13/04/2017

பாஜக மோடியும் திருட்டு வேலையும்...


நியூட்ரினோ திட்டத்துக்கு ஆதரவாக மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய கல்லூரி...

கர்நாடக மாநிலம், கோலாரில் 1970-ல் தொடங்கிய காஸ்மிக் கதிர்களின் ஆய்வு சில பிரச்னைகளால் கைவிடப்பட்டது. அதன்பின்னர், முதன்முதலாக 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முயற்சி நடந்தது. 2010-ம் ஆண்டு அந்த இடம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட இடம்தான், தேனி மாவட்டம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க முடிவானது. 2011-ம் ஆண்டு ஆய்வு மையம் அமைப்பதற்குச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த மையம் அமையப்போவதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குப் பல போரட்டங்களும் நடத்தப்பட்டன. அனைத்து எதிர்ப்புகளையும் மீறி 2015-ம் ஆண்டில் ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்தன.

2015-ம் ஆண்டு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் வனவிலங்குகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகப்பெரிய கேடாக அமையும் எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த அமர்வு 'நிபுணர் குழுவை அமைத்து நியூட்ரினோ ஆய்வு மையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டது.

தமிழக அரசும் நிபுணர் குழுவினை அமைத்தது. இந்நிலையில் நிபுணர் குழு தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் தனது ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தது.


அதில், 'நியூட்ரினோ திட்டத்துக்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெறவில்லை. சுற்றுச்சூழல் ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை மேற்கோள் காட்டிய தேசிய பசுமைத்தீர்ப்பாயம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மக்களவையில் இந்திய அணுசக்தி கழகம் நியூட்ரினோ திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை. நிச்சயமாக இந்த ஆய்வகம் தேனியில்தான் அமையும். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாததால்தான் காலதாமதம் ஆகிறது' என்று அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு ஆதரவாகக் கல்லூரியில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்கப்படுவதாகத் தகவலும் அதனுடன் புகைப்படமும் வெளியானது.

இதுகுறித்து பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பெண்கள் கல்லூரியில், வெள்ளைத்தாளில் மாணவிகளிடம் எதையும் சொல்லாமல் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்து நியூட்ரினோ திட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறது, கல்லூரி நிர்வாகம்.


அந்தக் கடிதத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழகத்திற்கு முக்கியமான திட்டம். அதைத் தமிழகத்திற்கு கொண்டு வருவதை சில அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் சேர்ந்து தடுக்கிறார்கள். இந்த எதிர்ப்பைப் பார்த்து நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம், இத்திட்டத்தை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்றியமைக்கத் துடிக்கிறார்கள். அப்படி வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டால் அது தமிழகத்துக்கு பெரிய இழப்பாக இருக்கும். அடிப்படை அறிவியல் பற்றி தெரியாதவர்கள் நியூட்ரினோ மையத்திற்கு எதிரான  சுந்தரராஜன் பொய்ப்பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இந்தச் செயல் தமிழக மாணவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களிடம், கல்லூரி நிர்வாகம் இந்தக் கடிதத்தை யாருக்கு அனுப்புகிறது என்ற தகவல் கிடைக்கவில்லை. இதன் மூலம் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க நியூட்ரினோ ஆய்வு மையத்துறை துடிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால், இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லும் உரிமை மீனாட்சி கல்லூரிக்கு யார் கொடுத்தது எனத் தெரியவில்லை. எங்களுக்குக் கிடைத்த கடிதம் இது ஒன்றுதான். இன்னும் எத்தனைக் கல்லூரிகளில் இதுபோன்ற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை.

மேலும் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக் கேரள வனவிலங்குத் துறையிடம் அனுமதி வாங்க ஆய்வு மையத்துறை முயற்சி செய்கிறது. அப்படி வாங்கினால் மட்டும் போதாது, ஆய்வு மையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றியுள்ள மக்களிடம் கருத்து கேட்டு, மக்களுடன் கலந்துரையாட வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கையும் பெற வேண்டும். இப்படி ஒரு ஆய்வு மையம் அமைக்க பல செயல்களும், வழிமுறைகளும் உள்ளன என்றார்.


இது சம்பந்தமாக கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் இல்லை. மத்திய அரசு எப்படியாவது நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க துடிப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. கோலாரில் ஆரம்பித்த திட்டம், இன்று வரை விடை கிடைக்காமல் கோளாராகவே இருக்கிறது...

செயதி - விகடன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.