30/04/2017

உயிர்த்தெழுகிறது பூதம்.. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப் போகிறார்...


எல்லோராலும் அநேகமாக மறக்கப்பட்டுவிட்ட அயோத்தி - பாபர் மசூதி இடிப்பு வழக்கு இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது.

முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை மறு விசாரணை செய்யும்படி உச்சநீதிமன்றம உத்தரவிட்டிருப்பது எதிர்பாராத திருப்பம்.

பாபர் மசூதியைத் தகர்ப்பதற்கு கரசேவகர்களைத் தூண்டியதாகவும், அதற்கான சதித் திட்டத்தை ரத யாத்திரை, பேச்சுகள், செயல்பாடுகள் மூலம் செய்ததாகவும்தான் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக அமைக்கப்பட்ட லிப்ரான் விசாரணைக் கமிஷன் பா.ஜ.க. தலைவர்கள்தான் கரசேவகர்களை மசூதியை இடிப்பதற்குத் தூண்டினார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

அதனடிப்படையில் தான் வழக்குத் தொடரப்பட்டது.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் தகர்க்கப்பட்டது.

பாபர் மசூதி தகர்க்கப்படுவதற்கு முன்னால், அந்த வளாகத்தில் கரசேவகர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, சந்நியாசினி ரிதம்பரா உள்ளிட்ட பலரும் உரையாற்றியதால்தான், வெகுண்டெழுந்த கரசேவகர்கள் பாபர் மசூதியைத் தகர்க்க முற்பட்டனர் என்பதுதான் லிப்ரான் கமிஷன் அறிக்கையின் முடிவு.

கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சில சட்ட நுணுக்கங்களால் இரண்டு வெவ்வேறு வழக்குகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


உத்தரப் பிரதேசத் தலைநகரான லக்னெளவில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் 22 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி சுரேந்திரகுமார் யாதவின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் இதுவரை 196 சாட்சிகள் அரசுத் தரப்புச் சார்பில் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரே பரேலியில் இதே சம்பவம் தொடர்பாக இன்னொரு வழக்கு விசாரணையில் இருக்கிறது. பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டியதாகவும், அதற்கான சதியில் ஈடுபட்டதாகவும் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, சந்நியாசினி ரிதம்பரா, பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் வினய் கட்டியார், விஸ்வ ஹிந்துப் பரிஷத் தலைவர்களான ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா ஆகியோர் மீதும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர்களில் கிரிராஜ் கிஷோரும், அசோக் சிங்காலும் மரணமடைந்து விட்டனர்.

ரே பரேலியில் நடக்கும் இந்த பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கை நீதிபதி லோவி யாதவ் விசாரித்து வருகிறார். இதுவரை 58 சாட்சிகள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி இரண்டு இடங்களில் தனித்தனியாக வழக்குகள் நடத்தப்பட்டதுதான் அயோத்தி பாபர் மசூதி வழக்கு 25 ஆண்டுகளாக எந்த முடிவுக்கும் வராமல் இழுத்தடிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். மத்திய புலனாய்வுத் துறை உடனடியாக மேல் முறையீடு செய்து வழக்குகளை இணைத்து விசாரிக்கக் கோரி இருந்தால் இத்தனை நாள் வழக்கு நீட்டிக்கப்பட்டிருக்காது.

உச்சநீதிமன்றம் இப்போது இரண்டு வழக்குகளையும் இணைத்து, லக்னெளவிலேயே விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இரண்டு ஆண்டு காலக்கெடு விதித்து, தினப்படி விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்கவும் கூறியிருக்கிறது.

மறு விசாரணைக்கான கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடக் கூடாது என்றும், இந்த வழக்கு முடியும்வரை நீதிபதி இடமாற்றம் செய்யப்படக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மத்திய அரசிலும், உத்தரப் பிரதேசத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடில்லை.

பாபர் மசூதி இடிப்பின் பின்னணியில் எந்தவிதத் திட்டமிடலோ, சதியோ இல்லை என்பதுதான் பா.ஜ.க. ஆரம்பம் முதல் எடுத்துவரும் நிலைப்பாடு. எல்.கே. அத்வானி உள்ளிட்டவர்கள் மீதான சதிக் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருப்பது கட்சிக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டு சிறை தண்டனையைத் தலைவர்கள் எதிர்கொள்ள வேண்டும். வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எல்.கே. அத்வானி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் உமாபாரதி இனியும் மத்திய அமைச்சரவையில் தொடர முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.

அரசியலில் உயரிய பண்புகளையும் நெறிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப் போகிறார் என்பதை தேசமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

சதிக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களில் இப்போதைய ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங்கும் ஒருவர். தார்மிகப் பொறுப்பேற்று அவர் பதவி விலகுவாரா இல்லை ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விலக்கை பயன்படுத்தி வழக்கிலிருந்து தப்ப முற்படுவாரா?

வழக்கை மேலும் இழுத்தடிக்க முடியாதபடி, விரைவான விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்துக்குப் பாராட்டுக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.