21/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 28...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இன்று 28-ம் பகுதியை நாம் காண உள்ளோம். கடவுளின் கோட்பாடுகள் இவ்வுலகில் யாரால் வரையறுக்கப் படுகின்றன.

இதனை உலகில் முதன் முதலில் ஏற்படுத்தியவர் யார்? என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்ற கேள்விகளாக இருப்பினும், இதற்கான உண்மைகளை மக்கள் அறியாது கடவுளின் நம்பிக்கைக்குரிய பக்தர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

நமது முன்னோர்கள் உருவாக்கிய கலாச்சார கோட்பாடுகளில் கலந்து விட்ட ஒரு நிலையே கடவுளின் நிலைகள் என்று சொல்கின்ற மனித சமூகம் இன்றும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. விஞ்ஞானிகளோ கடவுளின் துகள் என்ற ஒன்று உள்ளது என்ற ஆராய்ச்சி சிந்தனையில் பயணிக்க துவங்கிவிட்டனர்.

ஆனால் இந்த கோட்பாடுகளில் கடவுள் என்ற நிலை எங்கே? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்ற கேள்விக்கு மட்டும் யாராலும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை.

ஆனால் இன்று நான் அதற்கு விடை கூறுகிறேன் என்று சொல்பவர்களை கண்டு ஏளனம் செய்யும் மக்கள் கூட்டமே இவ்வுலகில் அதிகம் உள்ளனர் என 28-ம் தீர்க்க தரிசனத்தின் கோட்பாடு கடவுள் நிலை-யை பற்றி இங்கு எடுத்துக் கூறுகிறது..

கடவுள் என்ற கோட்பாடு காலத்தை கடந்த நிலை என்றும், அது அக்னிக்கு நிகரான ஒளி வடிவம் பொருந்திய பேராற்றல் மிக்க அதிசயங்களை தன்னகத்தே கொண்ட, அண்டத்தின் ஆக்கப்பூர்வமான வடிவங்களை தனக்குள் சுமந்துள்ள ஒரு ஒளி பிழம்பே கடவுள் என்று ஒரு கோட்பாடு வரையறுத்து கூறுவதாக 28-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.


பல துகள்கள் கொண்ட ஒரு பிரம்மாண்டமே பாறை என்றாலும், பாறைக்குள் ஒளிந்துள்ள கடவுளின் உருவத்தை, சிற்பி தனக்குள் (மனதிற்குள்) சுமந்த பின்னே அந்த பாறைக்கு வடிவத்தை கொடுப்பதைப் போன்று, பாறையில் கடவுள் உருவம் மறைந்து இருந்ததா? (அ) சிற்பியின் மனதில் கடவுள் உருவம் மறைந்து இருந்ததா? என்ற கேள்விக்கு நாம் பதில் காணவேண்டும் என 28-ம் தீர்க்க தரிசனம் ஒரு செய்தியை குறிப்பிடுகின்றது.

மனிதனின் மனதிற்குள் சக்தியாக ஊடுருவியுள்ள கடவுளின் உருவமே, கல்லுக்குள் உள்ள துகளுக்குள் சக்தியாக ஊடுருவி சிற்பியின் மனக்கண்களுக்குள் காட்சியளித்து, அதன் பின்னரே கடவுளின் உருவச்சிலை உருவாகி உள்ளது என்றும்,

இவ்வாறு தான் கடவுள் என்ற நிலை எங்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி நிலையாக இந்த பிரபஞ்சம் முழுதும் ஊடுருவி உள்ளதாகவும், அதுவே தன்னை ஒரு இயக்கத்திற்கு உட்படுத்தி இன்னொரு இயக்கத்தின் வழியாக வெளிப்படுத்திக் கொள்ளும் என்றும்,

அதனை உருவாக்கியவர் என்று இவ்வுலகில் ஏதும் இல்லை என்றும், இதுவே ஒன்றுமில்லாத நிலை’
 என்று கடவுளின் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன என 28-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

இவ்வாறு கடவுளின் ஊடுருவும் சக்தியை ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிலைப்படுத்திக் கொண்டு தன்னுடைய ஆழ்மனதின் வழியாக கடவுளுக்கு ஒரு உருவத்தை வழங்கி காண முடியும் என்றும்,

அவ்வாறு அவன் மனக்கண்களால் கண்ணுற்ற வடிவங்களே பின்னாளில் உருவங்களாக, சிற்பங்களாக, ஓவியங்களாக இந்த உலகில் கடவுளின் உருவ படைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டன என்றும்,


ஆனால் கடவுளுக்கு என்று ஒரு நிலையான உருவம் இல்லை என்றும், ஆனால் அந்த கடவுள் தான் இயங்கும் சமயத்தில் எந்த உருவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறாரோ அந்த வடிவத்தை நிலைப்படுத்தி, மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து வந்ததால் தான் இவ்வுலகில் கடவுள் அவதாரங்கள் தோன்றியதாக 28-ம் தீர்க்க தரிசனம் கடவுளின் நிலைப்பற்றி ஒரு உண்மையை இங்கு எடுத்துக் கூறுகிறது.

ஆகவே இவ்வுலகில் இதுவரை தோற்றுவிக்கப்பட்ட கடவுள் அவதாரங்கள் ஒவ்வொன்றுமே உருவ அமைப்பில் வேறுபட்டவை என்றும், பெயரளவில் மட்டுமே ஒற்றுமைகள் சில உள்ளன என்றும் 28-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கு தருகிறது.

அந்த வகையில் இன்று 28-ம் தீர்க்க தரிசனம் ஒரு மகா இரகசியத்தை வெளியிடுகிறது.

அதாவது இந்த உலகில் குறிப்பாக யுகமாற்றம் நடக்கும் இச்சமயத்தில் கடவுள் வருகை என்பது உண்மையான ஒரு விஷயம் என்றும், அவரின் அடுத்த அவதாரம் எந்த வடிவத்தில் இருக்கும் என்று 28-ம் தீர்க்க தரிசனம் ஒரு அரிய குறிப்பை இங்கு எடுத்துரைக்கின்றது.

அதாவது கடவுளின் அடுத்த அவதாரம் ஒரு மனிதனைப் போன்று இருக்கும் என்றும், ஆனால் மற்ற கடவுளின் உருவத்திற்குள் உருவமாக மாறி, மாறி இந்த பூமியில் அற்புதம் செய்யும் என்றும், இதற்கு முன் இவ்வுலகில் உள்ள அனைத்து கடவுளின் உருவத்திற்குள் உலாவும் என்றும் 28-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு அரிய குறிப்பை இங்கு தருகின்றது.

மங்கையர் உள்ளங்களுக்கு மகத்தான பெண் கடவுளாகவும், ஆடவர் உள்ளங்களுக்கு மகத்தான ஆண் கடவுளாகவும், ஞானிகளின் உள்ளங்களுக்கு மகா சக்தி வாய்ந்த மகானாகவும், சித்த நிலை அறிந்த சித்தர்களுக்கு தவத்தில் தலை சிறந்த சித்தராகவும், கயவர்களுக்கும், தீய சக்திகளுக்கும் கலியுகக் கடவுளாக தோன்றி அவைகளை வேரறுக்கும் சக்தியாகவும் கடவுள் உருவம் அமையும் என்று சத்திய யுகத்தின் வருகைக்கான கடவுளின் நிலையைப் பற்றி 28-ம் தீர்க்க தரிசனம் இங்கு அற்புதமான ஒரு விளக்கத்தை தருகிறது.

இத்தகைய அற்புதம் நிறைந்த அந்த கலியுகக் கடவுள் அதாவது சத்திய யுகத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய அந்த பரம்பொருள் ஒரு சாதாரண மானிடன் வடிவில் இவ்வுலகில் வலம் வரும் என்றும் 28-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

28-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு இரகசியத்தை இங்கு எடுத்துக் கூறுகிறது..


அதாவது அனைத்து உலகிற்கும் இறைவனான அந்த பரம்பொருள் பூமியில் அவதாரம் கொள்ளும் காட்சியை காணவும், அவரை தரிசிக்கவும் விண்ணுலக வாசிகள் யாவரும் மண்ணுலகிற்கு வருவார்கள் என்றும், மற்ற கிரகங்களில் வசிக்க கூடிய மனிதர்களைப் போன்ற ஆனால் உருவத்தில் மாறுபட்டவர்கள் இந்த பூமியில் அவதரித்த இறைவனை காண வருவார்கள் என்று 28-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்கள் சமூகம் அடுத்த இறை அவதாரத்தை காணப் போகின்றது என்றும், அவரின் வருகையை முன் அறிவிக்கவே இந்த பூமியில் ஏற்கனவே அவதரித்த கடவுளின் தோற்ற நிலைகளும், அவதாரர்களும் மீண்டும் தோன்றி மக்களுக்கு கடவுளின் வருகையைப் பற்றிய செய்தியை முன்னறிவிப்பார்கள் என்றும், இது இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் அதிசயமான நிகழ்வுகளாக தொடர்ந்து நடக்க உள்ளதாக 28-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகின்றது..

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.