அத்தோடு அவர் மீண்டும் தனது ஆய்வுப்பணிகளை கீழடியிலேயே தொடர வேண்டும் என்றும் நெத்தியடியாய் சொல்லியிருக்கிறது.
கீழடியில் நடந்த உள்ளடிகளையெல்லாம் பார்க்கும்போது எம்.ஜி.சுரேஷ் எழுதிய யுரேகா என்றொரு நகரம் நாவல்தான் நினைவுக்கு வருகிறது.
அகழ்வாராய்ச்சியில் வெளிவரும் உண்மைகளைத் தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் வரலாறே அற்றவர்கள்… என்கிற நுட்பமான ரகசியங்களை சொல்லியிருப்பார் அந்த நாவலில்.
மதுரை அருகேயுள்ள கீழடி கிராமத்தின் அகழ்வு ஆய்வுகளுக்கு முடிந்தவரை முட்டுக்கட்டை போடுவது ஒருபக்கம் என்றால் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பணிகள் அம்போவெனக் கேட்பாரற்றுக் கிடக்கும் கொடுமையோ மறுபுறம்.
திருநெல்வேலியில் இருந்து இருபத்தி நாலு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பணிகளை ஏறக்குறைய ஊத்தி மூடிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
இந்த ஆதிச்சநல்லூருக்கு எட்டு ஆண்டுகள் முன்னரே எங்களை அழைத்துச் சென்று அதில் புதைந்து கிடக்கும் பல உண்மைகளை புட்டுப்புட்டு வைத்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்தான்.
கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும்...
அவர்கள் பயன்படுத்திய கருவிகள் இரும்பாலானவை என்பதும்....
அதனை உருக்கி செதுக்கி சீராக்க அன்றைக்கே உலைகளை வைத்திருந்தார்கள்….
என்பது போன்ற அதிர்ச்சிகர உண்மைகளை 1876 ஆம் ஆண்டே கண்டு பிடித்தவர் தான் டாக்டர் ஜாகர். ஜெர்மன் நாட்டுக்காரர்.
தொல் தமிழர்களது இந்த நாகரீகம் வெளிவந்து விடக் கூடாது என்பதில் அநேகருக்கும் அளப்பரிய அக்கறை.
அப்படித் தப்பித் தவறி வெளிவந்து விட்டால் வெள்ளையர்கள் கண்டு பிடித்ததும் வடக்கத்தியர்கள் கண்டு பிடித்ததும் தமிழர்களுக்குப் பிந்திய நாகரீகங்கள் தான் என்பதை ஒத்துக் கொண்டதாகி விடும் என்கிற அரசியல்தான் இத்தனை உள்குத்துகளுக்கும் காரணம்.
மத்திய அரசின் தொல்லியல்துறை ஆதிச்சநல்லூரில் உள்ள 150 ஏக்கர் நிலத்தை சுற்றிவளைத்து கையகப்படுத்தி இருப்பதோடு வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடாது என்கிற உத்தரவையும் போட்டிருக்கிறது.
எல்லாவற்றைவிடவும் 2005 ஆம் ஆண்டே அத்துறை செய்த ஆய்வு முடிவுகளை இன்னமும் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது.
காரணம்?
தமிழர்களின் தொன்மையான வரலாறு வெளிவந்து விடக்கூடாது என்கிற நல்லெண்ணம் தான் வேறென்ன?
கீழடிக்குக் குரல் கொடுப்பது மட்டுமல்ல ஆதிச்சநல்லூரின் அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவருவதற்காகவும் நாம் குரல் கொடுத்தாக வேண்டும் என்பது தான் முன்தோன்றிய மூத்தகுடி யின் முன் உள்ள மற்றொரு சவால்.
டுபாக்கூர் பக்கங்கள் - குமுதம் வார இதழ்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.