21/04/2017

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு...


இந்தியாவைக் கிராம ராஜ்ஜியமாகவும், இராம ராஜ்ஜியமாகவும் மாற்றுவது தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கனவாகவும், இலட்சியமாகவும் இருந்தது..

இப்போது இந்த நாட்டை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இராம பக்தர்கள் ஆளுகிறார்கள். இவர்களும் முழுமையான இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்குத்தான் பாடுபடுகிறார்கள். இராம இராஜ்ஜியத்தைப் படைப்பதற்கான சோதனைக் களமாக காந்தி பிறந்த குஜராத்தை இந்த இராம பக்தர்கள் மாற்றியிருக்கிறார்கள்.

காந்தி ஒரு தீவிர வைணவன்..

இந்து மதத்தின் ஒரு பிரிவெனக் கூறப்படும் வைணவத்தின் மூலமாகவே உலகைக் கண்டவர். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இராம பக்தர்களோ, எல்லா இந்துமதப் பிரிவுகளையும் ஏற்பவர்கள். காந்தி காங்கிரசு கும்பலுக்கும், ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. கும்பலுக்கும் இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதில், அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு உள்ளது. சாரம் ஒன்றுதான்.

குஜராத்தில் இருந்து இசுலாமியர்களைப் பூண்டோடு ஒழிக்கும் கொலை வெறியாட்டம் நடத்திய போது காந்தி பிறந்த மண்ணில் இப்படி ஒரு கொடூரமா என்று பத்தாம் பசலிகள் பலர் அதிர்ச்சி காட்டினர்.

காங்கிரசு இரவிலே செய்ததை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர் பகலிலேயே செய்கிறார்கள் என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார்.

ஆம். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலின் அணுகுமுறை பகிரங்கமான பாசிச கொலைவெறி. காந்திய காங்கிரசின் அணுகுமுறையோ நயவஞ்சகம் துரோகம்.

காந்தியைக் கொன்றவன் ஒரு இந்துமதவெறியன்; ஆகவே, காந்தி ஒரு மதச்சார்பற்றவராக இந்துமதவெறி எதிர்ப்பாளராக இருந்திருக்க வேண்டும் என்று போலி கம்யூனிஸ்டுகள் பரப்பும் கருத்தும் உண்மையல்ல.

பாகிஸ்தான் உருவானதே மத அடிப்படையில் நாடு பிளவுண்டதற்கே காரணம் காந்திய காங்கிரசின் இந்துமதவாத அணுகுமுறைதான் காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

காந்தி அடிப்படையில் பார்ப்பன பனியா கும்பலின் பிரதிநிதியாகவே செயல்பட்டார் என்பதை அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சிந்தனையாளர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினர். இந்துமதவாதி காந்தியின் நயவஞ்சக துரோகமயமான அணுகுமுறை, இராம இராஜ்ஜியத்தை தாமதமாகக் கொண்டு வரும் எனப் பொறுமையை இழந்ததாலேதான் கோட்சேக்கள் ஆத்திரமுற்றனர்.

காந்திய காங்கிரசும் சரி, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. கும்பலும் சரி நாட்டுப்பற்று தேசபக்தியில் வெவ்வேறு அளவுகளில்

இந்துமதவாத நஞ்சு கலந்தார்கள். அவர்கள் அன்றும் இன்றும் பேசியதெல்லாம் சுதேசி; செய்ததெல்லாம் விதேசி ஊழியம் அல்லது ஏகாதிபத்தியத் தொண்டு.

ஒருபுறம் சுதேசி இயக்கம் என்கிற பெயரில் நாடகமாடிக் கொண்டே, மறுபுறம் தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் நாடு மறுகாலனியாக்கப்படுகிறது. காந்திய காங்கிரசால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மறுகாலனியாக்கம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலால் தீவிரமாக அமலாக்கப்படுகிறது.

ஏகாதிபத்தியத்திற்கு ஊழியம் செய்யும் இவர்களது கொள்கையில் நாடே பஞ்சபூமியாகி கஞ்சித் தொட்டிகளும் பட்டினிச் சாவுகளும் நடப்பாகிவிட்டன.

நாட்டின் இன்றைய அவலநிலைக்கு, புதிய ஆட்சியாளர்களான ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் எந்த அளவுக்கு பங்காற்றுகிறது என்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். ஆனால் நமது மக்களை ஏமாற்றி, துரோகப் பாதையில் இட்டுச் சென்று, அவர்கள் வாழ்வை காந்திய காங்கிரசு நாசமாக்கியது ஒரு நூறாண்டுக்கும் மேலான வரலாறு.

இன்றைய இளைய தலைமுறையினர் பலரது கவனத்துக்கு வராமலிருக்கும் இந்த உண்மையை இங்கே தொகுத்துத் தருகிறோம்..

கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி கைராட்டை சுற்றிச் சுற்றி, உண்ணாவிரதப் போர் முறையின் மூலமே வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற்று விட்டோம்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி திரும்பி காங்கிரசின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவுடன் காங்கிரசின் தன்மையும் பார்வையும் மாறியது.

நமது பாடசாலைப் புத்தகங்கள் போதிக்கின்ற இந்த விவரங்கள் சாரமற்று நீர்த்துப் போன பழங்கஞ்சிக்கு ஒப்பானது. எள்ளின் முனையளவும் உண்மையற்றவை. காங்கிரசின் பிறப்பே வேசித்தனமானது; மக்களின் முதுகிலே குத்திக் குத்திக் காயப்படுத்திய காந்தி காங்கிரசின் வரலாறோ துரோகமிக்கது.

வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை..

உலகில் நாகரிகமடைந்த நாடுகள் அளவுக்குப் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை நாம் அடைவதற்கு பிரிட்டிஷாருடைய தொடர்பு நமக்கு நீண்ட காலத்துக்குத் தேவையாகும். (1893ல் தாதாபாய் நவ்ரோஜி).

இங்கிலாந்து நாட்டுக்குப் படித்த வகுப்பினர் எதிரிகளல்ல; நண்பர்களாவர். (1898ல் காங்கிரசுத் தலைவர் ஆனந்த மோகன் போஸ்)ஆ பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்து ஊசலாட்டமின்றிச் சேவை செய்வதே அல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றுவதல்ல. மாறாக, அதன் அடிப்படையைப் பரவலாக்குவதாகும். (சுரேந்திரநாத் பானர்ஜி).

இந்திய மக்கள் உடனடியாக மாற்றத்தையோ புரட்சியையோ விரும்பவில்லை… நிலவுகின்ற அரசைப் பலப்படுத்தவும், அதை மக்களோடு நெருக்கமாகக் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளனர். இந்திய விவசாயம் மற்றும் தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அரசுச் செயலகத்திலும், வைசிராயினுடைய நிர்வாகக் ழுவிலும் சில இந்திய உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். (1901ல் காங்கிரசு தீர்மானம்).

— வேறொன்றுமில்லை. இவையாவும் மூத்த காங்கிரசுத் தலைவர்களின் பொன்மொழிகள். வெள்ளையனின் பாதாரவிந்தங்களை நக்கி ருசிகண்ட நாக்குகளிலிருந்து வெளிப்பட்ட இந்த வாக்கு லங்களும், தீர்மானங்களும் எதை நிரூபிக்கின்றன? மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு என்ற வெள்ளையர்களின் அறிக்கை இதற்கான பதிலைக் கூறுகிறது...

இந்திய மக்களில் அரசியல் மனப்பான்மை கொண்ட பகுதியினர்… அறிவுபூர்வமாக நம் குழந்தைகள். நாம் முன் வைத்த கருத்துக்களை அவர்கள் மனதில் வாங்கிக் கொண்டார்கள். (மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு அறிக்கை 1918 பக்: 115).

இதை உறுதிப்படுத்தி காந்தி கூறுகிறார்...

இந்த ஸ்தாபனம் (காங்கிரசு) முதன் முதலாக ஒரு ஆங்கிலேயரால்தான் ஏற்படுத்தப்பட்டதென உங்களிடம் கூறுகையில் நான் அளவிலா ஆனந்தமடைகிறேன். காங்கிரசு மகாசபைக்கு ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயர் தகப்பனாக விளங்கினார். (இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் காந்தியின் உரை).

உண்மைதான். இவர்களே பெருமைப்பட்டுக் கொள்வதைப் போல் காங்கிரசு வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அறிவுப்பூர்வமான குழந்தைதான்.  மறுப்பதற்கில்லை.

இந்த அறிவுப்பூர்வமான கள்ளக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய அவசியம் பற்றி சர். வில்லியம் வெட்டர்பர்ன் என்ற வரலாற்று ஆசிரியன் கீழ்க்கண்டவாறு கூறுகிறான்.

1878ஆம் ஆண்டு, ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம், தாய்மொழிச் செய்தியேடுகள் தடைச் சட்டம் ஆகிய சட்டங்கள் கொண்டு வந்ததையொட்டி அவன் கூறுகிறான்.

ரசியபாணி போலீசு அடக்குமுறையுடன் அதிர்ஷ்டம் கெட்ட இந்தப் பிற்போக்குச் சட்டங்களும் சேர்ந்து, லிட்டன் பிரபுவின் கீழ் இருந்த இந்தியாவைப் புரட்சிகரமான எழுச்சிக்கு வெகு அருகாமையில் இழுத்துச் சென்று விட்டன. தக்க தருணத்தில் திரு. ஆலன் ஆக்டேவியன் ஹியூமும், அவருடைய இந்திய ஆலோசகர்களும் தலையிட ஊக்கம் கொண்டனர். (சர். வில்லியம் வெட்டர்பர்ன்: ஆலன் ஆக்டேவியன் ஹியூம், இந்திய தேசிய காங்கிரசின் தந்தை 1931; பக்:101).

1857இல் வீறுகொண்டு எழுந்த சுதந்திரப் போரினைத் தொடர்ந்து காலனியாட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத்தான் வெட்டர்பர்ன் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறான்.

ஹியூமும் அவனுடைய ஆலோசகர்களும் இவ்விசயத்தில் ஊக்கத்தோடு தலையிட்ட காரணத்தைச் சொல்லும் முன்பாகச் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது இங்கு பொருத்தமானது...


கருவாகி உருவான கதை...

மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை பிராந்திய, சாதி, மத அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய இராணுவ பலம் ஒன்றை மட்டுமே கொண்டு நசுக்குவது இயலாத ஒன்றாக மாறி வந்தது. வீழ்ந்து வரும் மக்களின் வாழ்நிலை, எதிர்ப்புணர்வின் பேரலைகளாய்ச் சீற்றம் கொண்டன. சீர்திருத்தங்களை வழங்கி எதிர்ப்புணர்வினை மழுங்கடிக்கும் உபாயம் கூட அதிக நாள் அரசுக்குக் கை கொடுக்கவில்லை.

எண்ணற்ற சமூக சீர்திருத்த மற்றும் மத ரீதியான அமைப்புகள் ஏகாதிபத்தியத்தால் ஊக்கம் கொடுக்கப்பட்டன. நில உடமை மற்றும் தரகு முதலாளிய வர்க்கத்திலிருந்து உதித்து வந்த ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சையத் அகமது அலி, அமீர் அலி போன்றோரின் தலைமையிலான சீர்திருத்த அமைப்புகள் இவர்களுக்குப் போதுமானதாக இல்லை. அரசியல் நிறுவனம்’ என்ற வெற்றிடம் நிரப்பப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது.

1838இல் வங்கத்தில் தோன்றிய வங்க நில உடைமையாளர் சங்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிட்டிஷ் இந்தியச் சங்கமும், அரசியல் நிறுவனம் என்ற வரையறுப்புக்கு உட்பட்டவை எனலாம்.

வெள்ளையனின் முதல் விசுவாச அமைப்புக்களாகத் தோன்றிய இவ்வமைப்புக்கள் 1851இல் ஒன்றாக இணைந்தன. இதே போன்ற சங்கங்கள் சென்னை, பம்பாய் போன்ற பல்வேறு நகரங்களில் நிறுவப்பட்டன.

ஆட்சியாளர்கள் மீது நல்லெண்ணம், நீதியுணர்வு, விசுவாசம் ஆகியவற்றை மக்கள் கொள்வது, மாட்சிமை பொருந்திய வைசிராய், கவர்னர்கள் போன்றோரிடம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது இச்சங்கங்களின் நோக்கம். அப்போது கலெக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரசுத் தலைவருமான தாதாபாய் நவ்ரோஜி பம்பாய்ச் சங்கத்தில் உறுப்பினர்.

அரசியல் தேவையை நிறைவு செய்ய உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள் வெள்ளையர்கள் எதிர்பார்த்தவாறு செயலாற்ற முடியவில்லை. அதேசமயம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் வாழ்வை முன்னேற்றிக் கொள்ள மக்களும் தயாராக இல்லை. இதே கால கட்டத்தில் பயங்கரப் பஞ்சமாக உருவெடுத்த பொருளாதாரத் துயரங்கள் மக்கள் கலகங்களாய் வடிவெடுத்தன.

இந்த மக்கள் கலகங்கள் எப்படியிருக்கும், அதன் தன்மை என்ன என்பதை அப்போது நாடு முழுவதும் இருந்து வந்த முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நிருபர்களின் தகவல்களை குறிப்புக்களை வெட்டர்பர்ன் ஆதாரமாகக் கூறுகிறான்...

இப்போது உள்ள நிலைமையில் நிராசையுற்ற இந்த ஏழை மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதாகும் என்று திகில் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என விழைவதையே அக்குறிப்புகள் எல்லாம் காட்டின… அந்த ஏதாவது என்பது வன்முறையே.. பழைய வாள்களையும், ஈட்டிகளையும், தீக்குச்சி, வெடித் துப்பாக்கிகளும் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும், தேவைப்படும்போது தயாராக இருக்கும் என்பதையும் எண்ணற்ற குறிப்புக்கள் காட்டின.(மேற்படி புத்தகம், பக்: 80).

நெருக்கடியான இந்நேரத்தில்தான் ஹியூமும், அவனுடைய இந்திய ஆலோசகர்களும் ஊக்கமாக இவ்விசயங்களில் தலையிட்டனர். எதிர்வரும் ஆபத்தின் தன்மையைத் துல்லியமாக ஹியூம் உணர்ந்திருந்தான்.
மிகப் பயங்கரமானதொரு புரட்சியின் பெருத்த அபாயத்தில் நாம் உண்மையாகவே இருக்கிறோம் என்பதைப் பற்றி அப்போதோ அல்லது இப்போதோ எனக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்பட்டதில்லை என ஆட்சியாளர்களை எச்சரித்த ஹியூம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் மிகத் தெளிவாகக் கூறினான்.

இந்திய மக்களிடையே அதிருப்தியுற்றவர்கள் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போரினைக் காட்டிலும் தீவிரமான ஒரு எழுச்சியில் பிரிட்டனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என, எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நீடிப்பதற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையை இல்லாதொழிக்க வேண்டுமானால் பிரிட்டனுக்குப் பாதுகாப்பு வால்வைப் (குச்ஞூஞுதூ ஙச்டூதிஞு) போல செயல்படக்கூடிய இந்திய மேல் தட்டு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவது மிகமிக அவசியம்.

தன் திட்டத்தைச் செயல்படுத்த ஹியூம், தேர்ந்த அரசியல்வாதியான வைசிராய் டப்பரின் பிரபுவைச் சந்தித்தான். இவர்கள் சந்திப்பின் எதிரொலியாய்ப் பிறப்பெடுத்த காங்கிரசின் கதையை அதன் முதல் தலைவன் டபிள்யூ.சி. பானர்ஜி தன்னுடைய இந்திய அரசியலின் அறிமுகம் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்...

டப்பரின் பிரபு இவ்விசயத்தில் மிகுந்த அக்கறை காட்டினார். சிறிது காலம் சிந்தித்த பிறகு அவர் ஹியூமை அழைத்தார். ஹியூமின் திட்டத்தால் பயனேதும் இராது என்பதே தம் கருத்து என்று கூறினார். இங்கிலாந்தில் அரசியின் எதிர்க்கட்சி ஆற்றும் பணியை இந்நாட்டில் ஆற்றக் கூடிய குழுக்கள் ஏதுமில்லை… இந்திய அரசியல்வாதிகள் வருடத்துக்கொரு முறை கூடி, நிர்வாகத்தில் எவ்விதக் குறைகள் உள்ளன; அவற்றைத் திருத்த வழி என்ன என்பதைக் குறிப்பிட வேண்டும் என்ற அவர், தம் கருத்துப்படி கூடுகிற கூட்டத்திற்கு அங்குள்ள கவர்னர்கள் தலைமை வகிக்கக் கூடாது என்றும், ஏனெனில் கவர்னருக்கு முன்னிலையில் மக்கள் மனம்விட்டுப் பேசமாட்டார்கள் என்றும் உரைத்தார். டப்பரின் பிரபுவின் யோசனை திரு. ஹியூமுக்கும் திருப்தி தந்தது….

ஏகாதிபத்திய எஜமானர்களிடம் சோரம் போய்ப் பெற்றெடுக்கப்பட்ட காங்கிரசு இவ்வாறுதான் இந்திய அரசியல் மேடையில் அரங்கேறியது. தாராள குணம் படைத்த ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியக் கொள்கை இங்கே தெளிவாகிறதல்லவா? வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர நிலைமைக்கு’ எதிரான ஒரு கருவியாக தேசிய காங்கிரசு செயல்பட வேண்டும். அதிகார வட்டத்தின் இந்நோக்கம் ஏதோ பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று அல்ல; ஏகாதிபத்தியத்தின் தொடக்க காலத்திலேயே ஏற்பட்ட ஒன்று. கீழ்கண்ட மேற்கோள் இதை மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது..

1857க்குப் பின், அதாவது காங்கிரசுத் தோற்றத்துக்கு முந்தைய சில ஆண்டுகள் மிக மிக அபாயகரமானவை. வரவிருந்த அபாயத்தை உணர்ந்து அதை தடுக்க முயன்றவர் ஆங்கில அதிகாரிகளில் ஒருவரான ஹியூம்… ஒரு அகில இந்திய அமைப்புக்கான காலம் முற்றிலும் கனிந்திருந்தது. ஒரு விவசாய எழுச்சி படித்த வகுப்பாரின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்றிருக்கலாம். அதனிடத்தில் புதிய பாரதத்தைப் படைப்பதற்குப் புதிதாய்த் தோன்றிய வகுப்பினருக்கு அது ஒரு தேசிய மேடையை அளித்தது. வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரமான நிலைமை மீண்டும் தோற்றுவிக்கப்படுவதைக் காலப் போக்கில் தடுத்தது என்பதால் எல்லாம் நன்மைக்கே எனக் கொள்ளவேண்டும்.(ஆண்ட்ரூஸ், முகர்ஜி; இந்தியாவில் காங்கிரசுத் தோற்றமும், வளர்ச்சியும்’ பக். 1289).

1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால் துவக்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப் புரட்சியை ஒழித்துக் கட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே உண்மை. தாதாபாய் நவ்ரோஜி, திலகர், கோகலே, காந்தி, நேரு, சுபாஷ்போஸ் எவருடைய தலைமையின் கீழும் காங்கிரசு மக்கள் போராட்டங்களைத் தடுத்து ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செய்யும் நாயாகவே செயல்பட்டுள்ளது.

மக்களைச் சாதி, மத அடிப்படையில் பிரித்து மோதவிட்டுத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு சில அடிவருடிக் கட்சிகளும் தேவைப்பட்டன.

1901இல் முசுலீம் லீக்கும் 1918ல் இந்து மகாசபையும் தோற்றுவிக்கப்பட்டன...


விசுவாச நாய்கள்...

1917இல் உலகையே குலுக்கிய மாபெரும் அக்டோபர் புரட்சியின் வீச்சு கீழ்த்திசை நாடுகளை வந்தடையும் வரை, காங்கிரசு முழுக்க முழுக்க ஏகாதிபத்தியங்களின் விசுவாச ஊழியனாகவே செயல்பட்டுள்ளது. முதல் உலகப் போரின் போது தான் ஒரு அடிமைச் சேவகன் என்பதைப் பிறந்த மேனியாக வெளிக்காட்டியது. காங்கிரசார் பிரிட்டிஷாரின் யுத்தக் கொள்கையை வெளிப்படையாகவே ஆதரித்தனர்.

பேரரசின் விரைவான வெற்றிக்காக எல்லா வகையிலும் இந்திய மன்னர்களும் மக்களும் ஒத்துழைப்பார்கள் என ஜின்னா, லஜபதிராய் உட்பட அப்போது லண்டனிலிருந்த காங்கிரசுப் பிரதிநிதிக்குழு இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் அரசுச் செயலருக்குக் கடிதம் எழுதியது.

இதேநேரம் தென்னாப் பிரிக்காவிலிருந்து புதிதாக லண்டனுக்கு வந்த காந்தி ஹோட்டல் செசியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்குக்கான பதிலில் தனது அடிவருடித்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.

லண்டனிலிருந்த இளம் இந்திய நண்பர்களை அரசாங்க ரீதியாக’ச் சிந்தித்து தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இது மட்டுமா? தன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசுச் செயலருக்கு வலிந்து கடிதம் எழுதிய காந்தி, லண்டனில் இந்தியத் தொண்டர்கள் கொண்ட துயர் துடைப்பு (ஆம்புலன்ஸ்)ப் படை நிறுவி பிரிட்டிஷாருக்குச் சேவை செய்தார்.

இதற்காக கைசர்இஹிந்த் பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றுக் கொண்டார். இதற்கு முன்னரே கூட தென்னாப்பிரிக்காவில் இருந்த போது போயர் யுத்தத்தில் பிரிட்டிஷாருக்குச் செய்த சேவைக்கு போயர் யுத்தப் பதக்கத்தை ஏகாதிபத்தியங்களிடம் பெற்றுக் கொண்டவர்தான் அவர்.

சுயராச்சியத்தை வென்றெடுக்க காந்தி மகான் கூறிய யோசனை காலனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுங்கள் என்பதே. முதல் உலக யுத்தம் முடியும் வரை பிரிட்டிஷாரின் கௌரவ இராணுவ ஆள் சேர்ப்பு அதிகாரியாகச் செயல்பட்ட காந்தி ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு; பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களைக் கேட்டுக் கொண்டார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் ஆயுதமேந்திய போதெல்லாம் ஆயுதங்களைக் கீழே போடச் செய்வதற்குத் தன் உயிரையே பணயம் வைத்த இந்த உத்தமனின் ஏகாதிபத்தியச் சேவையைக் குறைத்து மதிப்பிட முடியுமா என்ன?

இது மட்டுமின்றி 1914, 1915, 1916ஆம் ஆண்டுகளில் முறையே சென்னை, பம்பாய், உத்திரபிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளில் பிரிட்டிஷ் ஆளுநர்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கொண்டு நேரடியாகப் பங்கு கொண்டு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

ஏகாதிபத்தியத்துக்கு நேரடிச் சேவை; அதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு இந்த வழியைத்தான் காங்கிரசு தன்னகத்தே கொண்டிருந்தது. இதுதானே அதன் இன்றைய கொள்கையும் கூட. ஆனால் ஒரு வித்தியாசம், இன்று பல்வேறு ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண்கிறது. ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு வழிகள் உள்ளன. இதை காங்கிரசு தன்னகத்தே எடுத்துக் கொண்டது ராஜீவின் சென்னை காங்கிரசு நூற்றாண்டு விழாப் பேச்சின் சாரம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

தீவிரவாதமும் ஒத்துழையாமையும்...

ஏகாதிபத்தியமும் அதன் கைக்கூலி காங்கிரசும் எவ்வளவுதான் கபடத்தனமாகச் செயல்பட்ட போதும் மக்களின் உணர்வுகள் போராட்டங்களிலேயே கிளர்ந்தெழுந்தன. புரட்சிகரமான மக்கள் போராட்டங்கள் நாடு முழுதும் பேரலையாய் எழுந்தன. பம்பாய், சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களில் தொழிலாளர் போராட்டங்களும், பஞ்சாப், உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் படித்த அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்கள் அடங்கிய புரட்சிகரக் குழுக்களும் தோன்றின. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கேதார் கட்சி என்ற வன்முறைப் பாதையில் நம்பிக்கைக் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சியை அமைத்து விடுதலையை நோக்கமாகக் கொண்டனர். 1913ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ என்ற அமெரிக்க நகரில் அமைக்கப்பட்ட கேதார் கட்சி, கேதார் (புரட்சி) என்ற உருதுப் பத்திரிக்கையை அச்சடித்துப் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பியது. அப்பத்திரிக்கையின் இதழ் ஒன்று ஒருமுறை இவ்வாறு விளம்பரப்படுத்தியது:

தேவை : புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்
ஊதியம் : மரணம்
பரிசு : வீரத்தியாகி என்ற பட்டம்
பென்ஷன் : இந்திய விடுதலை
பணியாற்றும் இடம் : இந்தியா

இந்தப் பத்திரிக்கை வெளிநாடுகளில் வாழும் இந்தியரை நாட்டின் விடுதலைக்குப் பணியாற்றும் வகையில் புரட்சிகர உணர்வைத் தட்டி எழுப்பியது.

நாட்டு விடுதலை மீது மாளாக் காதல் கொண்ட புரட்சிகர இளைஞர்கள் மத்தியில் 1917ஆம் ஆண்டு ரசியப் புரட்சியைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வேகமாகப் பரவியது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாடு முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் தொழிலாளர்களும் புரட்சிகர வன்முறையை நோக்கித் திரும்புவதைக் கண்ட காங்கிரசிற்குத் தன்னுடைய செயல்முறையைச் சிறிது மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராஜீவ் குறிப்பிட்டதைப் போல, புதிய எண்ணங்களும் புதிய பார்வைகளும் சங்கமமாகி அகிம்சை, ஒத்துழையாமை என்ற அட்டைக் கத்திப் போராட்டங்களை மக்கள் முன் வைத்தது.

மக்களின் போராட்டத்தைத் திசை திருப்ப ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த காந்தி அதற்கான காரணமாகக் கூறுவதைக் கேளுங்கள்..

மனுப் போடுவது போன்றவற்றால் வளரும் தலைமுறை திருப்தியடையாது என நினைக்கிறேன்… புயல் வருவதைத் தடுத்து நிறுத்த ஒத்துழையாமைதான் ஒரே வழி என்று எனக்குத் தெரிகிறது.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

அதுசரி; ஒத்துழையாமை இயக்கம் என்பது என்ன? காந்தி மேலும் கூறுகிறார்: 1919ஆம் வருடம் வரை கண் மூடித்தனமாக நான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குச் சேவை செய்தேன். பிறகே கண்திறந்தது. அதன் பயனாக ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்று வித்தேன். அதுவே சிறந்த ஆயுதமென இன்னமும் கருதியிருக்கிறேன். நாட்டு மக்கள் என்னோடு சேர்ந்து உழைத்தால், பிரிட்டிஷாரால் சுமத்தப் படக்கூடிய இன்னல்களைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால், கல் நெஞ்சையும் கரைத்துவிடலாமென நான் உறுதி கூறமுடியும். (காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதம், மார்ச்2, 1930).

பிரிட்டிஷாரின் கல்நெஞ்சைக் கரைக்க காந்தியார் முன் வைத்த ஒத்துழையாமைத் திட்டங்கள் என்ன? பிரிட்டிஷார் கொடுத்த பட்டங்களைத் துறப்பது; சட்டமன்றங்களையும், நீதிமன்றங்களையும், கல்வி நிறுவனங்களையும் துறப்பது; மதுவிலக்கு, ராட்டை சுற்றுவது, பிரார்த்தனை செய்வது ஆகியவைகளே. இந்த இயக்கம் காந்தியால் தீர்மானிக்கப்படும் ஒரு நல்ல நாளி’ல் வரி கொடுப்பதில்லை என்ற நடைமுறையில் போய் முடியும். சொல்லிலும் செயலிலும் இது வன்முறை இல்லாமல் இருக்க வேண்டும்.

சாத்வீகச் சதிச் செயல்...

1921ஆம் ஆண்டு வைசிராயாக வந்த ரீடிங்கைச் சந்தித்து காந்தி வாழ்த்துக் கூறியபோது, காங்கிரசு இயக்கம் வன்முறையைக் கையாளாதவரை ஆங்கிலேய அரசாங்கம் காங்கிரசின் விவகாரங்களில் தலையிடாது என்று உறுதி மொழியளித்தான். காந்தியும் அவ்வாறே நடந்து கொள்வதாக உறுதியளித்தார். இப்படித்தான் காங்கிரசும் காந்தியும் ஒத்துழையாமை நாடகத்தை நடத்தினர். மக்களின் முதுகிலே குத்தும் பச்சைத் துரோகம் என்பதன்றி வேறென்னவென்று இதைக் கூறுவது?

சாத்வீகப் போர் என்றால் என்ன? கோகலே கூறுகிறார்: இந்தப் போர் வலுச்சண்டையைச் சாத்வீக ஆயுதங்களால் எதிர்க்கும் முறையாகும். சாத்வீகப் போர்வீரன் தன் ஆயுதங்களை மனதில் தரித்தவன். பிறர் கொடுமையை ஒழிக்க இந்த வீரன் தன்னைத்தானே துன்பத்திற்குள்ளாக்கிக் கொள்கிறான். மனிதனின் மிருகத்தனத்தை இவன் தன் ஆத்ம சக்தியால் வெல்ல எத்தனிக்கிறான். இதில் நம்பிக்கை வைத்தவன் தன்னுள் உள்ள தெய்வாம்சத்தை உபயோகத்துக்குக் கொணர்ந்து, கஷ்டங்களைச் சகித்து, நிஷ்டூரங்களைப் பயனறச் செய்கிறான். தெய்வ நம்பிக்கையை ஆயுதமாக ஏந்தி அநியாயத்தை வெல்ல சாத்வீகப் போர்வீரன் களிப்புடன் சமரில் ஈடுபடுகிறான்.

காந்தியும் காங்கிரசும் ஏகாதிபத்தியவாதிகளை சாத்வீக முறையில் எதிர்ப்பதாக வேடங்கட்டி ஆடிய நாடகத்தைக் கண்டு மக்கள் மயங்கிவிடவில்லை. சாத்வீக முறையின் கட்டுத்திட்டங்களை உடைத்தெறிந்து விட்டு நேரடியாக ஆயுதத்தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வங்கத்தில் மித்னாபூர் விவசாயிகள் நிலப்பிரபுக்களின் எஸ்டேட்டுகளைச் சூறையாடினர்; அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த குண்டூர் விவசாயிகள் 1922ல் நிலப்பிரபுக்களுக்கெதிராக வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர்.

கை கொடுத்துக் காலை வாரிய காந்தி...

வரி கொடா இயக்கம் என்பது காந்தியின் வார்த்தைகளில் அரசுக்கு வரி கொடுக்காமல் இருப்பதாகும். ஆனால் விவசாயிகளோ தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பண்ணையார்களுக்கும் வரி கொடுக்க மறுத்தனர். இதைக் கேட்டவுடன் காந்தி துடிதுடித்து எல்லா வரிகளும் ஜனவரி 22க்குள் கட்டப்பட்டுவிட்டன என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைவேன் என்று ஆந்திரப் பிரதேசக் காங்கிரசுக் கமிட்டித் தலைவருக்கு எழுதினார்.

உக்கிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள்பால் மக்கள் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே காந்தியும் காங்கிரசும் திட்டமிட்டு அகிம்சை வழி ஒத்துழையாமை என நடத்திய கண்துடைப்புப் போராட்டங்களேகூட ஏகாதிபத்திய எஜமானர்களைப் பாதிக்கும் அளவு நடைபெற்றன.

பிப்ரவரி 1922இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி வைசிராய் பின்வருமாறு லண்டனுக்குச் செய்தி அனுப்பினான்...

நகர்ப்புறங்களில் கீழ்த்தட்டு வர்க்கங்கள் ஒத்துழையாமை இயக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் குறிப்பாக, அஸ்ஸாம், ஐக்கிய மாகாணம், வங்காளம், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபைப் பொறுத்தவரை அகாலிகள் போராட்டம் கிராமப்புற சீக்கியர்களைத் தழுவியுள்ளது. நாடு முழுவதும் முகமதிய ஜனத்தொகையில் பெரும் பகுதியினர் வெறுப்பும் சலிப்பும் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் நடந்ததைவிட மிகப் பயங்கரத் தன்மை வாய்ந்த ஒரு குழப்ப நிலைக்கு இந்திய அரசு ஆயத்தமாகியுள்ளது.

இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் காந்தி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கை கொடுத்தார். ஒத்துழையாமை தனது கையை விட்டு நழுவுவதைக் கண்ட காந்தி அதை வாபஸ் வாங்க சரியான தருணத்தையும் காரணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1922 பிப்ரவரியில் வங்கத்தில் சௌரிசௌரா விவசாயிகள், தங்களது அமைதியான ஊர்வலத்தின்மீது தாக்குதல் தொடுத்துக் கண் மூடித்தனமாகத் துப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்த போலீசாரைத் திருப்பித் தாக்கினர்; போலீசு நிலையத்திற்குத் தீ வைத்தனர். 22 போலீசாரைக் கொன்றொழித்தனர். உடனே காந்தியார், மக்கள் வன்முறையில் இறங்கிவிட்டதாகக் காரணம் காட்டி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார்; போராட்டத்தின் காலை வாரினார்.

1922 பிப்ரவரி 12ம் நாள் அவசரமாகக் கூடிய காங்கிரசு காரியக் கமிட்டி சௌரிசௌரா விவசாயிகள் மனிதத் தன்மையற்ற முறையில் நடந்து கொண்டதாகச் சாடியது. வன்முறை நிகழ்ச்சிகள் நடப்பதாலும், நாடு போதுமான அளவு அகிம்சை வழியில் இல்லை என்பதாலும் போராட்டம் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. அது மட்டுமா? அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளைச் செலுத்துமாறு ஆணையிட்டது. மக்கள் போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

1922 நெருக்கடி பற்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருத்தும், காந்தி இயக்கத்தை வாபஸ் பெற்றுத் தங்களைக் காப்பாற்றினார் என்ற கண்ணோட்டமும் அப்போதைய பம்பாய் கவர்னரான லாயிட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுகிறது..

அவர் (காந்தி) எங்களுக்குப் பெரும் திகில் உண்டாக்கி விட்டார். அவருடைய வேலைத் திட்டம் எங்கள் சிறைகளை நிரப்பிவிட்டது. மக்களை எப்போதும் கைது செய்து கொண்டே இருக்க முடியுமா என்ன? அதுவும் 3,19,000 பேர்களை. அவர் அடுத்த படியேறி வரி கொடுக்க மறுத்திருந்தால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும்? அது ஆண்டவனுக்கே தெரியும்.

உலக வரலாற்றிலேயே காந்தியின் சோதனை மிகப் பிரம்மாண்டமானது. அது வெற்றிக்கு ஓரங்குல தூரத்தில் வந்துவிட்டது. அவர்கள் வன்முறையில் இறங்கினார்கள். காந்தி வேலைத் திட்டத்தை வாபஸ் வாங்கினார். நாங்கள் அவரைச் சிறையிலிட்டோம். (ட்ரூ பியர்சனுக்கு அளித்த பேட்டி, ஆர்.பி. தத் எழுதிய இன்றைய இந்தியா எனும் நூலில் பக். 435).

அகிம்சையும், ஒத்துழையாமையும் காலனிய அடிப்படையைத் தகர்க்கும் போராட்டங்கள் எனக் கொள்ள முடியுமா? முடியாது. ஆயின் இதன் உண்மை நோக்கம் என்ன? போராட்ட உணர்வுகள் பொங்கி எழுந்து காலனிய ஆட்சியின் அடிப்படையை ஆட்டங்காணச் செய்யும் போதெல்லாம் அதைத் திசை திருப்ப ஆடிய நாடகங்களே இவை. பிரிட்டிசாரின் ஒத்துழைப்போடு காந்தி தயாரித்தளிக்கும் நாடகங்கள் கவர்ச்சிகரமான முறையிலே வானொலியிலும், பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தப்பட்டு மக்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது என்பது உண்மையே.

பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்க மறுப்பதை ஏகாதிபத்திய எதிர்ப்பு என மக்கள் புரிந்து கொண்ட அளவில் அது எப்போதுமே வன்முறையை எட்டிவிடும். மக்களைத் தழுவிய இந்த இயக்கங்கள் காந்தியின் கட்டுத் திட்டங்களை மீறிக் கைநழுவும் போது போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; நாடகத்தின் அடுத்த காட்சியாகக் காந்தி கைது செய்யப்படுவார்; உடனே காந்தியின் பால் மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டு அவருடைய செல்வாக்கு மீண்டும் பெருகும்; சிறையிலிருக்கும் காந்தியார் போராட்டங்களை வாபஸ் வாங்கிக் கொள்வார்; போராட்டம் எல்லை மீறியதை’க் கண்டிப்பார்; மக்களின் உணர்வுகள் மந்தமாகிப் போராட்டங்கள் பிசுபிசுக்கும்; பிரிட்டிஷார் குதூகலிப்பர். மீண்டும் மக்கள் உணர்வு பெற்று போராட்டங்களில் சீறியெழும்போது, பிரிட்டிஷாரின் ஆசியோடு காந்தி சிறையிலிருந்து விடுதலையாவார். திசை திருப்பும் திருப்பணியைத் தொடங்கி வைப்பார்.

இப்படித்தான் மக்களை ஏய்க்கும் நாடகத்தை பிரிட்டிஷாரும் காந்தியும் காங்கிரசும் நடத்தி வந்துள்ளனர்...


நிலப்பிரபுக்களின் தாசன்...

காங்கிரசும், காந்தியும் ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் விசுவாசிகள் அல்லர், நிலப்பிரபுக்களுக்கும் சேவகர்களே.

மன்னர் வாழ்கவே என்ற பாட்டை நான் எத்தனையோ தடவை ராகம் போட்டு, வெகு அழகாகப் பாடியிருக்கிறேன்; என்னுடைய நண்பர்களில் பலரையும் பாடச் செய்திருக்கிறேன் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் புளகாங்கிதமடைந்து கூறிய காந்தி, தனது ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது அல்ல; அதேசமயம் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளார்.

பர்தோலியில் கூடிய காங்கிரசு செயற்குழுவின் தீர்மானங்கள் இதுபற்றிய முக்கிய விவரங்களை கொண்டுள்ளன..

பிரிவு 6: ஜமீன்தார்களுக்கு நிலவரியைக் கொடுக்காமல் விவசாயிகள் நிறுத்தி வைத்திருப்பதானது தீர்மானத்திற்கு எதிரானது என்றும் நாட்டின் மிக நல்ல நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாகும் என்றும் விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு காங்கிரசு செயற்குழு, காங்கிரசு ஊழியர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஆலோசனை கூறுகிறது.

பிரிவு 7: ஜமீன்தார்களுடைய சட்டபூர்வ உரிமைகளைத் தாக்குவதை காங்கிரசு இயக்கம் எந்த விதத்திலும் தனது நோக்கமாகக் கொள்ளவில்லை என்று ஜமீன்தார்களுக்கு உறுதியளிக்கிறது.

நிலப்பிரபுத்துவச் சக்திகளுக்குக் காங்கிரசு எவ்வளவு நாணயமாகச் சேவை செய்தது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுவதில்லை. சில ஆண்டுகள் கழித்து, காந்தி ஜமீன்தார்கள் குழு ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னது இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் அமைந்தது:

சரியான நீதியான காரணமின்றிச் சொத்து படைத்த வர்க்கங்களிடமிருந்து சொத்துக்களைப் பறிமுதல் செய்வோர்களில் ஒருவனாக நான் இருக்கமாட்டேன். உங்களுடைய இதயத்தைத் தொட்டு நீங்களாகவே உங்களுடைய சொத்துக்களை தர்மகர்த்தா முறையில் உங்களுடைய விவசாயிகளுக்கு வைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். வர்க்க யுத்தத்தைத் தடுப்பதற்கு எனது செல்வாக்கின் முழு பலத்தையும் பயன்படுத்துவேன் என்பதைப் பற்றி நீங்கள் உறுதியாக இருக்கலாம்…

உங்களிடமிருந்து சொத்துக்களைப் பறிக்க அநீதியான ஒரு முயற்சி நடந்தால் அப்போது உங்கள் பக்கம் சேர்ந்து கொண்டு இந்த காந்தி போராட்டம் நடத்துவதை நீங்கள் காணலாம்.

(ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்திருந்த ஜமீன்தார் குழுவுக்கு காந்தி அளித்த பேட்டி, ஜூலை 1934, மராத்தா, ஆகஸ்டு 12,1934).

ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களுடைய ச க அடித்தளமாக விளங்கும் நிலப்பிரபுக்களுக்கும் காந்தி எத்தகைய விசுவாசம் மிக்க அடிமைச் சேவகன் என்பது வெள்ளிடை மலையல்லவா? இத்தகைய துரோகியின் வருகைக்காக நாடு காத்திருந்ததாம்.

காங்கிரசை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு காந்தியின் வருகை வரை நாடு காத்திருந்தது. அவர் காங்கிரசை சாதாரண மக்களின் கட்சியாக, ஏழை, எளியவர்களின் இயக்கமாக மாற்றினார். ராஜீவ் காந்தியின் மொழியில் ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களுடைய தரகர்களான தரகு முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் தான் மக்களாக இருக்க முடியும்.

மூக்கில் நாறிய சுயராச்சியம்...

பிரிட்டிஷாரின் ஒத்துழைப்போடு எவ்வளவுதான் காங்கிரசு துரோகமிழைத்த போதும் புரட்சிகரமான நிலைமைகள் முன்னேறுவதைத் தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் காந்தியும் காங்கிரசும் அமைதியான வேலைகளை’க் கவனிப் பதற்குப் பதிலாகச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் எப்போதுமே காலனியாட்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளனர். 1920களில் புரட்சிகர நிலைமைகள் திடீரென முன்னேறிய போது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி கூரை மேல் நின்று கொக்கரிக்கும் சேவலாக மாறிவிட்டார்.

1921 இறுதிக்குள் சுயராச்சியம் அடைந்தே தீருவேன்… சுயராச்சியத்தை அடையாமல் டிசம்பர் 31, 1921க்குப் பிறகு வாழ்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

சுயராச்சியம் என்று காந்தி எதைச் சொன்னார்? முடிந்தால் ஆங்கிலேயப் பேரரசுக்குள் ஒரு சுயாட்சி; அவசியமேற்பட்டால் அதற்கு வெளியே’. இது, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து, அதன் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையையும், தேசிய சுதந்திரத்தையும் குறிப்பதாகக் கொள்ள முடியுமா? அகமதாபாத்தில் 1921இல் நடந்த காங்கிரசுக் கூட்டத் தொடர் இதற்கான விடையைக் கொடுத்தது. அந்தக் கூட்டத்தொடரில் ஹஸரத் மொஹானி என்பவர் கொண்டு வந்த தீர்மானத்தில் சுயராச்சியம் என்பதற்கு முழுச்சுதந்திரம்; எல்லா வெளிநாட்டுக் கட்டுப்பாடுகளிலிருந்தும் சுதந்திரம் என்று விளக்கம் கொண்டிருந்தார்.

அதைக் கடுமையாக விமரிசித்த காந்தி, ஹஸரத்தின் தீர்மானத்தில் பொறுப்புத் தன்மை குறைவாக இருப்பது எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய தீர்மானத்தின் மூலம் அவர் ஆழம் தெரியாமல் தண்ணீருக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார்; ஆழம் தெரியாத தண்ணீருக்குள் நாம் போக வேண்டாம் எனக் கூறினார்.

இந்த இடத்தில் 1918இல் இந்திய அரசாங்கக் கூட்டத்தைத் துவக்கி வைத்து ஆங்கிலேய அரசன் பேசியதை நினைவுபடுத்துவது சரியாக இருக்கும்.

அவன் சொன்னான்: பல ஆண்டுகளாக, ஏன் பல பரம்பரைகளாக தேசபக்த இந்தியர்கள் சுயராச்சியக் கனவு கண்டு வந்திருக்கிறார்கள். இன்று நீங்கள் என்னுடைய பேரரசின் கீழ் சுயராச்சியத்திற்கான ஆரம்பத்தைப் பெறுகிறீர்கள். என்ன ஒற்றுமை. காந்தியார் கனவை அவன் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான்.

நாடெங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களும் பல்கிப் பெருகி மக்கள் தங்களைத் தியாகத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தபோது காந்தியும் காங்கிரசும் இப்படிப்பட்ட கோரிக்கைகளையும் போர்க்குணமற்ற போராட்ட முறைகளையும் அறிவித்து மக்கள் திரளை இதை நோக்கித் திசைதிருப்பி ஏகாதிபத்தியங்களுக்குத் தங்களாலான உதவிகளையெல்லாம் முடிந்தவரை செய்தனர். 1921 ஒத்துழையாமை இயக்கம் இவர்களின் கட்டுப்பாட்டை மீறி இறுதியில் வன்முறையில் திரும்பியவுடன் காந்தி சுயராச்சியம் என் மூக்கில் நாறுகிறது என்று அரற்றினார்.

1918 முதல் 1922 காலம் வரை மிகப் பரந்த நமது இந்திய பூமியில் புரட்சிகரப் போராட்டங்களும், ஆயுதந்தாங்கிய போராட்டங்களும் எல்லா வர்க்கங்களையும் உலுக்கி ஈர்த்துக் கொண்டது. நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தவர்கள்கூட போராட்டங்களிலே ஈடுபட்டனர். ஆனால் காங்கிரசு தலைமை இப்போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து பலவீனமடைய வைத்தது. மக்களுடைய தன்னெழுச்சியான போராட்டங்கள் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியவில்லை.

இத்தகைய கால கட்டங்களில் ஏகாதிபத்தியம் அடக்கு முறையை நடத்திக் கொண்டே, இன்னொருபுறம் சட்டமன்றத் தேர்தல்கள் (நவ.1926) போன்ற முறைகளையும் கையாண்டது. காங்கிரசு தலைமையில் மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் ஆகியோர் சுயராச்சியக் கட்சி என்ற ஒரு பிரிவு அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். மத்திய சட்டமன்றத்தில் சுயராச்சியக் கட்சித் தலைவராக அமர்ந்த மோதிலால் நேரு தாங்கள் சட்டமன்றத்திற்கு வந்தது பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்குத்தான் என்றும் தங்களுடைய ஒத்துழைப்பை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொண்டால் சொல்லாலும் செயலாலும் அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்களாக இருப்பார்கள் என்றும் புரட்சிகர இயக்கத்தைத் தடுத்து நிறுத்த தங்களால் இயன்றதனைத்தையும் செய்வோம் என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.

காங்கிரசு தலைமையில் உள்ள எந்த நபருக்கும் சரி, அவர்களுக்குத் தெளிவான ஒரு குறிக்கோள் இருந்தது. அதுநாடு முழுதாகச் சுதந்திரம் அடைந்து விடக்கூடாது; ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும், அதை விரட்டியடிக்கும், உண்மையான விடுதலையின் மீது பற்றுக் கொண்ட அமைப்புக்களை ஒழித்துக் கட்டுவது என்பதுதான். காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கம் மக்களிடையே அம்பலப்பட்டுப் போனதால் மாணவர்கள் இளைஞர்களின் கவனம் புரட்சிகர அமைப்புக்களின் மீது படரத் தொடங்கியது. அனுசீலன் சமிதி, இந்துஸ்தான் குடியரசுப் படை, நவஜவான் பாரத சபை, பஞ்சாப் கிருதி கிசான் கட்சி என புரட்சிகர இளைஞர், மாணவர் அமைப்புக்கள் தோன்றின. 1928ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் 3,16,77,000 வேலை நாட்களை உள்ளடக்கிய வேலை நிறுத்த இயக்கங்களில் ஈடுபட்டனர். வங்காளத்தைச் சேர்ந்த கிஷோர்கன்ஜ் பகுதியிலும், பீகாரைச் சேர்ந்த புட்டானா பகுதியிலும் உழவர்கள் நிலப்பிரபுக்களையும் காலனி ஆட்சியாளர்களையும் எதிர்த்து ஆயுதமேந்திப் போராடினர்.

அகிம்சையின் நோக்கம்...

ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் வளரத் துவங்கியதும் காங்கிரசு மீண்டும் ஒத்துழையாமை எனக் கூச்சலிடத் துவங்கியது; அகிம்சைவழி என அரற்றியது. உண்மையிலேயே காந்தியினுடைய அகிம்சைத் தத்துவத்தின் நோக்கம் என்ன? கத்தியின்றி ரத்தமின்றிப் போராடுவதன் உள்ளடக்கக் கூறுகள் என்ன?

அகிம்சை என்றால் என்ன என்பதைப் பற்றி காந்தி கூறுவதைக் கேளுங்கள்: அக்கிரமம் செய்கிறவனைத் துன்புறுத்துவதற்காகத்தான் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என்பது என் கருத்து. பலாத்காரத்துடன் கூடிய ஒத்துழையாமை இயக்கத்தினால் அக்கிரமங்கள் அதிகரிக்கும் என்பதையும், அக்கிரமங்கள் ஒழிய வேண்டுமானால் முற்றிலும் அகிம்சா தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நான் இந்திய மக்களிடையே பிரச்சாரம் செய்ய விரும்புகிறேன். அகிம்சை என்றால் துன்பங்களுக்குத் தானாகவே கீழ்படிதலாகும். துன்பங்களுக்குத் தானாகக் கீழ்ப்படியும் அகிம்சையின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

1930 மார்ச்சில் வைசிராய்க்கு காந்தி எழுதிய கடிதத்தில் அகிம்சையின் நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. தமது இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் துவக்கப்பட்டது அல்லவென்றும், இந்தியப் புரட்சி இயக்கத்தை எதிர்த்தே அது துவக்கப்பட்டதென்றும் தெரிவித்தார். அவர் கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்: வன்முறைக் கட்சி வலிமை பெற்று வருகிறது. அதை நன்றாக உணர முடிகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட வன்முறையை எதிர்த்து நிற்பது போலவே, வளர்ந்து வரும் வன்முறைக் கட்சியின் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத வன்முறையை எதிர்த்தும் சக்தியை (அகிம்சையை) இயக்குவது எனது நோக்கமாகும். வெறுமனே கைகட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது மேற்கூறப்பட்ட இரு சக்திகளுக்கும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பளிப்பதாகும்..

ஆக்கிரமிப்பாளனையும், ஆக்கிரமிக்கப்பட்டவனையும் ஒரே நிலையில் வைப்பதன் மூலம் ஆக்கிரமிப்பாளனுக்குச் சேவை செய்தார் காந்தி.

அகிம்சை யினின்று மயிரளவு பிறழ்ந்து வெற்றி பெறுவதைவிட, ஊறுபடாத அகிம்சையோடு படுதோல்வி அடைவதையே நான் வரவேற்பேன் என ஒருமுறை தி டைம்ஸ் என்ற ஏட்டிற்குப் பேட்டியளித்தார். அரசு எந்திரத்தின் அநியாய வன்முறையை எதிர்த்து மக்கள் நியாயமான வன்முறையைப் பிரயோகிக்கக்கூடாது என்பதுதான் காந்தியாரின் அகிம்சைத் தத்துவம்...


மகான் அல்ல... மக்கள் விரோதி...

வடகிழக்கில் சிட்டகாங் நகரிலும், மேற்கில் பெஷாவரிலும் போர்க் குணமிக்க போராட்டங்கள் இந்நாட்களில் (1930) தோன்றின. சிட்டகாங்கில் புரட்சிகர மாணவர் இயக்கங்களைச் சார்ந்த இந்துஸ்தான் குடியரசுப் படையினர் பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கைச் சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்களுக்கும் போலீசாருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

முழு எதிர்காலத்துக்கும் மிகப் பொருட்செறிவுள்ள நிகழ்ச்சி, பெஷாவரில் நடந்த கார்வாலிப் படைவீரர்களின் கலகமாகும். களத்திலிருந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் அனுப்பப்பட்டது; ஒரு இராணுவ ஆயுத வண்டி எரிக்கப்பட்டது; அதில் இருந்தவர்கள் தப்பிவிட்டார்கள். அதன் பேரில், கண்மூடித்தனமாகக் கூட்டத்தின் மீது இராணுவம் சுட்டது; நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.

பதினெட்டாவது அரசு கார் வாலித் துப்பாக்கிப் படையின் இரண்டாம் அணியின் ஒரு பிரிவினர் எல்லோரும் இந்துக்கள், கூட்டத்தினர் முசுலீம்கள் ஆணையை மீறிச் சுட மறுத்துவிட்டனர். அணியிலிருந்து விலகிக் கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டனர். சிலர் தங்கள் ஆயுதங்களையும் கொடுத்து விட்டனர். உடனே அங்கிருந்த இராணுவமும் போலீசும் முற்றிலும் பின் வாங்கப்பட்டன. ஏப்ரல் 25 முதல் மே 4 வரை பெஷாவர் நகர், மக்கள் வசம் இருந்தது; பின் மிகப்பெரிய பிரிட்டிஷ் படையையும், விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலையும் கொண்டு அந்நகரம் அரசினால் பின்னர் கைப்பற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி அகிம்சாமூ ர்த்தி’ காந்தியார் கூறிய கருத்துக்கள் அவருடைய அகிம்சைத் தத்துவத்தின் உண்மைச் சொரூபத்தை உலகுக்கு நன்கு அம்பலப்படுத்தியுள்ளது. தீரமிக்க கார்வாலிப் படைவீரர்கள் மக்களைச் சுடமறுத்த அகிம்சை’ச் செயலுக்காக கார்வாலிப் படை வீரர்களை காந்தியார் கண்டித்தார்.

சுடுமாறு ஆணையிடப்பட்ட படைவீரன் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுத்தால், அவன் தான் செய்த பிரமாணத்துக்கு எதிராக நடப்பதோடு, கீழ்ப்பணிய மறுத்த பெரும் குற்றமும் செய்தவனாவான். அதிகாரிகளையும், வீரர்களையும் கீழ்ப் பணிய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில், நான் அதிகாரத்தில் இருக்கையில் அதே அதிகாரிகளையும் படைவீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள நேரலாம். கீழ்ப்படிந்து நடக்க மறுக்குமாறு நான் அவர்களுக்குக் கற்பித்தால், அதே மாதிரி நான் அதிகாரத்தில் இருக்கும் போதும் செய்யக்கூடும் என அஞ்சுகிறேன்.

(பிரெஞ்சுப் பத்திரிகையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படைவீரர்களைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு காந்தியின் பதில்; மாண்ட், பிப்ரவரி 20, 1932).

இரண்டாம் உலகப் போரின் போது அட்டூழியங்கள் புரிந்த நாஜிகள் மீது நியூரம்பர்க் எனுமிடத்தில் சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தியபோது நாஜிகள் சாராம்சத்தில் காந்தியின் வாதத்தைத்தான் முன்னிறுத்தினர்.

நாங்கள் குற்றவாளிகள் அல்ல. ஏனெனில் மேலதிகாரிகள் உத்தரவைத் தான் நாங்கள் நிறைவேற்றினோம். அவர்கள் போடும் உத்தரவை நிறைவேற்றுவோம் என்று சபதம் ஏற்றிருக்கிறோம் என்றனர்.

காந்தியின் வார்த்தைப்படி நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளல்ல. ஆனால் சர்வதேச நீதிமன்றம் அவர்களுடைய வாதத்தை நிராகரித்து விட்டது. மேலதிகாரிகள் போடும் அக்கிரமமான, அநியாயமான, சட்ட விரோதமான உத்தரவுகளைச் சிப்பாய்கள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அது மட்டுமல்ல, அதை நிறைவேற்றுவதும் ஒரு குற்றமாகும் எனத் தீர்ப்புக் கூறியுள்ளது.

நியூரம்பர்க் நீதிமன்றத் தீர்ப்பையும் காந்தியின் தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காந்தியின் நயவஞ்சகத் துரோகம் அப்பட்டமாகத் தெளிவாகிறதல்லவா?

அரசாங்கத்தைத் தொல்லைப்படுத்த ஒரு சத்தியாக்கிரகி ஒருக்காலும் முயலமாட்டான் எனக் கூறிய காந்தி, பஞ்சாப்பில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது தான் ஒரு மக்கள் விரோதி என்பதை அம்மணமாகக் காட்டிக் கொண்டார்.

ஜாலியன் வாலாபாக் எனுமிடத்தில் 20,000க்கும் மேலாகக் கூடிய அமைதியான மக்கள் கூட்டத்தின் மீது ஜெனரல் டயர் என்பவன் வெறிகொண்டு 1600 முறை சுட்டான். மொத்தம் 379 பேர் இறந்தனர். படுகாயமுற்ற 1200 பேர் இரவு முழுவதும் கவனிப்பாரற்று மைதானத்திலேயே கிடந்தனர்.

கூட்டத்தில் இருந்தோருக்கு மட்டுமல்ல, குறிப்பாக பஞ்சாப் மக்கள் அனைவருக்கும் இடையில் ஒரு பயஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற இராணுவக் கண்ணோட்டத்தோடு தான் சுட்டதாகக் கூறிய டயர் ரவைகள் மட்டும் தீர்ந்திராவிடில் இன்னும் மக்களைச் சுட்டு வீழ்த்தியிருப்பேன் எனக் கொக்கரித்தான்.

மிருகத்தனமாக மக்களைச் சுட்டுப் பொசுக்கிய ஜெனரல் டயரை காந்தி ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஆனால் இந்தப் படுகொலை நடப்பதற்குச் சில நாட்கள் முன்பாக மக்கள் ஒரு சில ஐரோப்பியரைக் கொன்றதையும் நேஷனல் பாங்க் கட்டிடத்திற்குத் தீ வைத்ததையும் கடுமையாகச் சாடினார்.

அமிர்தசரசு மாநாட்டில் பஞ்சாப் மக்களின் கோபாவேசத்தைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆலோசனைக் கமிட்டி இதை ஏற்க மறுத்தது. ஏமாற்றமடைந்த காந்தி மகாஜனங்கள் பாஞ்சால நாட்டில் கோபாவேசத்தில் செய்யப் புகுந்த அதிக்கிரமங்களைக் கண்டிக்க காங்கிரசு மகாசபை இணங்காவிடில் நான் மகாசபையை விட்டு வெளியேறி விடப் போவதாக மிரட்டினார்.

கோப ட்டப்பட்ட பாஞ்சால ஜனங்கள் செய்த அதிக்கிரமங்களுக்காக மகாசபை மிகுந்த வருத்தமுறுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது இந்த மகாசபை முன் கொணரப்பட்ட தீர்மானங்களனைத்திலும் இதுவே தலைசிறந்தது என அகமகிழ்ந்து போனார்.

இதுமட்டுமின்றி காந்தியார் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவைத்து அவசர கதியில் வெளியிட்ட அறிக்கையில் இப்படிக் கூறினார்..

நான் சர்க்காரைப் பாராட்டுகிறேன். மேலும் சர்க்கார் பாஞ்சால விசாரணைக்காக ஒரு கமிசன் நியமனமாகிக் கொண்டிருக்கிறது என அறிவிக்கிறார்கள். சர்க்கார் இவ்வளவு நல்ல மனப்பான்மையுடன் இருக்கும்போது நான் அவர்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் காரியத்தில் இறங்குவது தவறு… சாத்வீகப் போரில் ஈடுபட்டவன் சர்க்காரைச் சங்கடத்துக்கு உள்ளாக்க மாட்டான்.

அகிம்சை என்பதின் மெய்ப்பொருள் இங்கே அப்பட்டமாகப் புலப்படுகிறதல்லவா?

ஏகாதிபத்தியத்திற்குப் பயன்படுவதாயிருந்தால் துப்பாக்கி சாத்வீகமானது, தூய்மையானது; ஆனால் அதுவே மக்களின் கையில் பயன்பட்டால் அது வன்முறை; அராசகம். இதுதான் காந்தியின் அகிம்சைத் தத்துவம்.

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் அரசியல் பிரதிநிதி வேறு எப்படிக் கூறுவார்?


பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்...

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்).

இவ்வொப்பந்தப்படி சுயராச்சியம் சம்பந்தமான சில சரத்துக்களையும், இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள் எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது.

அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர். அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை. காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை.

பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்..

பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா? என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்.

முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்… இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே. காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை. ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை தான்..

காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர். கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர். மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர் என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர் என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of Birhenhead P.305).

மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும்.

1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.

ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை...

இரண்டாம் உலகப் போரின் போது வெள்ளை ஏகாதிபத்தியம் தனது போர் நடவடிக்கைக்கு எதிராகக் கிளம்பிய ஒவ்வொரு எதிர்ப்பையும் நசுக்கியது. ஒடுக்குமுறையை மட்டுமே நம்பியிருக்காமல் போருக்குப் பின் அரசியலதிகாரத்தை இந்தியர்களின் கைகளுக்கே மாற்றி விடுவது என்ற மாயையை மக்களுக்கு ஏற்படுத்தும் பொருட்டு கிரிப்ஸ் கமிசன் போன்ற தூதுக்குழுக்கள் மூலம் அரசியல் மோசடி மூட்டைகளை அவிழ்த்து விட்டது.

காந்தியும் நேருவும் ஜின்னாவும் பிரிட்டிஷாருக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தனர். காங்கிரசுக் கட்சிக்குள்ளேயே இருந்த ஒரு பிரிவு சுபாஷ் போஸ் தலைமையில் பாசிச ஜெர்மானிய ஜப்பானிய முகாமை ஆதரித்து பிரிட்டிஷாரை எதிர்த்தது. தனது முழு ஆதரவையும் பிரிட்டனுக்குத் தெரிவிக்க காந்தி வைசிராயைச் சந்தித்தார். பின்னர் அதைப்பற்றிப் பின்வருமாறு எழுதினார்: நான் அவருக்கு (வைசிராய்க்கு) பிரிட்டிஷ் பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் அழிக்கப்படக் கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கிய போது நான் நெஞ்சுருகிப் போனேன். (செப்.5, 1939).

எப்படிப் பாருங்கள்.. யுத்தத்தின் காரணமாக இந்திய மக்கள் கொடூரமாக அடக்கி ஒடுக்கிச் சுரண்டப்படுவதைக் காட்டிலும் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றம் அழிந்து போய்விடலாம் என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கையிலே அழுதுவிட்டாராம்.  காந்தியின் இதயத்தில் பிரிட்டன் கட்டிடங்கள் பெற்ற இடத்தைக் கூட இந்திய நாட்டு மக்கள் பெறவில்லை தான்..

இந்தக் காலகட்டங்களில் காங்கிரசு கட்சி யுத்தத்தை எதிர்த்தோ அல்லது சுதந்திரத்திற்காகவோ ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.

பிரிட்டன் ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்குவது இந்தியாவின் கௌரவத்திற்கே இழிவு ஏற்படுத்தும் செயலாகும்.

மனிதருள் மாணிக்கம் நேருவின் மனித நேயத்தை எடுத்துக் காட்டும் சொற்கள்தான் இவை. இதே நேரத்தில் காந்தி நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களது சுதந்திரத்தைத் தேடவில்ல என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி பிரிட்டன் ஒரு நியாயமான லட்சியத்திற்காகப் போராடுவதாகவும், அதற்கு இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவித்தார்.

ஆகையால் நான் இப்போது இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் இங்கிலாந்தும், பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்ன ஆகும்? (ஹரிஜன், செப்.9, 1939).

காந்தியாரின் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்துக்கு இதைவிடத் தெளிவான எடுத்துக்காட்டு தேவையா?

காந்தியும் காங்கிரசும் பிரிட்டிஷ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு நல்கியபோதிலும் யுத்தத்தின் போக்கு இவர்களை யோசிக்க வைத்தது; திடீரென வெள்ளையனே வெளியேறு என்று முழங்குமளவு தூண்டியது. இந்த முழக்கத்தைக் கொண்டு காந்தியாரை தேச பக்தன் என்று எவராவது கூறினால் அது ஒன்று, அவரது அறியாமையாக இருக்க வேண்டும்; இல்லையெனில் நம்மை ஏமாற்றக் கூறப்பட்டவையாக இருக்க வேண்டும்.

ஏன்? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அழிவைக் கண்டஞ்சி கண்ணீர் சிந்திய தேசத் தந்தை, உலகப் போரின் ஒரு கட்டத்தில் பாசிச ஜெர்மானிய ஜப்பானிய முகாமின் விரைவான வெற்றியைக் கண்டு இந்திய நாடு அவர்களின் கைக்கு மாறிவிடும் எனக் கணித்தார். ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நின்ற காந்தியும் சுபாஸ் போசும் இப்போது ஒருவரையொருவர் புகழ்பாடத் தொடங்கினர். பாசிஸ்டுகளை ஆதரிக்கும் நோக்கில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்டது. அதேசமயம் நேரு, ராஜாஜி, ஆசாத் போன்றோர் பிரிட்டனே இறுதியில் வெல்லும் எனக் கணித்தனர்.

இந்த ஏகாதிபத்திய நாட்டுப் பற்றாளர்களின் நடவடிக்கைகள் எதை எடுத்துக் காட்டுகின்றன? யார் வெற்றி பெறுவர் என்ற கணிப்பில்தான் அவர்களிடையே கருத்து வேற்றுமையிருந்தது. ஆனால் வெற்றி பெறும் முகாமோடு இந்தியா இருக்க வேண்டுமென்பதில் கருத்து ஒற்றுமை இருந்தது. சத்தியத்தை நாடும் உத்தமர் பிரிட்டனைக் கைவிட்டதற்குக் காரணம் அது அநீதியான போரில் ஈடுபட்டது என்ற காரணத்தினால் அல்ல. அது தோல்வியைத் தழுவும் என்று எண்ணியதால் தான். பாசிசத்தின் மாபெரும் எதிர்ப்பாளன் நேரு பிரிட்டனை ஆதரித்தார். காரணம், பாசிசத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்ற மகத்தான கொள்கையின் உந்துதலால் அல்ல. பாசிசம் நிச்சயம் தோல்வியைத் தழுவும் என்று அவர் கருதியதால்தான்.

போரின் இறுதியில் பிரிட்டன் வெற்றியும், ஜெர்மன் தோல்வியையும் தழுவியபோது முரண்பட்டு நின்ற காங்கிரசுத் தலைமை அடுத்த வினாடியே பிரிட்டனை விசுவாசமாக ஆதரித்து நின்றது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை எனப் பத்தினி வேஷம் போட்டனர். காங்கிரசு செப். 21, 1945இல் வெளியிட்ட அறிக்கையில், அகில இந்தியக் காங்கிரசு கமிட்டியாலோ, காந்திஜியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாய்த் தொடங்கப்படவில்லை எனத் தெளிவாகக் கூறியது.

போர் முடிவடையும் தறுவாயில் உலகம் எங்கும் மக்கள் விடுதலையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர்.

ஆனால் காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத்திய காங்கிரசுத் துரோகிகளின் செய்கைகளால் போரின் தொடக்க காலத்தில் இருந்தது போலவே இந்தியா ஒரு அடிமை நாடாகவே போரிலிருந்து விடுபட்டது.

தெலுங்கானா விவசாயிகளின் புரட்சிகர எழுச்சி, 1946 ஜனவரியில் நடந்த விமானப்படை எழுச்சி, கப்பற்படை எழுச்சி, ஜபல்பூர் இராணுவ முகாமில் மூண்டெழுந்த படைவீரர்கள் கலகம் என ஏகாதிபத்தியத்தைத் தனது பலத்தின் இறுதிவரை சந்தித்த எந்தவொரு எழுச்சியும் காங்கிரசுக் கருங்காலிக் கூட்டத்தின் கயமைத்தனத்தினால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது...


மக்கள் முதுகில் குத்திய காந்தி...

1946 கப்பற்படை எழுச்சியைக் காங்கிரசுத் துரோகிகள் காட்டிக் கொடுத்து இந்திய விடுதலையின் முதுகெலும்பையே முறித்துவிட்டனர். தொழிலாளர்களும், மாணவர்களுமாக 30,000 பேர் பம்பாய் கப்பற்படைக் கலகத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். வேலை நிறுத்தம் செய்தனர். ஏறத்தாழ 20,000 கப்பற்படை வீரர்கள் செங்கொடி ஏந்தி பம்பாய் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். புரட்சி ஓங்குக. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறந்து படுக என விண்ணதிர முழங்கினர். ராயல் இந்தியக் கப்பற்படையின் 20 கப்பல்களை அவர்கள் கையகப்படுத்தி விட்டனர். எல்லா கப்பல்களிலும் காங்கிரசு, முசுலீம் லீக் மற்றும் செங்கொடிகள் இணைந்து பறந்தன. கப்பற்படை வீரர்களை இந்திய இராணுவத்தினர் சுட மறுத்துவிட்டனர்.

கப்பற்படையின் கலகத்தை அடக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கையாண்ட மிருகத்தனமான அடக்குமுறைகளை காங்கிரசோ முசுலீம் லீக் தலைவர்களோ ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஏகாதிபத்திய விசுவாசிகளிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. மக்களின் தீரமிக்க போராட்டங்களைக் கண்டிக்கும் புனிதச் செயல்களை அவர்கள் ஜுர வேகத்தில் துவங்கினர். அகிம்சா தர்மத்திற்கு மாறாக இந்துக்களும் முசுலீம்களும் புனிதமற்ற ஒரு கூட்டில் சேர்ந்ததாக மக்களைச் சாடினார் காந்தி.

நம்முடைய வேலை நிறுத்தம் நம் நாட்டு வாழ்க்கையில் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக இருந்துள்ளது. முதன் முதலாக ஒரு பொது இலட்சியத்திற்காக இராணுவத்திலுள்ள மனிதர்களின் ரத்தமும், வீதியிலுள்ள மனிதர்களின் இரத்தமும் சேர்ந்து பெருகின. படையிலுள்ள நாங்கள் ஒருக்காலும் இதை மறக்க மாட்டோம். எங்கள் சகோதர சகோதரிகளான நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நம்முடைய பெருமக்கள் நீடுழி வாழ்க. என ஆரவாரமில்லாமல் மக்களிடையே வேண்டுகோள் விடுத்த கப்பற்படை வேலை நிறுத்தக் கமிட்டியைக் கைது செய்யவும், கப்பற்படை எழுச்சியை அடக்கவும் அரசாங்கத்தின் வசமுள்ள அதிகபட்ச சக்தியைப் பயன்படுத்துவேன். இதனால் கடற்படையே அழிந்து போனாலும் சரி எனப் பிரிட்டிஷ் அட்மிரல் காட்பிரே கடற்படையினரை மிரட்டினான்.

மாபெரும் கப்பற்படை எழுச்சியைக் கண்டு “மகாத்மா’ என்ன செய்தார்? பச்சைத் துரோகத்தனத்தால் முதுகில் குத்திக் கொல்லப்பட்ட அந்தப் போராட்டத்தின் சவப்பெட்டிக்குக் கடைசி ஆணியை அறைந்தது அவர்தான். அந்தப் போராட்டம் எங்கே வெற்றி பெற்று விடுமோ எனக் குலை நடுங்கினார்.

அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டை காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காணுவதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக, தீயில் குதித்து என்னை அழித்துக் கொள்வேன் (ஹரிஜன், ஏப்ரல் 2, 1946) என அரற்றிய காந்தி, போராடும் மக்களைக் காலிகள் என வருணித்து மக்கள் விரோத நெருப்பை அள்ளி உமிழ்ந்தார்.

சுதந்திரம் ஒரு கபட நாடகமே...

காங்கிரசும் அதன் தலைமையும் ஒருபோதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை விரும்பவில்லை என்பது தெளிவு. காலிகளுக்கு பரந்துபட்ட மக்களுக்கு எதிராகச் செலுத்தப்படும் நூற்றாண்டுகால வெள்ளை ஏகாதிபத்திய ஒடுக்குமுறைச் சுரண்டலின் போது கட்டி வளர்க்கப்பட்ட அதிகாரவர்க்க நிர்வாக எந்திரம், போலீசு, இராணுவம் ஆகியவைகளை அப்படியே எடுத்துக் கொள்ள பெரிதும் விரும்பினர். இந்த அரசு எந்திரம் தகர்க்கப்படுவதை அவர்கள் சிறிதும் விரும்பவில்லை.

புரட்சிகரச் சக்திகளைக் கண்டு இந்திய முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அஞ்சியது போலவே தனது மொத்த அழிவைக் கண்டு ஏகாதிபத்தியமும் பயந்தது. இந்திய நிலைமைகளை பலாத்காரத்தைக் கொண்டு இனி கட்டுப்படுத்த முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டது. யுத்தத்தால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு நிதிப்பற்றாக்குறையின் காரணமாக தடுமாறிய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இராணுவ பலத்தை அதிகரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

நமது நாட்டின் தொழில் தேவைகளைவிட அதிகமானதாக நமது இராணுவக் கடமை இருந்ததையும் போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதிலும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும். (நினைவிருக்கும் வரை, பக். 518).

இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான ஒரு காரணமென அன்றைய கிழக்கிந்தியப் பிராந்தியத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் சர். பிரான்ஸ்டகர் என்பவன்தான் மேற்கண்டவாறு கூறினான். மற்றொரு காரணத்தை மவுண்ட்பேட்டனின் இந்தியப் படைத்தளபதி லார்டு இஸ்மாய் இப்படிக் கூறுகிறான்..

1947 மார்ச்சில் இந்தியா இருந்த நிலைமை வெடி குண்டுகளால் நிறைக்கப்பட்டு நடுக்கடலில் நற்கும் ஒரு கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது போல இருந்தது. நெருப்பு, குண்டுகளை நெருங்கு முன் அதை அணைக்க வேண்டிய பிரச்சினை முன்னே நின்றது. எனவே நாங்கள் செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை.

எனவே சமரசத்திற்கான அவசியம், இந்தியாவில் தனது அரசியல் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்தது. தனது நிதி, தொழில், வணிக, அந்தஸ்துகளை நிலைநிறுத்திக் கொள்கிற வகையில், தனது சுரண்டல் நீடிக்கும் வகையில் சமரசம் காண வேண்டியிருந்தது.

இதனினும் முக்கியமாக நாடு காலிகளின் கைக்குப் போய்விடாமல் காப்பாற்றும் அவசியமும் முன்னெழுந்தது. தங்களது நம்பிக்கைக்குரிய ஏஜெண்டுகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு திரைமறைவில் இருந்து ஆட்டி வைக்கும் வேலையைச் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.

ஏனெனில் முதலாளிகளுக்கு அக்கறையுள்ள விசயம் பொருளாதார ஆதிக்கத்தைப் பெறுவதே. அரசியல் ஆதிக்கத்துக்கான வடிவம் பற்றிய விசயம் அவ்வளவு முக்கியமானதல்ல.

லெனின் கூறிய இவ்வார்த்தைகள் இந்தியாவின் அன்றைய நிலைமைகளுக்கு மிகப் பொருத்தமானது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் ஒரு அங்கமே இந்தியச் சுதந்திரம். இந்தியாவில் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரசுத் தலைமைக்கு ஆட்சியதிகாரம் கைமாற்றப்பட்டது; கத்தியின்றி ரத்தமின்றி வெட்கமின்றி சமாதானமாக ஆட்சி கைமாறியது; யூனியன்ஜாக் கொடி இறக்கப்பட்டது; வர்ணக் கொடி ஏற்றப்பட்டது; சுதந்திரம் ஆகஸ்ட் 15 நள்ளிரவில் பிரகடனப்படுத்தப்பட்டது.

இறுதியாக மணப்பெண் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டாள்; ஆனால் அவள் ஏற்கெனவே ஒரு விபச்சாரியாக ஆக்கப்பட்டு விட்டாள்.

அரசியல் ரீதியில் சுதந்திரம் அடையப் பெற்றதென்று கூறப்பட்ட 1947 சுதந்திரமும், 1950ல் ஏற்பட்ட குடியரசும் ஏகாதிபத்தியங்கள் தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் சுதந்திரமான சுரண்டலுக்காக ஏற்படுத்தப்பட்ட, அவர்களுக்கு மட்டுமே ஜனநாயகம் கொண்ட ஒரு நாடு தான் இந்தியா.

ஆகஸ்டில் வாங்கப்பட்ட இந்தச் சுதந்திரம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் இறுதி வெற்றி அடைந்ததைக் குறிக்கிறதா? இல்லை. பிரிட்டிஷாரின் தொழிலும் மூலதனமும் நட்டஈடின்றிப் பறிமுதல் செய்யப்பட்டதா? இல்லவே இல்லை. மாறாக அப்படியே அரவணைக்கப்பட்டு நீடித்து விரிவடைய வகை செய்யப்பட்டது.

1948 ஏப்ரல் 6ந் தேதி பொருளாதாரக் கொள்கை பற்றிய சோசலிச நேரு அரசாங்கத்தின் தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் அன்னிய மூல தனத்திற்கும் தொழில் நிறுவனத்திற்கும் முழுச் சுதந்திரத்தை இத்தீர்மானம் அளிக்கிறது என மிகத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷாரின் மூலதனம் மட்டுமா தொடர்ந்து நீடித்தது? இல்லை. ஆங்கிலேயப் பேரரசின் அதே கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நீடித்தான். சீதனமாகப் பெறப்பட்ட பிரிட்டிஷ் இந்திய இராணுவக் கூலிப்படை அதே பிரிட்டிஷ் ஜெனரல் பௌச்சர் என்பவனின் கீழ் மேலும் இரு ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மட்டுமின்றி நீதி, நிர்வாகம், சட்டம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஆங்கிலேயரின் வழிமுறைகளிலேயே நீடித்து வருகிறது.

1911ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் இந்தியாவுக்கு வந்தபோது, தேசியக் கவிஞன் என வர்ணிக்கப்படுகின்ற வங்கத்தின் ரவீந்திரநாத் தாகூர் மாட்சிமை பொருந்திய மன்னனை வரவேற்று வாழ்த்துப் பாடிய ஜனகனமண என்ற பாடல் வெட்கமின்றி இந்தியாவின் தேசிய கீதமாக இசைக்கப்பட்டு வருகிறது. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இன்னமும் தொடர்ந்து ஒரு உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

குழப்பவாதிகள்...

1947இல் சுதந்திரம் வழங்குவது பற்றிக்கூட எச்சில் பொறுக்கும் காங்கிரசுக்கு அதன் எஜமானன்தான் வழிகாட்ட வேண்டியிருந்தது. இந்தக் கேடுகெட்ட சுதந்திரம் எப்படியிருக்கும் என்பது பற்றியோ, எதிர்காலம் பற்றியோ இவர்களால் ஊகிக்கக்கூட முடியவில்லை. இது ஒருபுறமிருக்கட்டும். இதுவரை காந்தியும் காங்கிரசும் முழங்கிவந்த சுயராஜ்ஜியம், சுதந்திரம், இதில் எதிலுமே, என்றுமே அவர்களுக்கு ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டமோ, தெளிவோ இருந்தது கிடையாது. காங்கிரசின் போர் முறை தெளிவற்று இருந்தது என்பதை அதிகாரபூர்வமான இந்திய தேசியக் காங்கிரசு வரலாறே உரைக்கிறது:

மாபெரும் சட்டபூர்வமான இயக்கம்தான் மக்களைக் கவர்ந்து கொண்டு இருந்தது. என்ன அது, எப்படித்தான் இருக்கும்? காந்தியே அதை விளக்கவில்லை. விரித்துரைக்கவில்லை. தீர்க்கதரிசனம் உடையோருக்கு, தூய உள்ளம் படைத்தோருக்கு தானே படிப்படியாக அது விளக்கம் கொள்ளும் —அடர்ந்த காட்டினூடே களைப்புற்று நடக்கும் பாதசாரியின் கால்களுக்குப் பாதை தானாகத் தென்பட்டு, ஓய்ந்துபோன அவன் கண்களுக்கு ஒளிக்கதிர் ஒன்று தோன்றவும் அவனுக்குப் புதிய நம்பிக்கை உதயமாவது போல. (அதிகாரப்பூர்வமான இந்திய தேசியக் காங்கிரசு வரலாறு, 1935 பக். 376).

காந்தி எப்போதுமே தெளிவற்றே இருந்திருக்கிறார் என்பதை சுபாஷ் போஸ் உறுதிப்படுத்துகிறார். உண்மையில் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. காலம் கனியுமுன் அவர் தன் ரகசியங்களை வெளியிட விரும்பவில்லையோ அல்லது அரசாங்கத்தை நிர்பந்தத்தில் வைக்கும் போராட்ட முறைகளை அவர் செவ்வையாக உருவாக்கிக் கொள்ளவில்லையோ, தெரியவில்லை. (சுபாஷ் போஸ், இந்திய போராட்டம், 192034, பக்.68).

நம் தலைவர்களில் பலருக்கு சுயராச்சியம் எனில் விடுதலையைவிடக் குறைவான ஏதோ ஒன்று எனத் தெளிவாயிருந்தது. இவ்விசயம் பற்றி காந்திஜியோ தெளிவின்மையோடு இருந்தார்; அதைப் பற்றித் தெளிவாய்ச் சிந்திக்கவும் அவர் ஊக்கம் தரவில்லை. (ஜவஹர்லால் நேரு, சுயசரிதம், பக்.76) என நேரு வெளிப்படையாகவே கூறுகிறார்.

படுபிற்போக்காளர்கள்..

கிராமத் தொழில்களின் ஆதிக்கத்தில் தான் உண்மையான சோசலிசம் இருக்கிறது. பெருமளவு உற்பத்தியின் விளைவாக மேலை நாடுகளில் நிலவும் குழப்பமான நிலைமைகளை நம் நாட்டிலும் தோற்றுவிக்க விரும்பவில்லை. (வல்லபாய் பட்டேல், அலகாபாத்தில் சொற்பொழிவாற்றியது. ஜனவரி 3, 1935).

காங்கிரசும், காந்தியும் விஞ்ஞான மனோபாவம் சிறிதும் அற்ற படுபிற்போக்காளர்கள் என்பதற்கு இந்திய சுயஆட்சி என்ற நூலில் அவர் எழுதிய கருத்துக்களே சாட்சிகள். அதில் அவர் நவீன விஞ்ஞானத்தையும் இயந்திரத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறார்.

யந்திர சாதனம் கெட்டது என்பதை உணர வேண்டியது அவசியம். அப்பால் நாம் படிப்படியாக அதை ஒழித்து விடலாம். (காந்தி, இந்திய சுயாட்சி, பக். 124).

ஆஸ்பத்திரிகள் பாவத்தைப் பரப்பும் நிறுவனங்கள் (மேற்படி நூல், பக்.64).

1909இல் ஒரு நண்பருக்கு எழுதிய நம்பிக்கையின் பாவ ஏற்பு என்பதில் காந்தியின் பிற்போக்குக் கண்ணோட்டம் மிகக் கூர்மையாக வெளிப்படுகிறது.

மருத்துவ விஞ்ஞானம் மாந்திரீக முறையின் வடித்தெடுத்த சாரம். உயர்ந்த மருத்துவத் திறமை எனப்படுவதற்குப் போலி வைத்தியமுறை எவ்வளவோ மேல்….

சென்ற ஐம்பது ஆண்டுகளில் கற்றவற்றை எல்லாம் மறப்பதில்தான் இந்தியாவின் விமோசனம் இருக்கிறது. ரயில்வேக்கள், தந்திகள், ஆஸ்பத்திரிகள், லாயர்கள், டாக்டர்கள் இவை, இவர்கள் போன்றன மறை வேண்டும்… உணர்வோடும், சமய நம்பிக்கையோடும் மனமறிந்தும் எளிய விவசாயி வாழ்க்கை வாழக் கற்க வேண்டும் (காந்தி நம்பிக்கையின் பாவ ஏற்பு, 1909, சொற்பொழிவுகள். பக்கம் 104143).

இந்திய வறுமைக்குத் தீர்வு காணும் வழிதான் இத்திட்டம். காந்தியின் ராமராச்சியம் எப்படியிருக்கும் என உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? முடியவில்லையெனில் பின்வருவன தெளிவுபடுத்தும்.

பூரண சுயராச்சியம் பெற்றதும் தாங்கள் யந்திரங்கள் யாவற்றையும் ஒழித்து விடுவீர்களா? என அமெரிக்க நிருபர் கேட்டதற்கு காந்தி, மாட்டேன் அதை ஒழிப்பதற்குப் பதிலாக நான் அமெரிக்காவிற்கு அதிக ஆர்டர் கொடுத்தாலும் கொடுப்பேன் என்றார்.

நிலப்பிரபுத்துவப் பிற்போக்குவாதி காந்தியின் திட்டம் இயந்திர எதிர்ப்பு, கைராட்டை, அன்னிய இயந்திர இறக்குமதி, உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு எதிர்ப்பு என்பதன்றி வேறென்னவாக இருக்கும்?

சரி, காங்கிரசும் சரி எவ்வாறு அவர்களுடைய திட்டத்திலேயே தெளிவற்று இருந்தார்களோ அதேபோல சிந்தனை முறையிலும் எதிர்கால இந்தியாவைப் பற்றிய கனவிலும் மிகமிகப் பிற்போக்குவாதிகளாகவே செயல்பட்டனர்.

இவர்களுடைய வேலைத் திட்டமே கிராமப் புத்தமைப்பும், தொழில்மயம் ஆவதற்கு எதிர்ப்பும் ஆகும்...


இந்து சநாதனி...

இங்ஙனம் கிஞ்சித்தும் விஞ்ஞானக் கண்ணோட்டம் இல்லையெனில் நடைமுறையில் காங்கிரசின் நோக்கு என்ன? ஐயமின்றி அஞ்ஞானப் பார்வைதான்.

மதச்சார்பின்மை என மூச்சுக்கு முன்னூறு தடவை கொட்டி முழக்கும் காங்கிரசின் எல்லாக் கிளர்ச்சிகளிலும் பிரச்சாரத்திலும் அன்றும் இன்றும் அஞ்ஞான இந்துமத போதனையே பிரபலமாக இருந்து வந்துள்ளது. தீவிரவாதிகள் எனப் பட்டம் சூட்டப்பெற்ற திலகர், அரவிந்த கோஷ் முதல் பண்டாரக் கவிஞன் பாரதிவரை இவர்கள் உயர்த்திப் பிடித்த தேசியம் இந்து தேசியமே.

தேசிய இயக்கத்தின் ஒரே பிரதிநதி நானே என தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட காங்கிரசின் ஒப்புயர்வில்லா தலைவன் காந்தி தான் ஒரு சநாதன இந்து (ஒருவித தீவிரவாத, அதிநம்பிக்கை கொண்ட இந்து) எனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

நான் என்னை ஒரு சநாதன இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில்

1.வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும் இந்து சாத்திரங்கள் எனப்படுகிறவை அனைத்தையும், அவதாரங்களையும், மறுபிறவியையும் நான் நம்புகிறேன்.

2.என் கருத்துப்படி வேதப் பொருளில் தற்போது பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல், நான் வருணாசிரம தருமத்தை நம்புகிறேன்.

3.மக்கள் நம்பும் பொருளில் அல்லாமல், இன்னும் விரிவான பொருளில் நான் பசுவைப் பாதுகாப்பதை நம்புகிறேன்.

4.விக்கிரக ஆராதனையை நான் நம்பாமல் இல்லை. (காந்தி, யங் இண்டியா’வில், அக்.12, 1921)

இதுமட்டுமின்றி, இந்து முசுலீம் ஒற்றுமைக்காக வேண்டுகோள் விடுக்கும் போதும், இரு பிரிவினருக்கும் வேண்டுகோள் விடும் தேசியத் தலைவராக அல்லாமல் ஒரு இந்துத் தலைவராகவே நடந்து கொண்டார். இந்துக்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு, இந்துக்களை நாம் என்றும், முசுலீம்களை அவர்கள் என்றும் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார்.

முசல்மான்களின் உள்ளங்களை நாம் வெல்ல வேண்டுமானால், ஆத்ம சுத்திக்காக நாம் தவம் இயற்றச் செல்ல வேண்டும் (காந்தி, யங் இண்டியா’வில், செப்1924).

காந்தியின் தலைமையில் மட்டுமா காங்கிரசு இந்துமதப் பிரச்சாரம் செய்தது? ஏன், இன்றும்கூட ஆர்.எஸ்.எஸ். இந்துமத வெறியர்களோடு கைகோர்த்து காங்கிரசு இந்துமதப் பிரச்சாரத்தை ஊக்கப்படுத்தியே வருகிறது.

நேரு, கௌல், தர், ஹக்சர், சக்சேனா போன்ற காசுமீரிப் பார்ப்பனர்களும், திரிபாதி, தீக்சித், சர்மா, திரிவேதி, சதுர்வேதி, மிஸ்ரா, பாண்டே போன்ற வட இந்தியப் பார்ப்பனர்களும், பார்த்தசாரதி, நரசிம்மராவ், வெங்கட்ராமன், குண்டுராவ், சேஷன், மணிசங்கர அய்யர் போன்ற தென்னிந்தியப் பார்ப்பனக் கும்பலும் இந்திரா ராஜீவைச் சுற்றி அதிகாரக் கோட்டைகளாக இருப்பதிலிருந்தே காங்கிரசின் தன்மையை நன்கு புரிந்து கொள்ளலாம்.

இந்துமதப் பண்டாரம் விவேகானந்தன் பிறந்த நாளையொட்டி இளைஞர் ஆண்டாகக் கொண்டாடுவது, கங்கையைப் புனித நதி என அறிவித்தது, இந்திரா ராஜீவின் மரணச் சடங்குகளை இந்துமத முறையில் நடத்தியது இவையாவும் எதைக் குறிக்கின்றன? நிச்சயமாக இந்து தர்மத்தையும், இந்து கலாச்சாரத்தையும் நடைமுறைப்படுத்தும் இந்து தேசிய காங்கிரசு என்பதைத் தான்
சர்வாதிகாரிகள்..

இந்து தேசிய காங்கிரசு குறிப்பாக போலிச் சுதந்திர ஆண்டுகளுக்குப் பின்னால், நேரு பாரம்பரியத்தின் கீழ் தனிநபர் சர்வாதிகாரத் தலைமையும், அடக்குமுறைத் தன்மையும் கொண்ட பாசிஸ்ட் கட்சியாக மாறிவிட்டது. எழுபதுகளில் தொடங்கிய இந்த பாசிசத் தன்மை இன்று அதன் உச்சநிலையை எட்டியுள்ளது. காங்கிரசுத் தலைமையின் தனிநபர் சர்வாதிகாரத் தன்மை இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல.

1939ஆம் ஆண்டு பட்டாபி சீத்தாராமையா என்பவரை காங்கிரசுத் தலைவராக்க விரும்பினார் காந்தி. ஆனால் சுபாஷ் போஸ் காந்தியின் விருப்பத்திற்கு எதிராக கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டார்.

1575க்கு 1376 எனப் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இதனால் சீற்றம் கொண்ட சர்வாதிகாரி காந்தி சுபாஷ் போஸின் வெற்றியை ஏற்க மறுத்தார். காங்கிரசை விட்டு வெளியேறி விடுவேன் என மிரட்டினார். இறுதியில் சர்வாதிகாரி காந்தியின் விருப்பப்படியே முடிவை மாற்றியமைத்து பட்டாபி சீத்தாராமையா தலைவராக்கப்பட்டார்.

ரௌடிக் கும்பல்...

கதர் குல்லாய் அணிந்த கனதனவான்களின் கட்சியாக இருந்த காங்கிரசு இன்று கள்ளச்சாராய, கடத்தல், பேட்டை ரௌடிகளின் கூடாரமாக, அடியாட் கும்பலும் குண்டர் படையும் கொண்ட சமூக விரோதக் கட்சியாக மாறிவிட்டது. இன்றைய பெரும்பாலான காங்கிரசு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கள்ளச் சாராயம், கள்ளக் கடத்தல், உளவுச்சதி, கொலை, கொள்ளை, கற்பழிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றப்பதிவேடுகளில் பதிவாகியுள்ளன.

இந்த ரௌடிகளின் கூடாரம் தனிநபர் ஒழுக்கத்திற்குப் பெயர் போனது. அன்று இளம்பெண்களோடு நிர்வாணமாக ஆத்ம பரிசோதனை செய்தார் உத்தமர் காந்தி. இன்று பறக்கும் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணிடமும், இரவில் தனித்துவரும் இளம் பெண்களிடமும், நடிகைகளுடன் அம்மண ஆட்டம் போட்டும் ஆத்ம பரிசோதனை செய்யும் மத்திய, மாநில மந்திரிகள் என தன் தகுதியை உயர்த்திக் கொண்டுள்ளது.

மனிதருள் மாணிக்கம் நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் ஆடிய காதல் களிவெறியாட்டங்கள் அண்மையில் உலகம் முழுவதும் அம்பலப்பட்டு நாறியுள்ளது. மாற்றான் மனைவி மீது மையல் கொண்ட இந்தக் கழிசடைதான் இந்தியக் குழந்தைகளின் மாமா’வாம். நேரு எட்வினா காதல் களியாட்ட விவகாரம் காங்கிரசுத் தலைவர்களின், ஏன் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளின் வெட்கக்கேடான தனிமனித ஒழுக்கத்திற்கு மிகத் துல்லியமான எடுத்துக்காட்டு..

இங்ஙனம், அசிங்கங்களையே ஆபரணமாக அணிந்திருக்கும் காங்கிரசு போலிச் சுதந்திர ஆண்டுகளுக்குப்பின் ஏகாதிபத்திய எசமானர்கள் மற்றும் உள்ளூர் எசமானர்களான தரகு முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் முன்னிலும் மிகுந்த விசுவாசத்துடன் ஊழியம் செய்து வருகிறது. தொடர்ந்து ஆங்கிலேய ஏகபோகத்தின் சுரண்டலைப் பாதுகாத்து வருவதோடு ஜெர்மன், ஜப்பான் முதலான நாடுகளின் ஏகபோக மூ லதனங்கள் நுழைவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் பூதாகரமாக வளர்வதற்கும் வழிவகை செய்துள்ளது. சமூக ஏகாதிபத்தியமாக ரசியா சீரழிந்தபின் நமது நாட்டைச் சுரண்டவும் கொள்ளையிடவும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், காங்கிரசுக் கட்சி ஏகாதிபத்திய ஏவல் நாய்களின் கூடாரம்; தேசவிரோதத் தரகு முதலாளிகளின், நிலப்பிரபுத்துவ நீசர்களின் பாதச் செருப்பு; சமூ க விரோதிகளின் கடைசிப் புகலிடம்; நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களின் உறைவிடம்; இந்து மதவெறியர்களின் பார்ப்பனக் கும்பலின் மடம்; கிஞ்சித்தும் ஜனநாயகமற்ற தனிமனிதச் சர்வாதிகாரிகளின் வாழ்விடம்; மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பிக் காட்டிக் கொடுத்துக் கழுத்தறுக்கும் கயவர்களின் முகாம்; அடக்குமுறைச் சட்டங்களைப் போட்டு மக்களை ஒடுக்கும் பாசிஸ்டுகளின் பாசறை; தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கிவரும் தேசிய வெறியர்களின் கொட்டடி; புரட்சியாளர்களைக் கருவறுக்கும் மக்கள் விரோத கொலைக் கருவி; சாதி, மத, இன ரீதியாக மக்களை மோதவிட்டு உதிரம் குடிக்கும் ஓநாய்களின் மறைவிடம்; பாசிசத்தைச் சுமந்துவரும் பல்லக்கு!

இத்தனைக் குப்பைகளையும் மறைத்துவிட்டு, அவற்றை வரலாற்றுச் சிறப்புமிக்க ஏடுகளாகக் காட்டுவது, நிமிடத்திற்கு நிமிடம் துரோகத்தனத்திலேயே வளர்ந்த காங்கிரசுக் கட்சியைத் தியாகப் பரம்பரையாகச் சித்தரிப்பதும் எத்தர்களின் வேலையே என்பதை இனியும் மறைக்க முடியாது. சாக்கடையில் வாசனைத் திரவியம் ஊற்றி மணத்தைக் கூட்ட முயற்சிப்பதும், விஷத்திலே தேன் கலந்து வியாபாரம் செய்வதும் இனியும் நீடிக்காது. அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டும், அரசியல் பித்தலாட்டத் திட்டங்கள் கொண்டும் நீண்டுவரும் உண்மையின் கூர்முனையைத் தடுத்துவிட முடியாது. உழைக்கும் மக்களின் உக்கிரமான போராட்டத் தீயில் கதர்க் குல்லாய்கள் கருகுவது நிச்சயம். புரட்சிகர சக்திகளின் போராட்டப் பெரும்புயல் நமது நாட்டின் ஆதிக்க சக்திகளான ஏகாதிபத்தியங்களையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்து வீசிக் கொண்டிருக்கிறது.

இந்திய உழைக்கும் மக்கள் புதிய ஜனநாயகப் புரட்சியில் வாகை சூடும்போது காங்கிரசின் மீதமிச்சக் குப்பைகளும் எரிக்கப்படும். துரோக வரலாறு ஒழிக்கப்பட்டுப் புதிய ஜனநாயகப் புரட்சி வரலாறு பொறிக்கப்படும்...


வெள்ளையனே வெளியேறு நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்...

வெள்ளையனே வெளியேறு என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு செய் அல்லது செத்துமடி என தீரமிக்க ஒரு போராட்டத்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி நடத்தினாராம்! கதை விட்டு வருகின்றனர், காங்கிரசுக்காரர்கள்.

காந்தி விடுத்த அறைகூவலின்படி போராட்டத்தில் ஈடுபட்ட ஆகஸ்டு தியாகிகள் என்று தம்மைத்தாமே பீற்றிக் கொள்கின்றனர். அதற்கு இப்போது பொன்விழா கொண்டாடுகிறார்களாம் தமிழக காங்கிரசுக்காரர்கள்.

வரலாற்றைப் புரட்டுவதும் தேசத்துரோகத்தையே தேசபக்தி என்று சித்தரிப்பதும்தான் காங்கிரசின் கலாச்சாரம். இந்தியத் திருநாட்டின் விடுதலை தான் நோக்கம் என்பது திட்டமிட்ட பொய்யே. வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை காந்தியும் காங்கிரசும் போட்ட பின்னணியே வேறு.

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று இட்லர் போலந்தையும் இங்கிலாந்தையும் தாக்கினான். உடனே பிரான்சு ஜெர்மனி மீது போர்ப்பிரகடனம் செய்தது. இவ்வாறு இரண்டாவது உலக யுத்தம் மூ ண்டது.

போர் தொடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் ஆங்கிலேய வைசிராய், இந்தியா போரிலுள்ள ஒரு நாடு என அறிவித்தார். யுத்த செலவிற்காகப் புதிய வரிகளைப் போட்டு இந்திய மக்களைக் கசக்கிப் பிழிய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தயாரானது. தனது இராணுவ பீரங்கிக்குத் தீனி போட இந்தியர்களைத் தீவிரமாகப் பட்டாளத்தில் சேர்க்க ஆரம்பித்தது.

எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்க அவசரச் சட்டங்களைப் போட்டு, அடக்குமுறையை ஏவிவிட தன்னைத் தயார்படுத்திக் கொண்டது; ஒவ்வொரு எதிர்ப்பையும் நசுக்கியது. ஒடுக்கு முறையை மட்டுமே நம்பியிருக்காமல் போருக்குப் பின் அரசியலதிகாரத்தை இந்தியர்களின் கைக்கே மாற்றிவிடுவது என்ற மாயையை ஏற்படுத்தும் பொருட்டு கிரிப்ஸ் கமிசன் போன்ற தூதுக்குழுக்கள் மூலம் அரசியல் மோசடி மூட்டைகளை அவிழ்த்துவிட்டது.

ஜெர்மனி ஜப்பான் ஒரு பக்கமும், இங்கிலாந்து பிரான்சு மற்றொரு பக்கமுமாக நின்று நாசகார யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த இரண்டு ஏகாதிபத்திய முகாம்களும் ஒன்றின் காலனிகளை இன்னொன்று அபகரிக்க நடத்திய யுத்தம்தான் அது.

எனவே, அது உலக மக்களுக்கு எதிரான அநீதியான யுத்தமாகும். இந்த யுத்தத்தில், இரண்டு முகாம்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டியதே ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும். நம்மை அடிமைப்படுத்தியிருந்த இங்கிலாந்து அநியாய யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருந்த நேரம், அதனால் இந்தியா மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதில் பலவீனப்பட்டிருந்த நேரம்.

எனவே, இந்தியா தனது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் வாய்ப்பான நேரம். இந்தியாவின் சுதந்திரத்தை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து பறித்தெடுக்க விரும்பும் எந்த தேசபக்த இந்தியனும் இவ்வாறுதான் எண்ணுவான். யுத்தத்திற்கும் காலனிய ஆட்சிக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தீவிரமாக்குவான்.

ஆனால் காந்தியும் காங்கிரசும் மக்களைத் திரட்டி சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காந்தி, நேரு, ஜின்னா ஆகியோர் தனித்தனியாக விடுத்த அறிக்கைகளில் உறுதி கூறினர்.

1939 செப்டம்பர் 5ல் வைசிராயைச் சந்தித்த காந்தி தனது முழு அனுதாபமும் ஆங்கிலேய ஆட்சிக்கு உண்டு எனச் சொன்னார். அந்தச் சந்திப்பின்போது, நான் அவருக்கு (வைசிராய்க்கு) இங்கிலாந்து பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் யுத்தத்தால் அழியக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கியபோது கண்கலங்கிப் போனேன் என்று காந்தி எழுதினார்.

இங்கிலாந்து ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அதை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்குவது இந்தியாவின் கௌரவத்திற்கே இழிவு ஏற்படுத்தும் செயலாகும் என்று 1940, மே 20ல் நேரு அறிவித்தார். இதே நேரத்தில் காந்தி, பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களது சுதந்திரத்தை தேடவில்லை என்று அறிவித்தார்.

அது மட்டுமல்ல, இங்கிலாந்து ஒரு நியாயமான இலட்சியத்திற்குப் போராடுவதாகவும் அதற்கு இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவித்தார்.

ஆகையினால் நான் இப்போது இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்ன ஆவது? என்று காலனியாதிக்க வாதிக்காகக் கண்ணீர் வடித்தார்.

1941ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதிகூட காந்தி பின்வருமாறு சொன்னார்: இங்கிலாந்தின் நெருக்கடியான நேரம்தான் நமக்குச் சரியான சந்தர்ப்பம் என அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பம்பாய் தீர்மானம் அத்தகைய கொள்கை எதையும் நிராகரிக்கிறது. நாம் எவ்வாறு இங்கிலாந்தை அதன் நெருக்கடியான வேளையில் சங்கடப்படுத்திக் கொண்டே, அகிம்சாவாதிகள் என நம்மை அழைத்துக் கொள்ள முடியும்?

இவ்வாறு காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டு அமைதியாக இருந்தனர். மக்களுடைய மனோநிலை எப்படி இருக்கிறது என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

மறுபக்கம், இந்தியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் மாணவர்களும் யுத்தத்திற்கு எதிராகவும் இந்தியாவை இங்கிலாந்தின் போர் இரதத்தில் மாட்ட வைத்ததற்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஏகாதிபத்தியக் காலனி அரசு கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகளை அமுலுக்குக் கொண்டு வந்து ஏராளமான பேரைக் கைது செய்தது...


இந்த நிலையில் 1942ஆம் ஆண்டு வந்த உலக யுத்தத்தில் ஜெர்மனி ஜப்பான் முகாமான அச்சு நாடுகளின் கை மேலோங்கியது. அனேகமாக ஐரோப்பா கண்டம் முழுவதையும் நாஜி ஜெர்மனி படைகள் படுவேகத்தில் தமது காலடியில் கொண்டு வந்தன. ஜப்பானியப் படையெடுப்பிற்கு முன் மலேசியாவிலும் பர்மாவிலும் இருந்த இங்கிலாந்தின் காலனிய அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன. ஜப்பானியப் படைகள் படுவேகத்துடன் இந்திய எல்லைவரை முன்னேறியது.

இவையெல்லாம் சேர்ந்து அச்சு நாடுகள்தான் உலக யுத்தத்தில் இறுதி வெற்றியடையும் என்று ஒரு பிரிவு இந்திய தரகு முதலாளிகளையும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளையும் நம்ப வைத்தன. ஜப்பானின் அடுத்த ஒரு தாக்குதலில் இந்தியா அதன் வசம் வந்துவிடும் என்று இவர்கள் உறுதியாக நம்பினர். உண்மை நிலையும் அதுவாகத்தானிருந்தது.

எனவே, இனிமேலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக இருக்க அவர்கள் விரும்பவில்லை. வெற்றி பெறப்போகும் புதிய எஜமானனான ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்குச் சேவகம் செய்ய விரும்பினர். ஜப்பானிய மூலதனத்துடன் புதிய உறவுகளை உருவாக்க எண்ணினர். இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஆங்கிலேயருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க விரும்பினர்.

சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை விட்டுத் தப்பத் துடிக்கும் எலிகளைப் போல இருந்தனர். காந்தியின் தளபதியான பட்டாபி சீதாராமையாவின் வார்த்தைகளில் இந்தச் சிந்தனை பின்வருமாறு பிரதிபலித்தது: இந்தியா ஒரு மூ ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுடனோ, உதிர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்துடனோ தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமா?

ஜப்பானின் தாக்குதல் வேகத்தைக் கண்டு காலனிய ஆங்கிலேய அரசாங்கமும் பீதியுற்று, அசாமையும் வங்காளத்தையும் கை கழுவியது. அதற்கு முன் அந்தப் பகுதிகளில் எதிரிப்படைகளுக்குப் பயன்படலாம் எனக் கருதப்படுகின்ற கட்டிடங்களை இடித்துத் தள்ளுதல், பயிர்களை எரித்தல் ஆகியவற்றை — நிலத் தீய்ப்புக் கொள்கையை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கையாண்டது. பீகாரில் புதிய தற்காப்பு அரண்களைக் கட்டியது. இவையெல்லாம் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடையே பீதியை உருவாக்கிற்று.

நிலைமையைக் கணிப்பதிலும் செயல்படுவதிலும் காங்கிரசிற்குள் மூ ன்று பிரிவினர் தோன்றினர். ஜப்பானிய முகாம் வெற்றி பெற்று இந்தியாவைக் கைப்பற்றும் என உறுதியாக காந்தி நம்பினார். எனவே, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி ஜப்பானியரோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டுமென்று விரும்பினார்.

நேரு, ராஜாஜி, ஆசாத் ஆகியோர் ஆங்கிலேய ஏகாதிபத்திய முகாமே உலக யுத்தத்தில் இறுதி வெற்றி பெறும் என நம்பினார்கள். எனவே, தொடர்ந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று வாதாடினர். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு பிரிவினர் பாசிச ஜெர்மனி ஜப்பான் முகாமை நேரடியாக ஆதரித்துப் படைதிரட்டிக் கொண்டு களத்திலேயே இறங்கினர்.

1940இல் இட்லரிடம் ஹாலந்து சரணடைந்ததிலிருந்து காந்தியின் பார்வையில் இட்லரின் நிலை “சீராக உயர்ந்து கொண்டிருப்பதாகவும்” யுத்தத்தில் இங்கிலாந்து தோற்றுவிடும் என்று காந்தி நம்புவதாகவும்4 ஜி.டி. பிர்லாவிடம் காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாய் தெரிவித்தார்.

1940ஆம் ஆண்டு மே 26இல் வைசிராய் லின்லித் கௌவுக்கு காந்தி எழுதிய கடிதத்தில், சமாதானத்தை நாடுமாறு ஆங்கிலேய அமைச்சரவைக்கு ஆலோசனை கூறினார். மேலும் அக்கடிதத்தில், சித்தரிக்கப்படுவதைப் போல இட்லர் அவ்வளவு மோசமான மனிதராக இருப்பார் என்று நான் நம்பவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் இங்கிலாந்து மக்களை, “நீங்கள் எல்லோரும் உங்களையோ, மானுடத்தையோ காப்பாற்ற முடியாத உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட வேண்டும். போராடுவதற்குப் பதில் திருவாளர் இட்லரையும் சீமான் முசோலினியையும் வரவேற்று உங்களுடைய நாடுகள் என்று சொந்தம் கொண்டாடும் பகுதிகளில் அவர்களுக்கு எது வேண்டுமா அதை எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தி காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

ஆங்கிலேயர்களிடம் காந்திக்கு இருந்த முந்தைய அனுதாபம் நாஜிப் படைகளுக்கு அமைதியாகக் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களிடம் ஆங்கிலேயர்கள் சரணடைவதே சிறந்தது என அறிவுறுத்துவதாகவும் உருமாற்றம் அடைந்தது. 1942 ஏப்ரலில் காந்தி, தாம் முன்பு இங்கிலாந்திற்கு முற்றிலும் கொடுத்து வந்த தார்மீக ஆதரவை இப்போது கொடுக்க மனம் மறுக்கிறது. என்று கூறினார்.

ஆம், மகாத்மா’வின் அந்தரங்கக் குரல் இப்போது முற்றிலும் வேறுபட்ட பாதையை மேற்கொள்ளக் கட்டளையிட்டது. எனவே, ஆங்கிலேய அரசுப் பிரதிநிதி கிரிப்ஸ் திரும்பிச் சென்ற பிறகு காந்தி, காங்கிரசின் காரியக் கமிட்டிக்கும் அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கும் நகல் தீர்மானம் ஒன்றை, ஏப்ரல் 27 தொடங்கி நிகழவிருந்த அலகாபாத் மாநாட்டிற்கு ஏற்றுக் கொள்ள அனுப்பினார்.

அத்தீர்மானத்தில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்...

அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி, இந்தியாவை இனியும் இங்கிலாந்தால் பாதுகாக்க முடியாது எனக் கருதுகிறது… ஜப்பானின் சண்டை இந்தியாவுடனானது அல்ல… இந்தியா விடுதலை அடையுமானால் அதன் முதல் நடவடிக்கை ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருக்கும். இக்கமிட்டி ஜப்பானிய அரசு மற்றும் மக்களுக்கு இந்தியா அவர்களுடனோ வேறெந்த நாட்டுடனோ எவ்விதப் பகைமையும் கொண்டிருக்கவில்லை என உறுதியளிக்கிறது.

வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், கிருபளானி போன்றோரால் ஆதரிக்கப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தை நேரு பின்வருமாறு விமரிசித்தார்: நாம் பாபுவின் (காந்தியின் மொர்) அணுகுமுறையை ஏற்போமாகில், அச்சு நாடுகளின் மறைமுகக் கூட்டாளிகளாகி விடுவோம். இத்தீர்மானத்தின் முழுச் சிந்தனையோட்டமும் பின்னணியும் ஜப்பானுக்குச் சாதகமாக இருக்கிறது. ஜப்பானும் ஜெர்மனியும் போரில் வெல்லும் என்று காந்தி நம்புகிறார். இந்த நம்பிக்கை அவரது முடிவை அவரையும் அறியாமலேயே ஆளுமை செய்கிறது.

ராஜேந்திர பிரசாத்தால் திருத்தப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தைப் பற்றி கருத்து கூறும்போது ராஜகோபாலாச்சாரி, ஜப்பான் ஆங்கிலேயரின் வெளியேற்றத்தால் உருவாக்கப்படும் வெற்றிடத்தை நிரப்பும்… இத்தீர்மானம் சொல்வது போல் ஜப்பானின் கரங்களில் ஓடி விழுந்து விடக் கூடாது.

காந்தியோ மிகவும் அவசரப்பட்டார். மே 1942ல் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் காந்தி கூறினார்: இந்த ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட, கட்டுப்பாடான அராஜகம் (அதாவது ஆங்கிலேய ஆட்சி) ஒழிய வேண்டும். இதன் விளைவாக முற்றிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையுமானாலும் அதை நான் எதிர்கொள்வேன். மேலும் 1942 ஜூன் 7ஆம் தேதியிட்ட அரிஜன் ஏட்டில் அடிமை ஓட்டுனர்களை எதிருங்கள் என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். 1942 மே 28இல் ராஷ்ட்ரிய யுவக் சங் எனும் அமைப்பினுடைய உறுப்பினர்களிடம், இந்த அடிமைத்தனத்தின் பேரழிவிலிருந்து விடுவித்துக் கொள்ள நாம் வன்முறையைக் கூட ஏற்கலாம் என்றார் காந்தி.

இவ்வாறு காந்தி, படேல், பிரசாத் ஆகியோர் ஜப்பானியப் படைகளின் வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கி ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி அதன் மூலம் தாங்கள் ஜப்பானுடன் ஒப்பந்தத்திற்கு வர இங்கிலாந்தை நெருக்கியபோது, நேருவும் ஆசாத்தும் நேசப்படைகள் (அமெரிக்கா இங்கிலாந்து பிரான்சு முகாம்) இறுதி வெற்றியடையும் என உறுதியாக நம்பினர். நேரு சியாங்கே ஷேக்குடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆங்கிலேய ஆதிக்கமே தொடர வேண்டும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென்பதல்ல என்ற நேருவின் கருத்தை ஆதரித்தார் ராஜாஜி. முசுலீம் லீகுடன் அவர்களின் தனிநாடு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில் இணைந்து, ஆங்கிலேய ஆட்சிக் குடையின் கீழ் ஒரு தேசிய அரசாங்கத்தை நிறுவி ஜப்பானை எதிர்க்க வேண்டுமென்று வாதாடினார்.

காங்கிரசின் மேல்மட்டத் தலைமையில் ஏற்பட்ட இந்தப் பிளவு இந்தியத் தரகுப் பெரு முதலாளிகளின் முரண்பட்ட விருப்பங்களையே பிரதிபலித்தது. லால் சந்த், ஹீராசந்த் போன்றபல குஜராத்தி, மார்வாரி மில் முதலாளிகள் ஜப்பானிய எஜமானர்களை வரவேற்கக் காத்திருந்தபோது மற்றொரு பிரிவு, ஆங்கிலேய ஆதரவுக் குழுவாகவே நீடித்தது. மூன்றாவதாக ஒரு பிரிவு உயர்ந்து கொண்டிருந்த அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள முன்வந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கும் பிறந்த கள்ளக் குழந்தையான காங்கிரசுக் கட்சி, இந்தியாவின் சுதந்திரத்திற்கு என்றுமே பாடுபட்டதில்லை. மாறாக, தரகுப் பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் அரசியல் பிரதிநிதியான காங்கிரசு, சுதந்திர வேட்கையால் தன்னெழுச்சியாகப் போராடிய இந்திய மக்களின் தீரமிக்க போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தது; துரோகமிழைத்தது. மக்களுடைய போராட்டங்களைத் திசை திருப்பி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கேடயமாக விளங்கியது. காலனிய ஆட்சியைப் புதிய அடித்தளங்களில் தக்க வைக்கும் கருவியாகச் செயல்பட்டது. இதுவரை ஒரே முகாமாக இருந்த காங்கிரசில்தான், ஜப்பானின் படுவேகமான முன்னேற்றம் மேற்சொன்ன பிரிவுகளைக் கொண்டு வந்தது.

இந்தப் பிரிவினர் கொண்டிருந்த கருத்து வேறுபாடெல்லாம் எந்த ஏகாதிபத்திய முகாம் வெற்றி பெறும் என்ற கணிப்பில்தான். ஆனால் வெற்றி பெறும் முகாமிற்கு இந்தியா அடிமையாக இருக்க வேண்டுமென்பதில் கருத்து ஒற்றுமையிருந்தது.

வெள்ளையனே வெளியேறு என்று காந்தியும் காங்கிரசும் அறைகூவல் விடுத்ததன் பின்னணி இதுவே. எதிர்ப்பு தெரிவித்த நேரு, ஆசாத் ஆகியோரை காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டியும் பிறவாறு உருட்டியும் காந்தி தனது தீர்மானத்தை ஏற்குமாறு செய்தார். ஓர் எதேச்சதிகாரியாகவே நடந்து கொண்டார்.

இப்படித்தான் ஏகமனதாக, வெள்ளையனே வெளியேறு தீர்மானம் பம்பாயில் நடந்த காங்கிரசுக் கமிட்டிக் கூட்டத்தில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி நிறைவேறியது...


ஒரு பக்கம் ஜப்பானிய புது எஜமானர்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறோம் என்று நிரூபிக்க செய் அல்லது செய்துமடி என்று தீவிரமாக காந்தி அறைகூவல் விட்டாலும் இன்னொரு பக்கம் மக்களின் போராட்டங்கள் தனது கையை விட்டுப் போய்விடக் கூடாது என்பதிலும் குறிப்பாக இருந்தார். எனவேதான் போராட்டத்திற்கு எவ்விதத் தயாரிப்போ, திட்டமோ தீட்டப்படவில்லை. பேச்சு வார்த்தை நடத்துவதே நோக்கம் என்று சொல்லப்பட்டது.

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் நான் பெரும் நடவடிக்கைகளைத் தொடங்கும் வரையாவது இந்திய அரசாங்கம் காத்திருக்க வேண்டும். உருப்படியான ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் முன் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்ப பூரணமாகச் சிந்திப்பதாய் நான் வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார். போராட்டம் தொடங்கும் முன், பிரச்சினை எழுவதற்கு முன், முதல் நடவடிக்கையாக வைசிராய்க்குப் பேச்சுவார்த்தை வேண்டி எழுதப்படும் என்று காங்கிரசால் விளக்கம் தரப்பட்டது. காங்கிரசுக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வைசிராய்க்குக் கடிதம் எழுதத் தொடங்கினார்கள். முடிக்கும் முன்பே ஆகஸ்ட் 9ம் தேதி காந்தி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு சட்ட விரோதமான ஸ்தாபனம் என அறிவிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் வெற்றி என்று படேல் சவடால் அடித்தார்.

காங்கிரசுத் தலைவர்களின் கைது மக்களது போராட்டங்களைத் தூண்டிவிடும் என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குத் தெரியும். எனினும், காங்கிரசுத் தலைவர்கள் எவ்வித முன் தயாரிப்பும் செய்யாததால் தன்னெழுச்சியான திட்டமிடாத போராட்டங்களைச் சுலபமாக அடக்கி விடலாம் என ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கருதியது.

ஆனால் இந்திய மக்களோ, காந்தியின் நயவஞ்சக விருப்பத்தை மீறி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தியின் உபதேசங்களை மீறியும் அவருடைய கண்டனங்களைப் புறக்கணித்தும் மக்கள் நாடெங்கும் வன்முறைக் கிளர்ச்சிகளைத் தொடங்கினர். இந்தியாவெங்கும் கொந்தளிப்பு; குழப்பம்; தனிப்பட்ட பிரிவுகளும், குழுக்களுமே இப்போராட்டங்களை நடத்தின.

இதுதான் புகழ்பெற்ற ஆகஸ்ட் போராட்டம்; இந்தப் போராட்டத்தை காங்கிரசு ஆரம்பிக்கவில்லை; மாறாக, இந்தியாவின் உழைக்கும் மக்கள் இப்போராட்டத்தினை நடத்தினர்; காந்தியும் காங்கிரசும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவே செயல்பட்டனர். ஆனால் இன்றோ, ஆகஸ்ட் தியாகிகள் என வெட்கமின்றி காங்கிரசுக்காரர்கள் பீற்றிக் கொள்கிறார்கள். இந்தியாவை புதிய எஜமானனுக்கு (ஜப்பானுக்கு) அடகு வைக்க வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போட்ட காந்தியும் காங்கிரசுக்காரர்களும் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் காட்டிக் கொள்வது கயமைத்தனத்தின் உச்சமாகும்.

1943, 44ம் ஆண்டுகளில் யுத்தத்தின் போக்கு மாறியது; உலக அளவில் ஜெர்மனி ஜப்பான் பாசிச முகாம் வீழ்ச்சியடையத் தொடங்கியது; இங்கிலாந்து பிரான்சு முகாம் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தது; ஜெர்மனி ஜப்பான் முகாமினுடைய வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. பார்த்தார் காந்தி! அடித்தார் ஒரு அந்தர் பல்டி.

அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையாகிவிடப் போகிறதே என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத் திற்கு மீண்டும் தன் எஜமான விசுவாசத்தைக் காட்ட வாலை ஆட்டினார். நடந்த போராட்டங்களுக்குத் தான் பொறுப்பல்ல என்று வலியச் சொல்ல ஆரம்பித்தார். 1943ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உள்துறைக்கு காந்தி எழுதிய கடிதத்தில், மொத்தமாகப் பெருமளவில் காங்கிரசுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்களை அடக்கிக் கொள்ளும் ஆற்றலை இழக்கும் அளவிற்கு மக்கள் சினத்தால் வெறிகொண்டு விட்டதாய்த் தோன்றுகிறது. நடந்துள்ள நாசத்திற்கு காங்கிரசு பொறுப்பல்ல; அரசாங்கமே பொறுப்பு என்று நான் கருதுகிறேன்.

இந்தியா முழுவதும் கைதுகள் செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிக வன்முறையாக இருந்ததால், காங்கிரசிடம் பரிவு உள்ள மக்கள் தன்னடக்கத்தை இழந்து விட்டார்கள். இந்தத் தன்னடக்க இழப்பிற்கு காங்கிரசு உடந்தை என்று பொருளாகி விடாது என்று தெரிவித்தார்.

1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் நடந்த அகில இந்திய காங்கிரசுக் கமிட்டி கூட்டில் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்புவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அது முழுமையாக வரையப்படாது நின்றுவிட்டது. 1943 ஜூலை 15ல் காந்தியார் இந்த வரையப்படாத சுற்றறிக்கையைத் தயக்கத்துடன் மேற்கோள் காட்டினார்; அதில் பின்வருமாறு இருந்தது.

மகாத்மா முடிவு செய்யும் வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது; எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். ஆயத்தமாக இருங்கள்; ஏற்பாடு செய்யுங்கள்; விழிப்போடு இருங்கள்; ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்.

காங்கிரசின் சார்பில் நேரு, வல்லபாய் படேல், ந.பி.பந்த் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட ஓர் அதிகாரபூர்வமான அறிக்கை 1945, செப்டம்பர் 21ல் வெளியாயிற்று. அதில், அகில இந்தியக் காங்கிரசு கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு, ஆகஸ்டில் நடந்த போராட்டங்களுக்கும் காங்கிரசிற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை எனக் காலனியாதிக்கவாதிகளிடம் தன்னை நல்ல பிள்ளை போல காட்டிக் கொண்ட காங்கிரசு, ஆகஸ்டு மாதத்திலும் அதை அடுத்த மாதங்களிலும் நடைபெற்ற தலைமையற்ற தன்னெழுச்சியான நிகழ்ச்சிகளைப் பின்னாளில் ஆகஸ்டு போராட்டம் என ஏற்பதென்று முடிவு செய்தது. அதாவது, காந்தியின் கண்டனங்களைப் புறக்கணித்து விட்டு மக்கள் நடத்திய போராட்டங்களையே காந்தியும் காங்கிரசும் நடத்திய ஆகஸ்டு போராட்டம் என சுவீகரித்துக் கொண்டனர்.

உண்மையான விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு, இந்திய உழைக்கும் மக்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்து நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கண்டனம் செய்த காந்தியும் காங்கிரசும், பின்னர் அந்தப் போராட்டங்களையே காங்கிரசின் தியாகமாக, விடுதலைப் போராட்டமாகச் சித்தரித்துச் சுவீகரித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வக்கிரம். வரலாற்றுப் புரட்டு.

உண்மையில் வெள்ளையனை இந்த நாட்டைவிட்டு விரட்டுவதுதான் காந்தியின் நோக்கமென்றால், சிறையிலிருந்து 1944ஆம் ஆண்டு காந்தியார் வெளிவந்தபின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் காந்தியாரோ ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது என்று சொன்னார். ஏனென்றால், 1944ஆம் ஆண்டில் 1942ஆம் ஆண்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்று விளக்கெண்ணெய் விளக்கமளித்தார்.

எனவே, போர் முடியும் தறுவாயில் (ஆகஸ்ட் 1945) உலகெங்கும் மக்கள் விடுதலையை நோக்கி முன்னேறிய போது காந்தியாரின் துரோகத்தனத்தால் இந்தியா போரின் தொடக்கத்தில் இருந்தது போல் ஓர் அடிமை நாடாகவே போரிலிருந்து வெளிப்பட்டது.

தனது புதிய எஜமானர்களான ஜெர்மனி, ஜப்பான் ஏகாதிபத்தியங்களை வரவேற்கவே வெள்ளையனே வெளியேறு என்று காந்தி சொன்னார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோ எவ்வித நிபந்தனையும் இன்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குப் பக்கபலமாக நின்று போருக்கான உதவிகளைச் செய்தது; யுத்த நிதி திரட்டிக் கொடுத்தது; படைக்கு ஆட்களைச் சேர்த்தது; வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் உற்பத்தியைப் பெருக்கச் சொல்லியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இவ்வாறு காந்தியைப் போலவே இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் மக்களுக்குத் துரோகமிழைத்தது. ஆனால் காங்கிரசுக்காரர்களோ தாங்கள் 24 காரட் சுத்த தேச பக்தர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள்தான் துரோகிகள் என்றும் நேற்றுவரை பிரச்சாரம் செய்து வந்தனர். இன்று காங்கிரசும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பொன் விழா கொண்டாடுகிறார்கள். ஆக, தங்களைத் தேசத்துரோகிகள் என்று காங்கிரசு சொல்லி வந்ததை இரு போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நேற்றுவரை துரோகிகளாய் இருந்த கம்யூனிஸ்டுகள் இன்று திடீரெனத் தேச பக்தர்களாக மாறிவிட்டார்கள் என்று காங்கிரசு சொல்கிறது.

இதுதான் காங்கிரசின் தேசிய கலாச்சாரம். இதுதான் போலிக் கம்யூனிஸ்டுகளின் புரட்சிக் கலாச்சாரம்.

புரிந்து கொள்வோம் இவர்களை.
புறந்தள்ளுவோம் இவர்களை..

மேலும் சில ஆதாரங்கள்..

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் பகத்சிங்கும் இந்திய அரசியலும் (வெளியீடு: கனிமுத்து பதிப்பகம், 727, அண்ணாசாலை, சென்னை 600 006) என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள சில ஆதாரங்கள்..

மகாராணியின் அனுகூலமான என்றும் மறப்பரிய, கீர்த்திமிக்க ஆட்சியில் ஐம்பது வருடம் முடிவு பெற்றதைக் குறித்துச் சக்கரவர்த்தினியிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன், பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மீது அம்மகராணி இன்னும் பல வருஷம் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது. (1886 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரசு மாநாட்டின் முதல் தீர்மானம்.).

மகாராணியார் பல பல வருஷம் வாழவேண்டுமென்று கூட இல்லை. பல பல வருஷம் நம்மை ஆள வேண்டுமென்றே நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஆங்கிலேயர்களை வெகுவாக மகிழ்வித்திருக்கும். (பக். 6566).

நாடெங்கும் இருந்த புரட்சிகர நிலைமைகளில் 1930இல் காங்கிரசு மீண்டும் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கியது (நாம்).

1931ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அப்போராட்டம் மிகப் பெரிய வலுவோடு நடை போட்டுக் கொண்டிருந்தது. 1931 மார்ச்சில் காங்கிரசு பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சமாதானம் செய்து கொண்டு போராட்டத்தை நிறுத்திவிட்டது.

1922இல் திடீரென அறப்போர் நிறுத்திக் கொள்ளப்பட்டது மாதிரியே இப்போதும் நடந்தது. ஒவ்வொரு முறையும் வெண்ணெய் திரண்டு வருகிற போதெல்லாம், தாழி கவனமாக உடைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இம்முறை ஒரே ஒரு வித்தியாசம் தென்படுகிறது. 1922இல் காந்தியாரே, யாரையும் கலக்காமல், போராட்ட நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இம்முறையோ, அரசாங்கத்திற்கும், காங்கிரசுக் கட்சிக்கும் இடையில் ஒரு சமரச உடன்பாடு  ஏற்கப்பட்டு பின் போராட்டம் நிறுத்தப்பட்டது (பக்.75).

பெரிய வளர்ச்சிதான். மொத்தக் கட்சியே துரோகக் கும்பலாக வளர்ந்ததைக் குறிப்பதே இது.

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்ட தேசாபிமானமிக்க போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்ட காங்கிரசு கட்சி, அராஜகம் புரிந்த போலீசார் மீது விசாரணை கூடத் தேவையில்லை என்று அரசு கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டது. (பக்.78).

காங்கிரசுத் தலைவர்களில் ஒருவர் தாக்கப்பட்டால் நமக்கென்ன என நினைக்கும் மனப்பான்மை புரட்சியாளர்களிடம் இல்லாமலிருந்தது என்பதையே, சாண்டர்ஸ் கொலை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இன்னொரு செய்தியையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். லஜபதிராய் புரட்சியாளர்களிடம் அன்பு கொண்டிருந்தார் என்றாலும், தன்னுடைய கடைசி காலங்களில், கட்சியின் போக்கிற்கு எதிராகச் செயல்பட விரும்பாமல், புரட்சியாளர்களைத் தன் வீட்டிற்கு வருவதற்குக் கூட அனுமதிக்கவில்லை என்று பகத்சிங்கின் நண்பர் சிவவர்மா தன் நூலில் குறித்துள்ளார்.

ஆனால் புரட்சியாளர்களின் மீதான காங்கிரசுக் கட்சியின் பார்வை, இவ்வளவு நட்புரிமை கொண்டதாக இல்லை. அது மட்டுமின்றி தங்கள் தலைவர்களில் ஒருவரான லஜபதிராயைக் கொன்றவர்களிடம் காங்கிரசு நடந்து கொண்ட முறை வினோதமாய் இருந்தது.
அரசாங்கம் தன் அறிக்கையில், லாலாஜியின் மீது சில அடிகள் விழுந்திருக்கலாமென்றும், ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று நம்பப்படுவதாகவும் குறிப்பிட்டது.

மேலும், இருதய நோயின் காரணமாகவே லாலாஜி காலமானார் என்றும் அரசாங்கம் சொன்னது.

ஆனால் 19.11.28 ஆம் தேதி தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள மருத்துவர்களின் அறிக்கையோ, இருதய நோய்க்கான எந்த அறிகுறியுமில்லையென்றும், நெஞ்சில் பட்ட தடியடிகளே சாவிற்குக் காரணமாகி இருக்கலாம் என்றும் விளக்கியது.

சினங் கொள்ள வேண்டிய காங்கிரசுத் தலைமை அரசாங்கத்தைப் புகழ்ந்து கொண்டிருக்க, கருத்து வேறுபாடு கொண்ட புரட்சியாளர்கள் பழிக்குப் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டனரென்பது, கொடூரமான முரணாகவே  உள்ளது. (பக். 79,80).

பகத்சிங்கும் அவரது புரட்சிகரத் தோழர்களும் வரிசையாகக் கைது செய்யப்பட்ட பின், சிறையில் அவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், காங்கிரசின் அறப்போராட்டங்களை எல்லாம்விட மிக உன்னதமானதாக இருந்தது….

உண்ணாவிரதப் போராட்டத்தில், 63 நாட்கள் உயிரோடு போராடி இறுதியாக 13.09.1929 அன்று தோழர் ஜதீந்திர நாத் தாஸ் காலமானார். அவருடைய வீரமரணத்தைப் புகழாத பத்திரிக்கைகளே இல்லை….

இப்படி நாடே போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்த மாவீரனைப் பாராட்டி ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற முன்வரவில்லை காங்கிரசுத் தலைமை… (பக் 81,82).

இன்றைய அரசியல் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிலரும் காந்தி, பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்கப் பாடுபட்டார் என்றே கூறுகின்றனர்.

ஆனால் பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்க காந்தி பாடுபட்டார் என்பதற்கு எழுத்து வடிவில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. காந்தியார், அரசாங்கத்திற்கு எழுதியுள்ள எந்தக் கடிதத்திலும் இப்படி ஒரு வேண்டுகோள் இல்லவே இல்லை.

தன்னிடம் நேரில் பேசும்போது குறிப்பிட்டதாகவே இர்வின் பிரபுவும் கூறுகிறார்.

பேச்சுவாக்கில் சொல்லிவிட்டுப் போகிற விசயமா இது? நேரில் கூறியதாகச் சொல்லும் காந்தியார், அதையே ஏன் எழுத்து வடிவில் ஒரு வேண்டுகோளாக வைத்திருக்கக் கூடாது? அல்லது காந்தி இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பு அதை ஏன் ஒரு நிபந்தனையாக ஆக்கியிருக்கக் கூடாது? (பக் 88).

காந்தியார் தண்டனையைக் குறைக்கச் சொன்னாரா என்பது ஒருபுறமிருக்க, தண்டனையை எப்போது நிறைவேற்றலாம் என்று அரசுக்கு யோசனை சொல்லியிருக்கிற விசயம் அரசாங்கக் கோப்பில் உள்ளது.

இச்செய்தியை தி ட்ரிபியூன் (The Tribune) பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது.

பட்டாபி சீதாராமையாவும் பட்டும் படாமல் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தண்டனையைக் குறைக்க காந்தியார் முயன்றும், இர்வின் பிரபுவால் அந்த விசயத்தில் உதவ இயலாமல் போய்விட்டது. Lord Irvin was unable to help in the matter என்றும், கராச்சி காங்கிரசு முடியும்வரை வேண்டுமானால் தண்டனையை ஒத்திப் போடுவதாகக் கூறியதாகவும் காந்தியாரோ, அவ்விளைஞர்களைத் தூக்கிலிடுவதாக முடிவு செய்துவிட்டால் காங்கிரசு மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிடுவது தான் நல்லது என்று உறுதியாகக் கூறிவிட்டதாகவும் சீதாராமையா எழுதுகிறார். (பக். 88,89).

எப்படியோ காந்தியார் தான் ஒரு அருமையான ராஜதந்திரி என்பதை நிரூபித்துவிட்டார். ஒருக்கால், இர்வின் பிரபு கூறிய மாதிரி, மாநாட்டுக்குப் பிறகு தூக்குத் தண்டனை என்று வைத்திருந்தால், பெரிய குழப்பம் ஏற்பட்டு, காந்தி இர்வின் ஒப்பந்தம் நிறைவேற, பகத்சிங்கின் தண்டனையைக் குறைப்பது ஒரு நிபந்தனையாக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காந்தியார் கூறியபடி, மாநாட்டுக்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டுவிட்டதால், வெறும் இரங்கல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு, ஒப்பந்தத்தை மாநாடு ஏற்றுக் கொண்டு விட்டது. (பக்.94).

இப்படி ஒரு கொடூரமான, துரோகத்தனத்தை என்னவென்று சொல்வது? கச்சிதமாக காந்தியும், காங்கிரசும் என்று சொல்லலாம் (நாம்).
மக்கள் விரோதக் காங்கிரசு கட்சியைப் புறக்கணிப்போம்.

அகிம்சாமூர்த்தி காந்தியின் துரோகங்களை அம்பலப்படுத்துவோம்.
போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்.
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.

வெளியீடு
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
விலை ரூ 15
காந்தி :வழிகாட்டியல்ல, சோளக்காட்டு பொம்மை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.