப் பொருள் அளிக்கிறது.
எழுதுபவரின் மனம் அல்ல.
ஒருவர் வன் குரலில் வாசித்துக் காட்டி அறைகூவலாக ஒலிக்கச் செய்ய முடியும்.
ஆகவே எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும், உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன.
கேட்பவரின் முகத்தையும், சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியை சொல்ல வேண்டும்.
கேட்பவன் உருவாக்கும் எதிர் வினைகளுக்கேற்ப தணிந்தும், நயந்தும், தேவை என்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்த ஓலையை அளிக்கலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.