19/09/2017

சென்னை, கேளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த முகாமில் 19 குடும்பங்களாக மொத்தம் 93 ரோஹிங்யா இஸ்லாமியர் தங்கியிருக்கிறார்கள்...


2012-ஆம் ஆண்டு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து கடல் வழியாக வங்கதேசத்துக்கு வந்து பின்னர் சென்னைக்கு வந்து சேர்ந்ததாக இவர்கள் கூறுகிறார்கள்.

ஐ.நா. மேற்பார்வையில் தங்கியிருக்கும் இந்த ரோஹிங்யா அகதிகள் தங்களுக்கு அங்கு நடந்த கொடுமைகளை விவரிக்கின்றனர்.

மியான்மரின் ராணுவ அடக்குமுறைக்கு அஞ்சி, புலம்பெயர்ந்த ரோஹிங்யா இஸ்லாமியரில் ஒரு பிரிவினர் சென்னையிலும் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் ரோஹிங்கியாவில் அடைந்த துன்பங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

திருமணம் செய்து கொள்வது, குழந்தை பெற்றுக் கொள்வது ஏன் தங்களது சொந்த வீட்டில் தங்குவது என அனைத்துக்கும் மியான்மரின் அரசு அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்ற கொடுமைக்கு இவர்கள் நேரடிச் சாட்சியங்களாக இருக்கிறார்கள்.

ரோஹிங்யா இஸ்லாமியர் அல்கமா பீபி கூறுகையில், ‘திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண் ஒரு லட்ச‌ கொடுக்க வேண்டும். அதேபோல் ஆணும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். ஆண் தந்தையின் வீட்டில் இருக்க வேண்டுமானால் தினமும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்கிறார் பரிதாபமாக...

கேளம்பாக்கம் முகாமில் வசிக்கும் ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகளுக்கு சென்னையில் இயங்கும் ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் ஆணையக் கிளையின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார் அட்டையும் கிடைத்திருக்கிறது.

ரோகிங்யா மொழி பேசும் தஸ்லிமா ஐந்து ஆண்டுகளுக்கு முன் மியான்மர் நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட ராணுவ அடக்குமுறைகளில் இருந்து தப்பி வந்தவர். இவர் கூறுகையில்,

’மியான்மரில் ராணுவம் எங்களை வாழவிடவில்லை. எல்லாவற்றுக்கும் பணம் கேட்பார்கள். பணம் கொடுக்க முடியாதவர்கள் அங்கு வாழ முடியாது. திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் அரசாங்கத்துக்குப் பணம் கட்ட வேண்டும் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்ற கருணை சற்றும் இல்லாமல் ராணுவத்தினரும் பௌத்தர்களும் எங்கள் மீது வன்முறைத் தாக்குலை நடத்தினர்’எனக் கூறுகிறார்.

முகமது யூசுப் கூறுகையில், ’நான் ரோஹிங்யா இஸ்லாமியர். மியான்மரில் அராக்கன் எனப்படும் ராக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவன். பௌத்தர்கள் இஸ்லாமியர்களாகிய எங்களைத் அடித்துத் துன்புறுத்தினார்கள். அதனால், அங்கிருந்து படகு மூலம் வங்கதேசத்துக்கு வந்தோம். அங்கு ஒரு ஏஜெண்ட் மூலமாக பேருந்தைப் பிடித்து கொல்கத்தாவுக்கு வந்தோம். பின்னர் ரயிலில் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்’என்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் மியான்மரில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள். இங்கு குப்பைகளில் இருந்து கிடைக்கும் இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை விற்றுப் பிழைக்கிறார்கள். பெண்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். ரோஹிங்யா குழந்தைகளில் பெரும்பாலானோர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்.

தமிழில் சரளமாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கேளம்பாக்கத்தின் ஒரு மூலையில் அமைந்திருக்கும் ஓலையும் தகரமும் மூடப்பட்ட குடிசைகள், ஒரு நெருக்கடியான கட்டடம் போன்றவை தான் இவர்களது இருப்பிடம். என்றாலும் அதிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தை தங்களது மதக்கடமைகளை ஆற்றுவதற்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.