உணருங்கள். உணர்ந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் அன்பர்களே.
உணராத வரைக்கும் எல்லாமே பூமியில் சிரமம் தான்...
வழிகளை காட்டும் கடவுள்...
நான் பலத்தைக் கேட்டேன்..
கடவுளோ சிக்கல்களைத் தந்து இதை சமாளி. பலம் பெறுவாய் என்றான்.
நான் ஞானத்தைக் கேட்டேன்..
கடவுளோ பிரச்னைகளைக் கொடுத்து இதைத் தீர்க்கும் போது ஞானம் சித்தியாகும் என்றான்.
நான் செல்வத்தைக் கேட்டேன்..
கடவுளோ தந்த அறிவையும், கொடுத்த உடலையும் காட்டிbசிந்தித்து உழைத்தால் செல்வம் சேரும் என்றான்.
நான் தைரியத்தைக் கேட்டேன்..
கடவுளோ அபாயங்களை அளித்து இதை சந்தி. தைரியம் தானாய் வரும் என்றான்.
நான் வாழ்வில் நிறைவைக் கேட்டேன்..
கடவுளோ கொடுத்ததையெல்லாம் காட்டி தாராளமாய் பகிர்ந்து கொள். நிறைவு நிச்சயம் என்றான்.
கேட்ட எதையும் கடவுள் அப்படியே தருவதில்லை. ஆனால் பெறும் வழிகளைக் காண்பிப்பான்.
பெறுவதும், விடுவதும் அவரவர் கையில்.
கடவுள் அரசியல்வாதியல்ல. எனவே இலவசமாய் எதையும் அவன் தருவதில்லை. பக்தர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதில் அவனுக்கு உடன்பாடில்லை.
தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் தரப்படும் என்பதன் பொருள்...
கேட்டு முடித்த பின் மடி மேல் விழும் என்பதல்ல. கேட்டதை கௌரவமாய் பெற வழி காண்பிக்கப்படும், அதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்பது தான்.
மண்ணை மனிதன் உருவாக்கவில்லை. சூரியக் கதிர்களையும் அவன் உருவாக்கவில்லை. மழையை அவன் உருவாக்கவில்லை. அதையெல்லாம் இறைவன் ஏற்படுத்தித் தந்திருக்கிறான்.
தானியம் பெற விரும்புபவன் கடவுள் ஏரையும் எடுத்து உழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.
எனவே பிரார்த்தனை செய்வோரே, பிரார்த்தனை செய்து முடித்த பின் அறிவுக் கண்களைத் திறந்து காத்திருங்கள். கடவுள் கண்டிப்பாக வழிகாட்டுவான்.
எத்தனையோ சந்தர்ப்பங்களை உங்கள் வழியில் ஏற்படுத்தித் தருவான். அதைப் பயன்படுத்தி பிரார்த்தித்ததை அடைந்து அனுபவியுங்கள்.
முயற்சியில் பெறுவதே உங்களுக்கும் கௌரவம். அப்படிப் பெற்றாலே பெற்றதன் அருமையையும் நீங்கள் அறிய முடியும்.
எனவே நீங்கள் கேட்டதும், பெற்றதும் என்ன என்பதை அறிவுபூர்வமாக அலசுங்கள். கேட்டதற்கும், பெற்றதற்கும் இடையே உள்ள இடைவெளிக்குக் காரணங்கள் உங்களிடத்தே இருக்கக் கூடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.