23/04/2017

சித்தராவது எப்படி - 32...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் எட்டு...

சுவாச ஒழுங்கு இப்படியாகத் தான் தொடங்கும்...

கவர்ச்சி அற்ற நிலையில் தொடங்கும் சுவாச ஒழுங்கு சிறுக சிறுக கவர்ச்சியான பிரமாண்டங்களை காட்டத் தொடங்கும்.. கவர்ச்சிக்கு கவர்ச்சி சேர்ப்பது சுவாச ஒழுங்கு அள்ளி தரும் ஆற்றலே..

ஒரு குழந்தை சோர்வுற்ற நிலையிலும் பசியோடு இருக்கும் போதும், தூங்குவதற்காக ஏங்கும் போதும் அதற்கு மிக பிடித்த விலை உயர்ந்த பொம்மையை கொடுத்தாலும் தூக்கி போட்டு விடும்.. காரணம் அதை அனுபவிக்க வேண்டிய மன ஆற்றல் இல்லாததே..

உற்சாகமாக உள்ள குழந்தை ஒரு சாதாரண பொம்மையை வைத்துக் கொண்டு அதிக நேரம் விளையாடிக் கொண்டிருக்கும்... மன ஆற்றல் தான் வாழ்வின் இனிமையை நிர்ணயக்கூடியது..

மனிதன் பொருள் ஆசை பெருகக் காரணம் அவனுடைய குறைந்த மன ஆற்றலுக்கு ஈடு கொடுக்க மிக உயர்ந்த கவர்ச்சியான பொருட்கள் தேவை படுவதே.. இங்கே ஈடு கொடுத்தல் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்..

மன ஆற்றல் பெருகும் பட்சத்தில் தேடுதல் அறவே குறைந்து, அந்த ஆற்றலே அவனுக்கு மிகுந்த உற்சாகம் தரும் பொருள் ஆகி விடும்.. எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அது ஆற்றல் தான்..

எல்லாம் என்பது ஆற்றலை தவிர்த்த அனைத்துப் பொருள்களின் ஒட்டு மொத்த பயன் தூய்ப்பு அல்லது அனுபவநிலை.. ஆற்றல் என்ற ஒன்றின் உறவினால் எல்லாம் துறக்கக் கூடிய துறவு நிலை தானாகவே கை கூடும்..

தானாக கைகூடும் என்பதை உற்று கவனிக்க வேண்டும்... அந்த துறவால் ஆசைகளை விட்டு ஒழிந்த துறவால் தேவை என்ற கடமைகளை திறம்பட செய்யும் பண்பை கொடுக்கும்.. இதையும் உற்று கவனிக்க வேண்டும்..

இன்றைய நிலையில் மன ஆற்றல் குறைந்த நிலையில் நமது வாசியோகப் பயிற்சி மிகவும் கவர்ச்சி அற்றதாக தோன்றும்..

ஆனால் ஆற்றல் பெருகும் நிலையில் கவர்ச்சி அற்ற பொருள்களில் கவர்ச்சியை சேர்க்கும் அதிசயத்தை உருவாக்குவதால் எல்லாமே கவர்ச்சியாக தோன்றும்..

எங்கெங்கும் காணினும் சிவமயமே என்ற நிலை ஒரு பக்தனுக்கு வருவதற்கு காரணம், அவனுக்கு பெருகிய மன ஆற்றலே... ஆரம்ப தடைகளை வென்று விட்டால் போதும்.. பிறகு சுகப் பயணம் தான்..

சுவாச ஒழுங்கில் சில இரகசியங்களை சொல்ல வேண்டி உள்ளது..

4 வினாடி சுவாச ஒழுங்கு என்பதில் அந்த ஒழுங்கின் எல்லையின் நுணுக்கத்தை வரையறுக்க முடியாது.. ஒரு வினாடியை கோடி பகுதிகளாக நுட்பமாகக் கூட பிரிக்கலாம்..

மனம் அந்த நுட்பத்தை நோக்கி நகர்ந்து நகர்ந்து ஆயிரம் சந்தேகங்களை எழுப்பி எழுப்பி சுவாச ஒழுங்கில் இணைய மறுக்கும்..

சுவாச ஒழுங்கில் ஒரு தோராயமான கால அளவை விழிப்பு நிலையில் வைத்துக் கொண்டு பயில வேண்டும்..

ஓம் நமசிவய என்ற மந்திர கால அளவு நமக்கு மிகவும் பயன் படும்..

முக்கியமான விசயம் என்னவென்றால் சுவாச ஒழுங்கின்மை விழிப்பில் கவனிப்பதே சுவாச ஒழுங்கில் கிடைக்கும் பலன் கிடைக்கும்.. எந்த நொடியிலும் சுவாச ஒழுங்கின் போக்கை விழிப்பால் கவனித்தால் போதும்..

கணக்கு பார்ப்பது, உடனடியாக பலனை எதிர்பார்ப்பது எல்லாம் மனதின் வேலை.. இவை எல்லாம் இல்லாமல் இருப்பது விழிப்பின் இயல்பு..

சுவாச ஒழுங்கின் கால அளவு, தேக அளவில் நிர்ணயக்கப் பட்ட ஒன்று.. அதற்கு தோராயமாக அந்த கால அளவில் பயிலும் போது தேகம், ஆற்றலை பெற இசைந்து இருக்கக் கூடிய தகுதி பெறுகிறது.. அவ்வளவே..

அதிகமான கால நுணுக்கத்தை ஆராயக் கூடாது..

விழிப்பு நிலை பெருக பெருக அந்த விழிப்பே கால அளவை, மனம் தாண்டிய நிலையில் சரியாக தக்க வைத்துக் கொள்ளும்..

இந்த சூட்சமத்தை புரிந்து கொண்டு, எப்படியாவது அகக் குருவை எழ செய்து விட்டால் போதும்... மற்றவை விழிப்பு நிலை பார்த்துக் கொள்ளும்..

சுவாச ஒழுங்கின் மூலம் மேன்மை அடைவது அவ்வளவு சுலபம்.. ஆனால் அது மனதால் ஆகாதது.. புத்தியாகிய விழிப்பு நிலையால் மட்டுமே சிறப்பு அடையும்..

ஆகவே தான் விழிப்பு நிலையான புத்தியை எழ செய்யும் ஒரே பயிற்சியான சுவாச ஒழுங்கிற்கு அத்தனை முக்கியத்துவம் தரப் படுகிறது..

சதாகாலமும் வஞ்சக உலக குருக்களிடம் வாழ் நாள் முழுவதும் சிக்கி கொள்ளாமல் தன்னகத்தே சத்திய குருவாகிய அக குருவின் துணையை தருவது இந்த சுவாச ஒழுங்கே என்பதை மறக்காமல் இருந்து விட்டாலே போதும்..

மேலும் குண்டலினி சக்தி பயணம் என்ற யோக நெறிக்கு விழிப்பே உதவும்..

விழிப்பு நிலை இல்லாத எந்த பயிற்சியும் பலனை தராது.. பலன் தருவது போல் மனதிற்கு காட்டி, பின், விழிப்பு இல்லாத பயிற்சி, முடிவில் மனிதனை படுகுழியில் தள்ளி விடும்...

பிடரியை நோக்கிய குண்டலினி பயணம் நம் நினைவகத்தை பலப் படுத்துவதால் மனித நிலையில் மேன்மை அடைகிறோம்..

மனிதனையும் விலங்கையும் பிரித்துக் காட்டும் மிக பெரிய வித்தியாசம் இந்த நினைவகம் தான்..

ஆற்றல் பெருக்கம் அடையாமல் பயிலும் அத்தனை குண்டலினி பயிற்சிகள் நிழல் அனுபவத்தை மட்டுமே தரும்.. அதில் நீண்ட பலன் துளியும் இல்லை என்பது அறிந்ததே...

சுவாச ஒழுங்கில் நம்மை நாம் இணைத்துக் கொள்வோம்.. வாழ்வில் சிறப்படைவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.