24/11/2018

யாருக்கெல்லாம் புற்று நோய் வரும்...


கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம், புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 15 லட்சம் பேர் புற்றுநோயால், அவதிப்படுகின்றனர். இன்னும் எட்டு ஆண்டுகளில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரும் நோயாக இதய நோயும், புற்றுநோயும் மாறப்போகிறது. புற்றுநோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பகுதி. மதுரையை சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் பிரசாத், வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

1. நான், 21 வயது நிரம்பிய திருமணமாகாத பெண். எனது வலது மார்பகத்தில் வலி ஏற்பட்டு, பரிசோதனை செய்த போது புற்று நோய் என கூறுகின்றனர். இந்த வயதில் புற்றுநோய் வருமா?

இந்த வயதில் பெண்களுக்கு புற்றுநோய் வருவது அரிது. உங்களுக்கு வந்திருப்பது புற்றுநோயா, இல்லையா என்பதை அறிய, நுண்ணூசி மூலம் திசு பரிசோதனை செய்ய வேண்டும். அப்படியே புற்றுநோயாக இருந்தாலும், நவீன சிகிச்சையின் மூலம் மார்பகத்தை எடுக்காமலேயே குணப்படுத்தி விடலாம்.

2. நான், 20 வயது பெண். எனக்கு சினைப்பையில் கேன்சர் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளேன். நான் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி திருமணம் செய்து கொண்டால், எனக்கு குழந்தை பிறக்குமா?

சினைப் பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்விதமான பிரச்னையும் இருக்காது. ஒரு சினைப் பையை மட்டும் எடுத்திருந்தால், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரண்டு சினைப் பையையும் எடுத்திருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்காது.

3. நான் ஒரு கேசரி பிரியன். அதிலும் மஞ்சள் கேசரி, பச்சை கேசரி, சிகப்பு கேசரி என, கலர் கலராக கேசரி சாப்பிடுவதை விரும்புகிறேன். இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?

கேசரி சாப்பிடுவதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

4. எனக்கு, 20 வயது ஆகிறது. தினமும், "ஷேவ்' செய்து தான், வேலைக்கு போக வேண்டும். என் கன்னத்தில், "பிளேடு' படும் இடத்தில், ஒரு மச்சம் உள்ளது. அந்த மச்சத்தில் தினமும், "பிளேடு' படுவதால், அது புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் உள்ளதா?

முகத்தில் உள்ள மச்சத்தில், தினமும், "பிளேடு' பட்டு உறுத்தல் ஏற்பட்டால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, நீங்கள், "பிளேடு' உபயோகிப்பதை தவிர்த்து, "எலக்ட்ரிக் ஷேவர்' மூலம், "ஷேவ்' செய்து கொள்வது நல்லது.

5. எனக்கு அடிக்கடி வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை புற்று நோயாக இருக்குமா?

"டென்ஷன்' காரணமாக, உங்கள் வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை தானாகவே ஆறிவிடும். மற்றபடி, அதற்கும், புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை.

6. புற்றுநோய், குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோயை மின்சாரத்தால் குணப்படுத்த முடியும் என்கின்றனரே... அது உண்மையா?

புற்றுநோயை குணப்படுத்துவதற்கு, பல வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில், கதிரியக்க சிகிச்சையும் ஒன்று. கதிரியக்க சிகிச்சை என்பது, மின்காந்த அலைகளால் கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை. அதை வழக்கமாக தமிழில், "கரன்ட்' என்று அழைப்பதுண்டு. மற்றபடி மின்சாரத்திற்கும், புற்றுநோய் வைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லை.

7. நான், 50 வயது நிரம்பிய ஒரு நிர்வாக அதிகாரி. எனக்கு தலையில் முடி அதிகமாக நரைத்துள்ளது. அதற்காக நான் டை உபயோகித்து வருகிறேன். டை உபயோகித்தால் கேன்சர் வருமா?

தலைமுடிக்கு உபயோகப்படுத்தப்படும் பெரும்பாலான சாயங்கள், ரசாயன பொருட்களால் ஆனவை. அவற்றை உபயோகித்த பின், கை விரல்களையும், நகத்தையும் சுத்தமாக கழுவி விட வேண்டும். அவ்வாறு கழுவாவிட்டால், அவை உணவுக் குழாய் வழியாக, குடலுக்குள் சென்று, மார்பகம், இரைப்பை, கணையம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை உண்டாக்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.