ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணையும் நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளாராம் நடிகர் சரத்குமார்.
அதிமுக தற்போது ஐந்து கோஷ்டிகளாக சிதறிப் போயுள்ளது. ஓபிஎஸ், எடப்பாடி, திவாகரன் கோஷ்டி இணைவதற்கான பேச்சுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிராக தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் குறுக்குசால் ஓட்டி வருகின்றனர். இதனிடையே ஐந்தாவது கோஷ்டியாக தலித் எம்.எல்.ஏக்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு கூடுதல் அமைச்சர் பதவி வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் நாற்காலியை விட்டு எழுந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். இதற்காகவே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் யாகம், பூஜைகள் என அமர்க்களப்படுத்தி வருகிறார்.
சரத்குமாருடன் பேச்சு...
எடப்பாடியைப் பொறுத்தவரையில் தம்மை அனைத்து ஜாதியினருக்குமான ஒரு முதல்வராக காட்டிக் கொள்ள விரும்புகிறார். எப்படியும் டெல்லி தம்மை முதல்வராகவே நீடிக்க அனுமதிக்கும் என்ற நம்பிக்கையில் நடிகர் சரத்குமாருடன் பேச்சுவார்த்தையை எடப்பாடி தரப்பு மேற்கொண்டிருக்கிறது.
ராஜ்யசபா எம்பி பதவி...
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் கோஷ்டிகள் இணைப்பின் போது நடிகர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு அதிமுகவில் ஐக்கியமாவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அத்துடன் சரத்குமாருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
மேலும் அதிமுகவில் மாநில பொறுப்பு ஒன்றுக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.