யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பது தான்...
போகுமிடம் என்றால் என்ன?
மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்த பின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்து விடும்.
அத்தகைய உயர்நிலையை அறிந்து கொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் பல நபர்களின் வாக்கு மூலங்கள் முழுமையாக நமக்குக் கிடைத்து இருக்கிறது.
இருப்பினும் பெரும்பாலான வாக்கு மூலங்களில் அந்தந்த நபர்களின் சுய கற்பனைகளும் பய உணர்ச்சியால் ஏற்பட்ட வார்த்தை தடுமாற்றங்களும் நிறைந்து இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை.
ஆனாலும் அந்த வாக்கு மூலங்களில் சில உண்மைகளும் பல ஒற்றுமைகளும் இருக்கிறது. அவைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்.
கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 1954ம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து மூன்று மணி நேரம் கழித்து திடீரென தனது சாவுப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். வழி தவறி அடையாளம் தெரியாத இடத்தில் அகப்பட்டு மீண்டும் தனது சொந்த இடத்தை எதேச்சையாக அடைந்த நபர் போல மிரண்டு போய் இருந்தார். அவரிடம் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்ட போது காலையில் தன்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடலில் இனம் தெரியாத வலி இருந்தது. அதனால்தான் மிகவும் வேதனையும் சோர்வும் அனுபவித்தேன். திடீரென்று தன்முன்னே வெள்ளை நிறத்தில் தேவதைகள் போல் மூன்று நபர்கள் வந்தனர். அவர்கள் தன்னை தன் உடலுக்குள் இருந்து வெளியே இழுத்தனர். அப்போது படுக்கையில் கிடக்கும் எனது உடலைப் பூரணமாக என்னால் பார்க்க முடிந்தது. அதன்பின் அந்த மூன்று நபர்களும் வெளிச்சம் மிகுந்த ஒரு பாதையில் தன்னை அழைத்துச் சென்றனர். அவர்களுக்குள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டனர். அதில் ஒரு வார்த்தைக் கூட எனக்குப் புரியவில்லை. சிறிது தூரம் கடந்தபின் அவர்களுக்குள் பேசி ஏதோ முடிவுக்கு வந்து என்னை மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு விட்டனர். அதன் பின்னரே தான் எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறினார். அந்த மூன்று தேவதைகளின் முக அழகு இன்னும் தனது மனதில் பூரணமாக நிறைந்து இருப்பதாகக் கூறி சந்தோஷப்பட்டார்.
இதே போன்ற ஒரு சம்பவம் அபுதாபியில் 1975ம் வருடம் ஜனவரி மாதம் நடந்தது. 30 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் கராணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் இறந்து விட்டதாகக் கருதி உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர். உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது உறவினர்கள் பிரமிப்பு அடையும் வகையில் மரணத்திவிருந்து எழுந்தார். எழுந்தவர் இரண்டு நாள் வரையில் பித்து பிடித்தவர் போல் யாரிடமும் பேசாமல் இருந்தார். அதன் பிறகு கூறிய விஷயங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.
என் இதய வலியை நீக்கவும் இதயத் துடிப்பை சமப்படுத்தவும் டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர். என் மீது என்னென்னவோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அறை முழுவதும் மருந்துகளின் வாடை. எனக்கு அந்கச் சூழல் பயத்தை மேலும் அதிகரித்தது. அப்போது என் கண் முன்னே 3 நபர்கள் தோன்றினார்கள. அவர்கள் கால்வரையில் வெள்ளை அங்கி அணிந்திருந்தார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மூன்று பேருமே வெளிச்சமாகவும் அழகாகவும் இருந்தனர். என்னை வா என்று அழைத்தனர்.
நான் அவர்களின் அழைப்பை ஏற்று எழுந்தேன். ஆனால் என் உடல் படுக்கையில்தான் கிடந்தது. கருவிகள் பொருத்தப்பட்டுக் கிடந்த என் உடலைப் பார்ப்பதற்கு எனக்கு அப்போது ஏனோ வேடிக்கையாக இருந்தது. ஆனால் அந்த மூன்று பேரும் உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் கீழும் மணலால் சூழப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்குள் என்னைக் கூட்டிச் செல்வது போல் இருந்தது. அந்த நிலையில அந்த மணல் சுரங்கம் எனக்குப் பயத்தையும் இனம் புரியாத திகிலையும் தந்தது. அங்கு இதுவரை நான் அனுபவித்து இராத உயரிய நறுமணம வீசியது. சுரங்கத்திலிருந்து ஒரு மணல் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறையினுள் வெளிச்சமும் குளிர்ச்சியும் இருந்தது. அந்த 3 நபர்களும் திடீரென்று என்னை அந்த அறையினுள் இருந்து வெளியே கூட்டி வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர். அவர்கள் தள்ளிய வேகமும் உடலுக்குள் புகும்போது நான் அனுபவித்த இனம்புரியாத கிலியும் என்னை பிரம்மையில ஆழ்த்தி விட்டது என்று அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.