23/04/2017

சித்தராவது எப்படி - 31...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஏழு...

கால ஆளுமையில் அளவற்ற காலம்
மிக விசித்திரமான பதில் மனிதர்களிடம் இருப்பது என்னவென்றால் காலம் இன்மை என்பது தான்..

சோம்பலுக்கும் வீண் விவகாரங்களுக்கும் கால விரையம் பண்ணும் மனித குலம் தன்னை தாங்கும் உயிரை வளர்க்க துளியும் காலம் இல்லை என்று சொல்லுவது வியப்பிலும் வியப்பானது...

உலகம் ஏற்று கொண்டாலும் ஏற்றுக் கொள்ள வில்லை யென்றாலும் உலகத்திலேயே மிக வியப்பான விசயம் இது தான்..

வாழ்வில் வெற்றி கொண்டவர்கள் எவரும் இதை ஏற்றுக் கொள்வதில்லை...

அதிலும் சுவாச ஒழுங்கு பண்ணக் கூடியவர்கள் சொல்லுகின்ற பதில் மிக மிக வியப்பானது..

எனக்கு நேரம் கிடைக்கவில்லை.. விடியற்காலையில் நான் பண்ணும் போது பல சமயம் தவறி விடுகிறது.. இரவில் என்னால் பண்ண முடியவில்லை.. நான் வாகனத்தில் செல்லும் போது பண்ண முடிவதில்லை.. வேலை செய்யும் போது பண்ண முடிவதில்லை... அந்த சமயங்களில் தான் பண்ண வேண்டும் என்பது மனதின் சுத்தமான விளையாட்டு..

ஏகப்பட்ட ஓய்வு நேரங்களை மனம் தனக்காக ஒதுக்கி விட்டு வேலை நேரத்தை மட்டும் சுவாச ஒழுங்கிற்கு மனம் ஒதுக்குவதின் இரகசியம் வேலை நேரங்களில் புத்தியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அந்த நேரங்களில் தன் ஜம்பம் பலிக்காது என்பதாலும், அந்த நேரத்தில் சுவாச ஒழுங்கிற்கு மனம் மிகவும் அக்கரை எடுத்துக் கொள்ளும்.. தான் அனுபவிக்கும் நேரத்தை முற்றிலும் மறைத்து விடும்..

புத்தி பலப்பட்டால் எங்கே தன் ஆதிக்கம் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மனம் தன்னை காத்துக் கொள்ள என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய தொடங்கும்...

ஆகையால் தான் மனம் அது கொண்டாடும் நேரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை..

அது தனக்கென ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொண்டு அதை நம் விழிப்பு நிலைக்கு தெரியாமல் மறைத்தும் வைத்துக் கொள்கிறது..

அப்படி அது மறைத்து வைத்துக் கொள்ளும் நேரம் யோகியர் அல்லாத சாதாரண மனிதர்களுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் காட்டிலும் அதிகம் ஆகும்..

இது சத்தியமாக மிகை படுத்தப் பட்ட ஒன்று அல்ல... முற்றிலும் உண்மை..

இதை சற்று உணர்ந்து பயிலுகிறவர்கள், உண்மையை தெளிவாக அறியக் கூடும்...

சுவாச ஒழுங்கினை தினமும் 2 மணி நேரம் பயின்றாலே இந்த மண் உலகில் வல்லவர்கள் ஆகலாம்..

அப்படி 20 மணி நேரம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகலாம் என்பதை கற்பனைக்கும் எட்டாத ஒன்று..

அதனால் தான் காலம் இன்மை என்பது மிக விசித்திரமான பதில் ஆகும்..

சுவாச ஒழுங்கில் சந்திர கலை எடுத்துக் கொள்ளும் கால அளவிலேயே நெருப்பின் மீதும் நடக்கலாம்..

சந்திர கலை உலக விவகாரங்களில் தலையிடும் மனதிற்கு சொந்த மானது..

அது சந்திர கலையில் இல்லாமல் வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் கால அளவிலே ஆக்கிரமிப்பு செய்கிறது..
அதனால் தான் சூரிய கலை சந்திர கலை என பிரியாமல் விழிப்பு நிலை காணாமல் போய் விடுகிறது..

நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், வெளிவிடும் மூச்சில் விழிப்பு நிலையை தொலைத்து விட்டால், அதனை சூரியகலை என சொல்லவே கூடாது.. அது வெளியே போகும் மூச்சு.. அவ்வளவே..

வெளி விடும் மூச்சில் எப்பொழுது விழிப்பு நிலை ஆகிய தோன்றா நிலை உருவாகிறதோ, அப்பொழுது தான் அது சூரிய கலை என பெயர் பெறுகிறது...

சூரிய கலை உருவானால் மட்டுமே சந்திர கலை தோன்றும்.. அப்படி இல்லையென்றால் அது வெறும் உள்வாங்கும் மூச்சே..

சூரிய கலை தோன்றா நிலை அடைந்தால் மட்டுமே சந்திரன் தோன்றும்.. உலகியலிலும் அப்படியே..

சூரியன் மறைந்தால் தான் சந்திரன் கலைகளின் வடிவமாக தோன்றும்..

இதனை நினைவில் கொள்ளவே உள் வாங்கும் மூச்சுக்கு சந்திர கலை என்றும் வெளிவிடும் மூச்சுக்கு சூரிய கலை என்றும் பெயர் வைத்தனர்..

மற்றபடி விண் கோள்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் மூச்சோடு எந்த சம்பந்தமும் இல்லை...

நாம் நினைக்கின்ற சுவாச ஒழுங்கு அவ்வளவு எளிதான ஒன்று அல்ல..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.