சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெங்களூரு அகழாய்வுப் பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், கீழடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது...
கீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பருவத்தில் மிகவும் சிதிலமடைந்த, வளைந்த நிலையில் ஒரு செங்கல் கட்டிடம் மற்றும் மூன்று உறைகிணறுகள் மாத்திரமே தற்போது வெளிப்பட்டுள்ளன.
சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இதுதவிர சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தொடர்ச்சியற்ற நிலையில் பெரிய அளவிலான செங்கற்களை (38 செமீ நீளம்) கொண்டு கட்டப்பட்ட துண்டுச் சுவரொன்றும் காணக் கிடைத்துள்ளது.
சுமார் 3 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட துண்டுச் சுவரின் மூலம் இவ்விடத்தில் இரு காலகட்டங்களில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது.
இத்துண்டுச்சுவரே காலத்தால் முந்தைய கட்டுமானமாகும்.
400 ச.மீ பரப்பளவில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்மழை காரணமாக ஒரு சில குழிகளில் மட்டும் அகழ்வாராய்ச்சி தொடர்கிறது. அகழாய்வு அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்.
இதுதவிர இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் தலைமையிடத்திற்கு இரு மாதங்களில் அளிக்கப்படும்.
இப்பருவத்திற்கான அகழாய்வு அனுமதி செப். 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தலின் பேரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு வரைவுத் திட்டம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இணையத்தில் பதிவேற்றம்
ஸ்ரீராமன் கூறுகையில்...
கீழடியில் தற்போது கிடைத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தொல்பொருட்களின் விவரங்கள் http://nmma.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுப்பப்படும்.
இது தேசிய நினைவுச்சின்னம் மற்றும் தொல்பொருட்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும், என்றார்.
1800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு பிடிப்பு..
கீழடியில் நடந்த அகழாய்வில் இதுவரை 1,800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 1,500க்கும் மேற்பட்டவை மணிகளே.
மொத்த மணிகளில் 90 சதவீதம் கண்ணாடியால் ஆனவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு, பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும்.
இதுதவிர தந்தத்தில் செய்த சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் கிடைத்துள்ளன.
இன்றுவரை 14 தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன.
அவற்றுள் ஒளிய(ன்) என்ற முழுப்பெயரும் மற்றவை தனி நபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துக்களே காணப்படுகின்றன.
இதில் பனிரெண்டு எழுத்துகளைக் கொண்ட பானை ஓடு ஒன்று குறிப்பிடத்தக்கது. இதன் மீது `……ணிஇய் கிதுவரன் வேய்இய்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும், சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக்காசுகள், ஐந்து தங்கப் பொருட்கள், ஒரு சில மண்ணுருவங்களும் அகழாய்வில் கிடைத்துள்ளன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.