வேற்று கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் மற்றும் பல மர்மங்கள் பற்றி நான் கடந்த சில வருடங்களாக படித்து ஆராய்ந்த பல காரணிகளை கொண்டு இந்த குறுந்தொடரினை எழுதப்போகிறேன்.
இதில் நான் நிருபிக்க முயலும் கருத்துகள் புதியன அல்ல..
Erich von Däniken, Zecharia Sitchin,Robert K. G. Temple Giorgio A. Tsoukalos போன்ற பல ஆய்வாளர்களால் கூறப்பட்ட கருத்துகள் தான் என்றாலும் நம் தமிழர்களுக்கு இது புதிது..
இந்த தொடரில் நான் கூறுப்போகும் கருத்துகள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், உங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கலாம்.. ஆனால் மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதல்ல என் நோக்கம். மாறாக இனி மதத்தை, மதசடங்குகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் உங்களை பார்க்க செய்வதே என் நோக்கம்.
கடவுள்..
ஒவ்வொரு மதமும் கடவுளை ஒவ்வொரு வகையில் காட்சிப்படுத்துகிறது..
நம் மனித சக்திக்கு மேலாக ஒரு சக்தி இருக்கிறது. அதன் பெயர் கடவுள் என்றால் ஆம் கடவுள் இருக்கிறார்..
அதனை நான் பூரணமாக நம்புகிறேன்..
ஆனால் நீங்கள் நம்பும் எந்த மதத்திலும் கூறப்பட்ட /கற்பிக்கப்பட்ட கடவுள் அல்லது கடவுள்களை நான் நம்பவில்லை.
மனிதர்களால் உருவாக்கப்பட்டவை மதங்கள்..
மனிதன் தவறு செய்வதில் பெயர் பெற்றவன்.. அப்படியிருக்க அந்த தவறுகள் கடவுளை புரிந்து கொள்வதிலும், மதத்திலும் நிறைய இருக்காதா..?
யார் கடவுள்..? விஞ்ஞானம் அறியாத, நெருப்பை காட்டுத்தீயில் மட்டுமே பார்த்த, தீ என்பது கடவுள் உண்டாக்கியது என நம்பும் ஒரு ஆதிவாசி இனத்தின் முன் உங்களால் ஒரு லைட்டரிலிருந்து நெருப்பை கொண்டுவர முடிந்தால் நீங்கள் தான் அவர்களின் கடவுள்..
இதை உங்களால் மறுக்க முடியுமா..?
சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நம் முன்னோர்களும் அப்படித்தானே இருந்திருப்பர்..?
அவர்கள் கடவுளாக நினைத்தது கடவுளாக இல்லாமல் நம்மை விட விஞ்ஞானத்திலும், அறிவிலும் பெரிய வேற்றுகிரகவாசிகளாக இருந்திருந்தால்..?
நம் வரலாற்றிலும் இது தான் நடந்திருக்கிறது..
ஆதிகாலத்தில நம் முன்னோர்கள் கண்ட பல நிகழ்ச்சிகள் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத, விளக்கம் அளிக்க முடியாதவை. அவர்களை பொறுத்தவரை அது ஒரு மேஜிக்..
நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத ஒன்றை ஒருவன் சாதாரணமாக செய்கிறான், அவனது தோற்றம் நம்மை விட வித்தியாசமாக இருக்கிறது, நாம் கேட்டதை தருகிறான்.. எனவே அவன் கடவுளாக தான் இருக்க வேண்டும்.. இது தான் நம் முன்னோர்கள் எண்ணியது.
தொடரை ஆரம்பிப்பதற்கு முன் சில கேள்விகள் உங்களிடம்..
1. மகாமக புராணம் & விவிலிய பழைய ஏற்பாடு..
i) பிரளய காலத்தில் பாவங்கள் அதிகரித்த உலகத்தை வெள்ளத்தால் அழிக்க சிவன் முடிவு செய்தான். எல்லா உயிர்களும் அழிந்த்துவிட்டால் இனி எப்படி உயிர்களை படைப்பேன் என்று வருந்திய பிரம்மனிடம் உலகின் அனைத்து உயிர்களையும் படைக்க தேவையான ஜீவாமிர்தத்தை ஒரு மண் கும்பத்திலிட்டு அதை மேரு மலையில் வைக்க சிவன் சொன்னதாக இந்து புராணங்கள் கூறுகின்றன.
ii) கடவுள் மனிதரின் தீய செயல்களை கண்டு கோபமுற்றவராக உலகை வெள்ளத்தால் அழிக்க எண்ணினார். அவர் அம்மனிதரிடையே ஒரே ஒரு நீதிமானாக நோவாவைக் கண்டு அவர் நோவாவை அழைத்து அவரிடம் ஒரு பேழையை செய்யச் சொல்லி அதனுள் அதனுள் அவரது மனைவி,மகன்களான சேம், ஆம் சாபேத்து என்பவர்களையும் அவர்களின் மனைவியினரையும் மேலும் உலகில் உள்ள எல்ல விலங்குகளிலும் ஒவ்வொரு சோடியையும் விலங்குகளுக்கும் குடும்பத்தாருக்கும் வேண்டிய உணவையும் பேழைகுள் சேர்க்கச் சொன்னார்.. இது கிறித்துவர்களின் பழைய ஏற்பாட்டில் (Old Testament) கூறப்பட்டது..
இந்த இரண்டு கதைகளும் ஒரே போல் இருக்க காரணம் என்ன..?
2. கன்னித்தன்மையை இழக்காமல் குழந்தை பெற்ற மேரி & குந்திதேவி..
i) துர்வாச முனிவர் குந்தியிடம் வரும்காலத்தில் இறைவன் மூலம் நீ ஒரு குழந்தைக்கு கன்னித்தாயாக போகிறாய் என கூற அதனை சோதித்து பார்க்க எண்ணி குந்திதேவி சூரியனை அழைக்க, சூரியபகவான் மூலம் கன்னித்தன்மை இழக்காமலேயே கர்ணனனை மகனாக பெற்றார். இது மகாபாரதத்தில் கூறியுள்ளது..
ii) இறைத்தூதர் கேப்ரியேல் புனித மேரியிடம் அவர் இறைவனின் தூய ஆவியின் மூலம் யேசுவை கன்னித்தன்மை இழக்காமலேயே பெறுவார் என்று தெரிவிக்க.. அவ்வண்ணமே மேரி குழந்தை யேசுவை பெற்றார். இது விவிலிய புதிய ஏற்பாட்டில் கூறியுள்ளது..
இந்த இரண்டு கதைகளும் ஒரே போல் இருக்க காரணம் என்ன..?
3. அனுனாக்கி (Anunakki) & கருடாழ்வார் - (சுமேரியரின் கடவுள் இந்துக்களின் கடவுள்)..
இப்போது ஈராக் என்று அழைக்கப்படும், முன்னர் மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட இடத்தில் ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுமேரியர்களின் கடவுள் அனுனாக்கியும், இந்துக்களின் கடவுள்களில் ஒருவரான கருடாழ்வாரும் ஏன் ஒரே மாதிரி இருக்கிறார்கள்..?
இல்லை இருவரும் ஒருவரா..?
குழப்பமாக இருக்கிறதா..?
இல்லை இது தான் ஆரம்பம்.. இனி இன்னும் குழப்புவேன்..
- தொடரும்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.