அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து முடித்த பிறகு இறைவன் மனிதனை படைத்தான் தனது கடேசி படைப்பு மனிதன் என்பதனால் அவனை சிருஷ்டிப்பதில் மட்டும் அவன் தனிக்கவனம் செலுத்தினான் அதனால் தான் மனிதர்கள் அனைவரும் ஏறக்குறைய இறைவனை போலவே இருக்கிறார்கள்.
கடவுளிடம் இருக்கும் ஒரே ஒரு சக்தி மட்டுமே மனிதனிடம் இல்லை மனிதன் நீரில் மிதக்க படகினை கண்டான் வானில் பறக்க விமானம் கண்டான் பூமியை அகழ்ந்து பார்க்க சுரங்கம் கண்டான் அன்னை பூமியில் சாதித்தது போதுமென்று வானமண்டலத்தை அளக்க துவங்கினான் சந்திரனில் மிதித்து செவ்வாயை எட்டிபிடித்திருக்கும் மனிதன் இதுவரை பெறாத ஒரே சக்தி புதிய உயிர்களை படைப்பது மட்டுமே படைக்கும் தொழிலை மட்டும் மனிதன் கண்டறிந்து விட்டால் அவனும் இறைவனும் ஒன்றாகி விடுவார்கள் இது நடக்குமா? நடக்க முடியுமா? என்ற வாதங்கள் தொன்றுதொட்டு வருகின்றன அவைகள் நமக்கு வேண்டாம். நாம் அறிந்து கொள்வது மனிதனாகிய நாம் சாதாரண பிறவிகள் இல்லை சற்றேற குறைய இறைவனுக்கு நிகரான பிறவிகள் என்பதை உணர வேண்டும்.
மனிதனை விட நரி தந்திரமானது மனிதனை விட புலியும் சிங்கமும் வீரம் பொருந்தியது அப்பாவி மான் கூட மனிதனை விட அதிவேகமாக ஓட கூடியது. யானையின் பலத்தின் முன்னே மனிதன் ஒரு சிறு துரும்பு இப்படி பலம் பொருந்திய மனிதனை விட பல தகுதிகள் வாய்ந்த விலங்குகள் எதுவுமே மனிதனை அடிமைபடுத்திவிட முடியாது. காரணம் அவைகள் எவற்றிடமும் இல்லாத அறிவு பலம் மனிதனிடம் மட்டும் தான் உள்ளது. இந்த அறிவை வைத்து மனிதன் தன்னை விடவும் பல மடங்கு சக்தி மிகுந்த எதை வேண்டுமென்றாலும் அடக்கி விடுவான் அடிமையாக்கி விடுவான். அப்படி பட்ட அறிய படைப்பான மனிதன் எப்படி இருக்கிறான்? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
காட்டு விலங்குகள் ஒருபருவ காலம் மழை பொய்த்து விட்டாலும் குடிக்க தண்ணீர் இல்லாமலும் உண்ண ஆகாரம் இல்லாமலும் போய்விட்டாலும் வருத்தபடுவது இல்லை மரணம் கண்ணுக்கெதிரே தெரிந்தாலும் கூட அவைகள் அஞ்சுவது இல்லை ஆனால் மனிதன் அப்படி அல்ல பத்து வருடம் பஞ்சம் ஏற்பட்டாலும் காலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை சேகரித்து கொள்ள அவனால் முடியும். கொடிய நோய் வந்தாலும் ஆக்ரோஷமான இயற்க்கை சீற்றம் வந்தாலும் தனது அறிவை வைத்து முடிந்த வரையில் தப்பித்து கொள்ள இயலும் ஆனாலும் மனிதன் விலங்குகளை போல மகிழ்ச்சியாக இல்லை அது ஏன்?
ஒரு சமயம் ஏசுநாதர் தனது சீடர்களை நோக்கி வானத்து பறவைகளை பாருங்கள் அவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை ஆனாலும் அவைகள் மகிழ்வோடு பறக்கின்றன என்று சொன்னார். இதன் அர்த்தம் என்ன? தனது வாழ்நாளை நாளைக்கும் நடத்தி செல்ல எதாவது வேண்டுமே என்று சேமித்து வைக்காத பறவைகள் கூட ஆனந்தமாக பறக்கின்றன. ஆனால் எல்லாம் இருந்தும் அற்ப மனிதனே நீ ஏன் துன்பம் என்ற இருண்ட காட்டில் கிடந்தது தவிக்கிறாய் என்பது தான். மனிதன் மனிதனாக படைக்க பட்டதனுடைய மூலகாரணமே அவன் துன்பம் இல்லாதவனாக இன்ப மயமானவனாக இருக்க வேண்டும் என்பதே ஆனால் மனிதன் தன்னிடமுள்ள மிதமிஞ்சிய அறிவால் சந்தோசத்தை தொலைத்து விட்டு மூலையில் கிடந்தது அழுகிறான்.
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் எதை எதிர் பார்க்கிறான்? தனது படைப்பின் நோக்கமான தனது பிறவியின் இயல்பான இன்பத்தையே எதிர்பார்க்கிறான் ஆனால் பாவம் அவனுக்கு எப்போதும் அழிவில்லாத ஆனந்தத்தை தருவது எது நீர் குமிழி போல நிரந்தரம் இல்லாதது அழிந்து போகும் ஆனந்தம் எது என்று தெரியவில்லை ஒருவன் நினைக்கிறான் மலையளவு பணத்தை பெற்றால் தனக்கு இன்பம் கிட்டுமென்று வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்து நிறைய பணத்தை சம்பாதித்து குவித்து வைத்து விட்டு பார்க்கிறான் ஆகா இவ்வளவு பணத்தை சம்பாதித்து விட்டேனா? என்று ஆனந்த ஊற்று பெருக்கெடுத்து ஓட துள்ளி குதிக்கிறான்.
அந்த குதிப்பும் கும்மாளமும் ஒரே ஒரு நொடி மட்டுமே நீடிக்கிறது அடுத்த கணமே இந்த பணத்ததை யாரவது நம்மிடமிருந்து பிடுங்கி விடுவார்களோ என்று பயப்படுகிறான் அதனால் துக்கம் பணத்தை பாதுகாக்க ஆள் அம்பு படை வேண்டும் அவைகளை தருவது அதிகாரமிக்க பதவியே என்று முடிவு செய்து பதவியை நோக்கி நடக்கிறான் அதையும் பெற்று விட்டால் தன்னை போன்று பதவி ஆசை உடையவர்கள் அதை பிடுங்கி விடுவார்களோ என்று உறக்கம் வராமல் தவிக்கிறான் அதனாலும் துக்கம். பணம் பதவி இரண்டும் இருக்கிறது கூடவே பொறமை குணம் கொண்ட எதிரிகளும் கூடி விட்டார்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க தனது சொந்த பந்தங்களை அருகில் வைத்து கொள்ள வேண்டுமென்று அவர்களை நாடுகிறான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வித விதமான ஆசைகள் அவைகளை நிறைவேற்ற முடியாமல் மீண்டும் துடிக்கிறான் அதனாலும் துக்கம்.
பட்டம், பதவி, பணம், சொந்தபந்தம், அந்தஸ்து இப்படி எல்லாமே நிரந்தரம் இல்லாதது ஆனால் மனிதன் இவைகள் தான் நிரந்தரம் என்று நினைக்கிறான். அதற்கு காரணம் என்ன? கண்ணால் காண்பது இன்பம், காதுகளால் கேட்பது இன்பம், நுகர்வது இன்பம், சுவைப்பது இன்பம், பரிசம் செய்து பார்ப்பது இன்பமென்று புலனுக்கு கட்டு படுகின்ற வஸ்துக்கள் மட்டுமே நிஜமென்று நினைக்கிறான். இதனால் தான் ஆனந்தமாக இருக்க வேண்டிய மனிதனின் வாழ்வு துக்கமாக இருக்கிறது. நிரந்தரம் என்பது கண்களுக்கு தெரிவது மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ள பொருள்களும் நிரந்தரம் தான். அன்பு, கருணை, நிறைவு, திருப்தி, சாந்தி இவைகள் எதுவுமே கைகளால் தொட்டு பார்க்க கூடியது அல்ல ஆனால் நமது உணர்வுகளால் அவைகளை நுகர முடியும்.
நம் முன்னால் ஒருவன் நடந்து வருகிறான் அவன் கைகளில் எதுவோ இருக்கிறது அது இன்னவென்று நமக்கு தெரியாது அவன் அருகில் வரட்டும் வந்த பிறகு அது என்னவென்று பார்ப்போம் என்று காத்திருக்கிறோம் அவனும் வருகிறான் வந்தவன் நம்மை கண்டவுடன் தன் கைகளில் இருப்பதை மறைத்து கொள்கிறான் அவன் தூரத்தில் வந்த போதும் அருகில் வந்த போதும் அவனிடம் இருப்பது என்னவென்று நமக்கு தெரியாமலே போகிறது இதனால் அதை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது ஆவல் விரிந்து விரிந்து கடேசியில் துக்கமாக மாறி விடுகிறது. இதை போலவே நிரந்தரமாக நமக்கு சந்தோசம் தருவது எது என்று தேடி தேடி அடையாளம் தெரியாமலே அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம். நம்மில் பெருவாரியானவர்கள் இதை போலவே வாழ்நாளை கழித்து விடுகிறோம்.
பலபேருடைய வாழ்க்கையானது எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு சாம்பலை போல இருந்த அடையாளமே இல்லாமல் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. இதனால் அவர்களின் பிறந்த பலனை அவர்களால் அறியமுடியமலே போய்விடுகிறது. எவனொருவன் தான் எதற்க்காக பிறந்தோம் என்பதை தெள்ள தெளிவாக தெரிந்து கொள்கிறானோ அவனே சாதனையாளனகவும் இருக்கிறான் சரித்திர ஏடுகளில் மறையாமல் நிரந்தரமாக இடம்பிடித்து விடுகிறான். உண்மையில் நாம் அனைவருமே சாதிக்க பிறந்தவர்கள் அதற்காக தான் இறைவன் நம்மை படைத்திருக்கிறான். ஆனால் நாம் அதை தெரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறோம். நாம் யார்? நாம் பெற வேண்டியது என்ன? நிரந்தரமான நித்தியமான மகிழ்ச்சி என்பது எது என்று இன்றுமுதல் ஆராய துவங்குவோம்.
சற்று முயற்சி செய்தாலே பல ரகசிய கதவுகளை கடவுள் நமக்காக திறந்து விடுவான். வாருங்கள் அந்த வாசல் வழியாக சென்று நம் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.