26/04/2019

இராவணனும் அந்த ஏழு வெந்நீர் கிணறும்...


இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல வெந்நீரூற்றுக்கள் இருந்தாலும் கன்னியா  வெந்நீரூற்றுக்கள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புகளைப் பெற்று தனித்துவமாக மிளிர்கின்றது. முக்கியாக கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகளிலும் ஏழு வித்தியாசமான வெப்பநிலைகளில் தண்ணீர் இருப்பதுதான் அதிசயம்.

கிணறுகளில் நீரை அள்ளி உடம்பில் ஊற்றுவதால் அந்த வெப்பநிலை வித்தியாசத்தை துல்லியமாக உணரமுடியாது. பத்து விரல்களில் ஒவ்வொரு விரலாக ஏழு விரல்களை உபயோகித்து அந்த அபூர்வ அனுபவத்தை உணர வேண்டும். அதிலும் பெரிய அதிசயம் ஏழுமே குளிப்பதற்கு ஏற்ற மிதமான வெப்பநிலை கொண்ட ஊற்றுக்கள்.

திருகோணமலை சம்பந்தப்பட்ட ஐதீக, புராணக் கதைகள் பெரும்பாலும் இராவணன் சம்பந்தப் பட்டவை. கன்னியா வெந்நீரூற்றும் இராவணனோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் நம்பப்படுகின்றது. கோணநாயகரிடம் பெற்ற லிங்கத்தை கையிலேந்திக் கொண்டு செல்லும் போது, விசுணு மூர்த்தி அந்தண வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் இராவணன் துக்கக் கடலில் மூழ்கினான்.  அந்தணன் அவரைத் தேற்றியபின், இறுதிக் கிரிகைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தி, இப்புண்ணிய தலத்தில் கருமாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்சத்தை அடைவது திண்ணம் என்று கூறினார்.

ஈமக்கிரிகைகளை அந்தணரையே செய்யச் சொல்லி இராவணன் வேண்ட, அதற்குச் சம்தித்த அந்தணர் இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழிடத்தில் ஊன்றினார்.

அந்தண வடிவம் கொண்டு மகாவிசுணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுக்கள் தோன்றின எனப் புராணங்ககள் கூறுகின்றன. இவ்விடத்தில் அந்தியேட்டி கடமைகள் செய்யப்படின் அவ்வான்மாக்கள் முத்தியடையும்என்று நம்பப்படுகிறது.

1954 இல் இந்நீரூற்றுகளை ஆராய்ந்த நிபுணர் சி.எச்.எல்.சிறிமான பின்வருமாறு கூறியுள்ளார். நிலத்தின் கீழ் உள்ள நீர்மட்டம், தரையின் மேற்பரப்பை சந்திக்கும் இடத்தில் இயற்கையாக நீரூற்று ஏற்படும். நீர் ஒரே நிலையில் நிற்பதில்லை. மழை வீழ்ச்சியின் பின் நீர்மட்டம் உயர நீரூற்று அதிகரிக்கும்.

வரண்ட காலத்தில் மழைவீழ்ச்சி குறைய நீர்மட்டம் தாழ நீரூற்று குறையும். ஆனால் கன்னியாவிலோ நீர்வற்றுவதுமில்லை; பெருக்கெடுத்துப் பாய்வதுமில்லை. இதற்குக் காரணம் சுவரால் அடைக்கப்பட்ட எல்லைக்குள், பூமியினூடே செல்லும் நீரோட்டத்தின் படுக்கை அல்லது ஆறு இருப்பதாகும். ஆனால் சுவர் எல்லைக்கு வெளிப் பகுதியிலும் நீரூற்றுகள் இருக்கின்றன.

மாரிகாலத்தில் நிலத்தடி நீர் உயர்வதினால் அப்பகுதியெங்கும் குளிர் நீரூற்றுகள் தோன்றும். ஆனால் வெந்நீராக இருப்பதற்கான காரணம் இவரால் விளக்கப்படவில்லை.

உலகில் பல இடங்களில் இது போன்ற வெந்நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் வெந்நீர் ஊற்றுக்கள் அம்பாந்தோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் காணப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கில் இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளான மேட்டு நிலத்தினதும் சமதரையினதும் எல்லைப் பகுதிகளிலேயே இவ்வாறான வெந்நீருற்றுக்கள் காணப்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள மண், பாறைகளின் பௌதீக அமைப்பே காரணமாக கொள்ளப்படுகிறது. அதாவது சுண்ணாம்பு கற்பாறைகளை அதிகமாகக் கொண்ட நிலத் தோற்ற அமைப்பில் வெந்நீர் ஊற்றுக்கள் தென்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக பூமியின் வெப்பநிலை நிலத்திற்கு கீழே செல்லச்செல்ல அதிகரித்துச் செல்கிறது. சராசரியாக ஒருகிலோ மீற்றருக்கு 30 பாகை செல்சியசு(ஸ்) என்ற அடிப்படையில் அதிகரித்துச் செல்கிறது. பூமிக்கு அடியிலுள்ள மக்மா பாறைத் தீக்குழம்புகளின் மேற்பகுதியில் காணப்படும் பாறைகளும் சூடாகவே காணப்படுகின்றன.

இந்தப் பாறைகளில் உள்ள ஊற்று, நிலத்தடிநீர் கொதிநிலையில் காணப்படுகின்றன. இந்த வெந்நீர் மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்களின் பௌதீக நிலையைப் பொறுத்து பூமியின் மேற்பகுதியில் ஊற்றாக வெளிப்படுகின்றன. சில இடங்களில் பூமியின் மேற்பகுதியில் பீறிட்டு மேலே பாய்வதும் உண்டு. சில இடங்களில் ஆவியாக வெளியேறுவதும் உண்டு. 

சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாறைப்படைகளில் நடைபெறும் இரசாயன தாக்கங்கள் காரணமாக வெப்ப நீரூற்று பிறக்கிறது என்கிறார்கள் பொதுவாக அவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அளவுகளிலேயே காணப்படுகின்றன. கன்னியா வெந்நீரூற்றுகள் போல் வெவ்வேறு வெப்பநிலை அளவுகளில் காணப்படவில்லை.

2010, பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் எடுத்த வெப்பநிலை அளவுகளின்படி, முதலாவது, இரண்டாவது, நான்காவது, ஏழாவது கிணறுகள்  40 பாகை செல்சியசிலும், மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது கிணறுகள் 41 பாகை செல்சியசிலும் பதிவாகியுள்ளன. 

இதேபோல், 1821 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி காலை ஏழுமணிக்கு ஏழு கிணறுகளின் வெப்பநிலை பின்வருமாறு; 101, 101.5, 107, 88.5, 86, 105.75, 91 எனவே மிகவும் கூடிய வெப்பம் மூன்றாவது கிணறில் 107 எனவும் மிகவும் குறைந்த வெப்பம் ஐந்தாவது கிணற்றில் 86 ஆக பதிவாகியுள்ளது.

அன்று காலை 11 மணிக்கு மீண்டும் வெப்பத்தின் அளவைப் பதிவு செய்தபோது பின்வருமாறு அமைந்திருந்தது. மூன்றாது கிணறு 107 இல் இருந்து 103 ஆகவும்ஆறாவது கிணறு 105.75 இல் இருந்து 102 ஆகவும் இருந்தது.

எனவே காற்றின் வெப்பம் அதிகரிக்க வெந்நீரின் வெப்பம் குறைந்து கொண்டே செல்வது அவதானிக்கத்தக்கது.  வெப்பமான நீரூற்றிலிருந்து சுரக்கும் தண்ணீரின் அளவு ஏனைய ஊற்றுக்களில் இருந்துவரும் நீரைவிட அதிகமாகக் இருக்கிறது.

வெப்பம் குறைந்த ஒரு கிணற்றில் அதிகமாக குமிழி வருவது இதற்கு விதிவிலக்காக உள்ளது. இக் கருத்து எவ்வளவுக்கு பொருத்தமானது என்பது ஆய்வுக்குட்பட்டதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.