இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்பதை நமது பிரதமர் பல நாடுகளில் பெருமையாகச் சொல்லி வருகிறார். அதேசமயம் தலைநகர் டெல்லியில், விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழக விவசாயிகள் 100 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இத்தனை நாள் போராட்டத்துக்குப் பிறகும் பிரதமர், விவசாயிகளை நேரில் சந்திக்காதது வருத்தமளிப்பதுடன் உலக நாடுகளில் நமது விவசாயத்தைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை'' என்கின்றனர் விவசாயத் தலைவர்கள். இந்தச் சூழலில், பிரதமரைச் சந்திப்பதற்காகத் தமிழக விவசாயிகள் அவர் வீட்டுக்கு நேரில் சென்றால், போலீஸார் அவர்களைக் கைதுசெய்ததுடன்... அங்கிருந்து வர மறுத்தவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர்.
தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதலில் போராட்டத்தைத் தொடங்கினர். முதல் நாள் அன்றே அரை நிர்வாணத்துடன் போராட ஆரம்பித்த அவர்களின் போராட்டம், நாளுக்குநாள் வலுப்பெற்றுக்கொண்டே வந்தது. எலிகளைத் தின்றபடியும், பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடியும், மொட்டை அடித்தபடியும் என தினந்தோறும் பல்வேறு விதங்களில் போராடிய அவர்கள், ஏப்ரல் 10-ம் தேதி முழு நிர்வாணமாகப் பிரதமர் அலுவலகம் முன்பு போராடத் தொடங்கினார்கள்.
இப்படிப் பல போராட்டங்கள் நடத்தியும் கடைசிவரை பிரதமர் அவர்களைச் சந்திக்கவில்லை. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று தமிழகம் விவசாயிகளிடம் பேசி, அவர்களுடைய போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறவைத்தார். இதனையடுத்து, ''விவசாயப் பிரச்னைக்குத் தீர்வுகாணாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என்று பேட்டி கொடுத்து விட்டுத் தமிழகம் திரும்பினார்கள் விவசாயிகள்.
முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பயனும் விளையாததால் தொடர்ந்து அவர்கள் அறிவித்தபடி மீண்டும் டெல்லிக்குச் சென்று போராடத் தொடங்கினர். இந்த முறையும் பல்வேறு விதமான நூதன வழிகளில் போராடிய அவர்கள், கடந்த வாரம் அனைவரும் எதிர்பாராத வகையில் மனித மலம் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகத்தினரையே திரும்பிப் பார்க்கவைத்த இந்தப் போராட்டத்தாலும் அவர்களுக்கு எந்தப் பதிலும் இல்லை.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் டெல்லியில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்மூலம் அவர்களுக்குக் கிடைத்த 6, 666 ரூபாயை அங்கிருந்த அனைத்து விவசாயிகளும் எடுத்துச்சென்று பிரதமரிடம் ஒப்படைக்க முடிவெடுத்தனர். அதன்படி, அவர்கள் அனைவரும் போராட்டக் குழுத் தலைவரான அய்யாக்கண்ணு தலைமையில், ஜந்தர் மந்தரில் இருந்து பிரதமர் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.
அப்போது, பெண்கள் உள்ளிட்ட 28 விவசாயிகளையும் போலீஸார் கைதுசெய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். அதில், ஏற மறுத்தவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றினர். கைதுசெய்தவர்களைப் பாராளுமன்றத் தெருவில் உள்ள போலீஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்று, பின்பு விடுவித்தனர். இந்தப் பிரச்னை குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில்,
இங்குப் போராட்டம் நடத்தும் எங்களைப் பிரதமர் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு வறட்சி நிதி கொடுக்கவும் பிரதமர் மறுக்கிறார். இப்படி இருக்கும் சூழலில், நாங்கள் பிச்சையெடுத்து வசூலித்த பணத்தையாவது அவரிடம் கொடுத்து, அதை தமிழக விவசாயிகளுக்கு அளிக்கும்படி கேட்பதற்காகத்தான் பிரதமர் வீட்டுக்குச் செல்ல முயன்றோம் என்றார்.
ஒருபக்கம், மெள்ளமெள்ள இந்தியாவில் விவசாயம் அழிந்துகொண்டிருக்க... மறுபக்கம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே டிஜிட்டல் ஆனாலும், உணவு டிஜிட்டலில் கிடைக்காது என்பதை நாம் புரிந்து விவசாயிகளுக்கு உதவ வேண்டிய தருணம் இது. இதில், போராடும் பல விவசாயிகளுக்கு உடல் நலக் குறைவும் ஏற்பட்டு வருகிறது. இதன்பிறகாவது, பிரதமர் விவசாயிகளின் கோரிக்கைகளைத் தெரிந்துகொள்வாரா என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வெளிநாடுகளில் இந்திய மேம்பாட்டுக்காக உரை நிகழ்த்தும் பிரதமர், எங்களின் கோரிக்கைகளுக்கு முதலில் செவி சாய்க்க வேண்டும். புதிய இந்தியா பற்றிக் கனவு காணும் பிரதமர், அதிலும் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் தமிழக விவசாயிகள்.
தன் நாட்டுப் பிரச்னையைத் தீர்ப்பது தானே ஒரு தலைவரின் முக்கியக் கடமையாகும். அதை தீர்க்காதவன் ஒரு தலைவனா.?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.