09/06/2018

வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...


வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநரகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன், தெற்கு அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் தென் மேற்கு பருவக் காற்று வலுவாக வீசுவதாகத் தெரிவித்தார்.

மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோர பகுதியில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகக் கூறிய அவர், செய்யாறு, காஞ்சிபுரத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், அரியலூர், வந்தவாசி, தேவகோட்டை, திருப்பத்தூர், குமாரபாளையம், உள்ளிட்ட இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமாலை கருமேகங்கள் சூழ்ந்து ஒருமணி நேரம் மழை கொட்டியது. பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சாவூரில் திருவையாறு, திருப்பந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதேபோல், கும்பகோணத்திலும் மழைப் பொழிவு இருந்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது.

இதனிடையே, மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோர பகுதியில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.