09/09/2018

மூனுசுழி ண , ரெண்டுசுழி ன என்ன வித்தியாசம்?


படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்.

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம் - தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

தமிழ் எழுத்துகளில்..

ரெண்டுசுழி ன என்பதும் தவறு.
மூனுசுழி ண என்பதும் தவறு.

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேர்ந்தே வருவதைப் பாருங்களேன், இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்.

(வர்க்க எழுத்து-ன்னா, சேர்ந்து வரும் எழுத்து, அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் எழுத்துப் பிழையும் குறையும்.

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா, அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும். ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா, அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும். ஏன்னா அது றன்னகரம்.

என்று புரிந்து கொள்ளலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.