சில அமைச்சரவை இடங்களை ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு வழங்குவதோடு டீலை முடிக்கவே எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி விரும்புகிறதாம்.
ஓ.பி.எஸ் கோஷ்டியை கழற்றிவிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் (அம்மா கட்சி) சசிகலா முதல்வராக முயன்றதால் கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்துவிட்டு சசிகலாவுக்கு எதிராக கிளம்பினார்.
சசிகலாவின் எழுச்சியை தடுக்க முற்பட்ட மத்திய அரசும், பன்னீருக்கு பக்கபலமாக இருப்பதாக வாக்குறுதியளித்திருந்ததாம். இதையடுத்தே புயலாக சீறியுள்ளார் பன்னீர்செல்வம்.
ஆனால் 20 எம்.எல்.ஏக்களை கூட பன்னீர்செல்வத்தால் தன் பக்கம் ஈர்க்க முடியவில்லை. எனவேதான் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு எளிதாக தப்பிவிட்டது. பன்னீர்செல்வத்தால் குறைந்தபட்சம் 20 எம்எல்ஏக்களை கூட ஈர்க்க முடியவில்லையே என்ற அதிருப்தி பாஜக தலைவர்களுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல்வராகிவிடலாம் என திட்டமிட்டார் அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்த திட்டத்தால் ஆடிப்போனார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போல வெளிப்படையாக அதை காட்டிக் கொள்ளவில்லை. காலம் வரட்டும் என காத்திருந்தார்.
சசிகலா சிறையிலுள்ள நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்த தினகரன் கையில் ஆட்சி செல்வதை பாஜக விரும்பவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி ஐடி ரெய்டுகள் சீறிப்பாய, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க டிடிவி தினகரன் தரப்பு வைத்திருந்த பிளான் அத்தனையும் ஃபிளாப்பானது. இதை உன்னிப்பாக கவனித்த தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை ரத்து செய்தது.
அப்படியும் டிடிவி தினகரன் விடுவதாக இல்லை. முதலில் முதல்வராகிவிடலாம், பிறகு எம்.எல்.ஏவாகலாம் என திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் டெல்லியில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் டிடிவி தினகரனை கை காட்ட விஷயம் சூடு பிடித்தது. ஏற்கனவே ஃபெரா வழக்கும் நெருக்கவே, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தினகரன் மீது இருந்த பயம் போய்விட்டது. எந்த நேரத்திலும் சிறை செல்லப்போகும் ஒருவருக்காக நாம் இனியும் பணிய தேவையில்லை என முடிவு செய்து எதிர் குரல்களை எழுப்பினர். இனியும் டெல்லி லாபியின் முன்னால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த தினகரன் சரண்டர் ஆகிவிட்டார். அதிமுகவைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.
இதையடுத்து ஓ.பி.எஸ் டீமை விட அதிகமாக குஷியானது எடப்பாடி கோஷ்டிதான். இப்போது எடப்பாடி பதவிக்கு போட்டியில்லை. ஓ.பன்னீர் செல்வத்திடமும் அரசை ஆட்டுவிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் பலமில்லை. சசிகலா குடும்பம் வெளியேறியதால் இப்போது போட்டியில்லாத ராஜாவாகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இருப்பினும் மத்திய அரசின் செல்லப்பிள்ளை என்பதால் ஓ.பி.எஸ் அணியோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களையும் இணைத்து ஆட்சி நடத்துவது நல்லது என்பது எடப்பாடியார் திட்டமாக இருந்தது.
ஆனால் பன்னீர்செல்வம் தரப்பிலோ, முதல்வர் பதவி, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை, ஜெயா டிவி நிர்வாகம் என அனைத்து முக்கிய விஷயங்களும் தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும், முக்கிய அமைச்சர் துறைகளும் வேண்டும் என ஒரேடியாக பெரிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனராம். இதற்கான தேவை எழவில்லை என்பது எடப்பாடி அணியின் கருத்தாக உள்ளது. சில அமைச்சரவை இடங்களை ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு வழங்குவதோடு டீலை முடிக்கவே எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி விரும்புகிறதாம்.
சுமார் 12 எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுள்ள பன்னீர்செல்வத்தைவிட, ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து காரியம் சாதிப்பதே நல்லது என்ற நிலைக்கு பாஜக தலைவர்களும் வந்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பாஜக தலைவர்களிடம் நடைபெற்ற லாபியில் இந்த முடிவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கொடுப்பதை பெற்றுக்கொண்டு வருவதாக இருந்தால் வரலாம், அல்லது உங்கள் கோஷ்டி தேவையில்லை என்ற எண்ணத்தில் எடப்பாடி அணி ஓ.பி.எஸ் அணியை அணுக தொடங்கியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்திற்காக, சசிகலா குடும்பத்தை நாங்கள் ஒதுக்கவில்லை. இது அவரது வெற்றி கிடையாது. விட்டால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெற்றிக்கே நான்தான் காரணம் என பன்னீர் சொல்வார் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக இன்று ஒரு பேட்டியளித்துள்ளது ஓ.பி.எஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் என்ன செய்வது என யோசித்து வருகிறது ஓ.பன்னீர்செல்வம் அணி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.