16/08/2018

அன்பை நிலை நாட்டுவதற்கு உருவானது தான் மதங்களாகும்...


எந்த மதமும் வன்கொடுமையை வலியுறுத்தவில்லை. ஆனால் மதங்களின் பெயரால் தான் வன்முறைகள் இன்று பரவலாக நடந்து வருகிறது.

அதற்கு காரணம் என்ன?

அன்பை போதிக்கும் மதங்களால் அராஜகங்கள் நிகழ்வது ஏன்?

என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் கிடைக்கும் பதில் ஒன்று தான்.

மதங்களை தவறுதலாக புரிந்து கொள்வதும் என்மதம் தான் உயர்ந்தது என்று மற்ற மதங்களை ஊதாசினப்படுத்தும் மனப்போக்கும் தான் மத வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்ற பதில் கிடைக்கும்.

மத வெறியையும் மத அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று மக்களை நேசிக்கும் மனித நேயமிக்க சிந்தனையாளர்கள் பலரும் தங்களது அறிவாற்றலைக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.

அவர்களின் சிந்தனைக்கு உரமாகவும் சீர்திருத்தத்திற்கு வழியாகவும் எனக்கொரு யோசனை தோன்றியது அந்த யோசனையின் விளைவு தான் இந்த பதிவாகும்...

மதப்பிரச்சாரம் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.

ஆனால் அந்த பிரச்சாரம் எந்த நோக்கில் அமைந்திருக்கிறது என்றால் ஒன்றை தாக்கியும் இன்னொன்றை போற்றியும் தான் அமைந்திருக்கிறது.

இதில் தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் முளைவிடுகின்றன.

எனவே அந்த மதப்பிரச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதில் இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக இன்றைய மதப்பிரச்சாரம் என்பது சுய மதத்தினரிடம் அல்லாமல் மாற்று மதத்தினரிடம் தான் அதிகப்படியாக நடத்தப்படுகிறது.

எனவே காழ்புணர்ச்சி அற்ற வகையிலும் சுய மதத்தினரே தங்களது மதக் கருத்துகளை நன்கு புரிந்துணரும் வகையிலும் நமது நோக்கம் அமைந்திருக்க வேண்டும்.

அப்பொழுது தான் மதங்களில் புகுந்திருக்கும் வெறியுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.

ஆகவே அந்தந்த மத அறிஞர்கள் தங்கள் மக்களுக்கு தம் தமது மதக்கருத்துகளை புரியும் வண்ணம் போதித்து மாற்று மதத்தினரையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

அப்பொழுது தான் மதங்களின் மீது பதிந்திருக்கும் வன்முறை என்ற கொடிய பாவம் கழுவப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.