இன்று ஜென்மவிரோதிகளாக அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது.
அன்று அவர்கள் பெரும் வல்லரசு, வல்லரசு என்றால் நிச்சயம் அணுகுண்டு வேண்டும். அணுகுண்டு வேண்டுமென்றால் அணுவுலை வேண்டும்.
1955 களிலே ஏகபட்ட அணுவுலைகளை அமைத்திருந்தது ரஷ்யா, 1958ல் அவர்களின் முதல் அணுவுலை விபத்து நிகழ்ந்தது, 1974ல் ஷென்ஸ்கோவ், 1983ல் ஆட்டோமோஷ் என அவ்வப்போது அவர்களின் நுட்பம் விபத்தினை தந்து கொண்டே இருந்தது.
அவர்கள் இரும்புதிரை நாடு, ஊரே செத்தாலும் உலகிற்கு ஒன்றும் தெரியாமல் பார்த்துகொள்வார்கள், அவ்வளவு கட்டுபாடு. ஆனால் அதனை எல்லாம் மீறி அவர்களே ஆடிப்போனவிபத்து செர்னோபில், அவர்கள் என்ன? உலகமே அலறிற்று.
1986, ஏப்ரல் 26ல் செர்னோபில் அணுவுலை, கூடங்குள எதிர்காலத்தினை போல 4 உலைகளோடு இயங்கிகொண்டிருந்தது, வழக்கமான சோதனை, எல்லாம் ஓகே எனும் நிலையில், திடீரென நீராவிகுழாயில் ஏற்பட்ட விபத்து பெரும் விபத்தாக மாறி அணுவுலை வெடித்தது.
ஏதோ தீ விபத்தை அணைப்பது போல தீயணைப்பு சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருந்தன, நரகாசுரன் என்றால் கொன்றுவிடலாம், ரத்தபீஜன் என்றால்?
ரத்த பீஜனின் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு அரக்கனாக மாறும் என்பது புராணகதை, அணுவும் அப்படித்தான், பிளக்க பிளக்க போய்கொண்டிருக்குமே தவிர முடிவே இல்லை.
அந்த உலையில் ஊற்றபட்ட தண்ணீர் வழிந்தோடி ஆற்றில் விழுந்து ஆறு செல்லும் இடமெல்லாம், கதிரியக்கம் பரவியது, வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் நீருற்றிய பணியாளரரில் 5 பேர் உடனடி கதிரியகத்திற்கு பலியாயினர். அடுத்த உலைகளில் பணியாற்றிய 30 பேர் மூச்சுவிட நேரமில்லாமல் செத்தார்கள்.
கம்யூனிச ரஷ்ய அரசு அதிர்ந்தது, ஆனால் மக்களை உடனடியாக வெளியேற்றியது, கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் உடனடியாக 100 கி.மீ தள்ளி கொண்டுசெல்லபட்டார்கள்.
கதிரியக்கம் என்பது மெல்லகொல்வது, கிழக்கு ஐரோப்பா முழுவதும் அது பரவிற்று. 2 லட்சம் புற்றுநொயாளிகளை ஒரு மாதத்தில் உருவாக்கிற்று.
மேற்கு ஜெர்மனியில் மட்டும் கிட்டதட்ட 40000 குழந்தைகள் ஐ பட விக்ரம் போல அலங்கோலமாக உருமாறி பிறந்தன, அச்சபட்ட அரசுகள் அதிரடியாக கருக்கலைப்புகளை தமிழக கள்ளவோட்டுபோல கணக்கற்று செய்தன.
அந்த அணுவுலையை மிக சிரத்தைஎடுத்து 5 அடி தடிமன் கொண்ட காங்ரீட்டால் மூடியபொழுதும் அது 3 ஆண்டுகளில் சிதைந்தது. மறுபடி செலவு, மக்கள் இடமாற்றம், அணுவுலை பராமரிப்பு என ரஷ்ய பட்ஜெட் எகிற, ஒரு கட்டத்தில் அந்த அமைப்பே சிதறிற்று.
ரஷ்ய உக்ரைன் மோதலின் தொடக்கபுள்ளி இது.
அழிவென்றால் மகா அழிவு, இன்னும் அவ்வுலையை சுற்றி 200 கி.மீ அளவு வாழ தகுதியற்ற இடம், அப்படி விட்டால் கூட பரவாயில்லை 400 கி,மீ தள்ளி புற்களில் கூட கதிரியக்கம் இருந்ததாம், அங்கு வளர்ந்த மான்களும், கால்நடைகளுக்கும் கதிரியக்கம் ஏற்பட்டு அவைகளை உண்ண கூடாத நிலை வந்தது.
அவ்வளவு ஏன் குடிநீரில் கூட கதிரியக்கம் இருந்ததால், அச்சபட்டு வேறுநாட்டிலிருந்து குடிநீரும் கொண்டுவரபட்டது.
சொந்த நாட்டு விவசாய பொருட்களை கூட 3 ஆண்டுகள் உண்ணாமல் வேறு நாடுகளிலிருந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு நிலை மோசம், இதனை கண்டு மனம் வெறுத்து மிகசரியாக அடுத்த 2 ஆண்டுகளில் ஏப்ரல் 26ம் தேதி தற்கொலை செய்துகொண்டார் அந்த அதிகாரி.
அவர்பெயர் "வாலெரி லெகசோவ்" சோவியத் ரஷ்ய தலமை அணுசக்தி விஞ்ஞானி, இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கின்றது.
அணுவுலை எவ்வளவு ஆபத்தானது? அது உறங்கும் எரிமலை விட மகா மோசமானது என்பதை உலகம் அறிந்துகொண்ட நாள் ஏப்ரல் 26.
இந்த மாயை வியாபார உலகில் உள்ளாடைகளுக்கு கூட ஒரு நாள் உண்டு, மிக தந்திரமாக அணுகுண்டு வீசபட்ட நாள் அணு எதிர்ப்புநாள், ஆனால் அணுவுலை வெடித்தநாளில் ஒரு மண்ணாங்கட்டி நினைவஞ்சலியும், ஊர்வலமும் கிடையாது.
காரணம் அதனை நினைவுபடுத்தி மக்களை சிந்திக்கவிட்டால் உலகெங்கும் ஒரு அணுவுலை கூட அமைக்கமுடியாது, அந்த அளவிற்கு அதனைபற்றிய கடும்கட்டுபாடுகளை அரசுகள் மேற்கொள்கின்றன.
உக்ரைனில் வெடித்ததும் நீராவிகுழாய் வால்வுதான், புக்குஷிமாவில் பெரும் அழிவினை உண்டாக்கி இன்று ஜப்பான் வலுஇழப்பதற்கும் காரணம் அதே நீராவிகுழாய் அழுத்தம்தான், இரண்டுமே ரஷ்ய டிசைன்கள்.
கொஞ்சநாளைக்கு முன்பாக கூடன்குளத்து உலையில் நடந்ததும் வெறும் நீராவிகுழாய் வெடிப்புதான் என செய்திகள் வந்ததும் நினைவிருக்கலாம்.
அப்பகுதி மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை அதுவும் உலகமே திரும்பி "Where is Koodangulam? why Indian Goverment never respect them?" என கேட்கவைத்த போராட்டத்தை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது,இன்னும் போராடுவார்கள்.
ஆனால் அது சாதிரீதியாக விமர்சிக்கபட்டு, பின்னர் போராட்டகுழு தலைவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டபொழுது மத ரீதியாக விமர்சிக்கபட்டு தோற்றும்போனார் பெரும்பான்மைபெற்றவர் டெல்லிசென்றார்.
அங்கு அவர் என்ன செய்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும், தலையணை மட்டும் இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றால் எவ்வளவு பெரும் வாய்ப்பு? அதுவும் சொந்தமாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினை. ம்ஹூம் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வேறு.
ஆனால் அணு அப்படிபட்டது அல்ல. அதற்கு ஜாதி,மதம்,இனம் தெரியாது. வெளியே வந்துவிட்டால் ஓரறிவுமுதல் ஆறறிவுவரை அனைத்து உயிர்களையும் அழித்துவிட்டு, அடுத்த 1000 ஆண்டுகளுக்காவது அதனை சுடுகாடாக மாற்றும்.
பாதுகாப்பான அணுவுலை கதிரியக்கத்தை கட்டுபடுத்தலாம் எனும் விஞ்ஞானிகள், அந்த கழிவினை என்ன செய்வீர்கள் என்றால் அப்படியே எலிபொந்துக்குள் ஒழிந்து கொள்கின்றார்கள். அவர்களும் என்ன செய்வார்கள், அவர்களுக்கும் தெரியாது என்பதுதான் உண்மை, ஆனால் அது மகா ஆபத்தானது.
அணுகுண்டு துகள்போக மீதியை இரும்புபெட்டியில் போட்டு நிலத்தில் புதைக்கவேண்டும், அல்லது நடுகடலில் போடவேண்டும். கன்னடர் போல கோலாரில் எதிர்ப்பு தெரிவிக்க (ஆனால் மின்சாரம் வேண்டும்) கடலில் நெத்திலிமீன்கூட சண்டைக்கு வராது.
கல்பாக்கத்தில் அபாயகரமான ஈணுலை அமைக்கின்றார்களாம், கூடங்குளத்தில் 3,4 என விரல்கள் உயர்கின்றன. இதில் அமெரிக்காவோடும் ஒப்பந்தமாம். அமெரிக்க 3 மைல் அணுவுலை விபத்து கொஞ்சமும் குறைந்தது அல்ல.
தினமும் வாழமுடியாமல் பலபேர் சாவதை கண்டுகொள்ளாத அரசு, விவசாயிகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாத அரசு நிச்சயம் ஏப்ரல் 26 போன்ற ரணங்களையும் கண்டுகொள்ளாது.
மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும், அது சாத்தியமே இல்லை. நிச்சயம் அணுவுலைக்கு எதிராக பொங்கவேண்டிய தென் தமிழகம், சாதிக்கும் இன்னபிற கொடுமைகளிலும் மூழ்கி கிடப்பதை பார்க்கும்பொழுது அதெல்லாம் சாத்தியமில்லை,
திரு.உதயகுமார் அவர்களும், இடிந்தகரை மூதாட்டிகளும் மட்டுமே அதற்கு போராட பிறந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை, இவர்கள் என்பதில் நானும் உண்டு என்பதையும் சேர்த்துகொள்ளலாம்.
மதத்தின் பெயரால் அப்போராட்டத்தை கொச்சைபடுத்தினால், அந்த புராணத்தின் ரத்தபீஜனை நினைத்து கொள்ளுங்கள், அவன் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு அரக்கனை உருவாக்கி உலகமே அவனால் நிறைந்ததாம், பின் அன்னை காளி அவன் ரத்தம் கீழே விழாமல் குடித்துதான் அவனை கொன்றாளாம்.
அவனது ரத்ததுளிக்கும் அணுவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, ஆனால் அதனை விழுங்குவதற்கு யாரும் இல்லாமல்தான் செர்னோபில்லும், புக்குசிமாவும் இன்னும் ஏராளமான அணுவிபத்துக்களும் நமது கண்முன்னே நடந்து ஏராளமான உயிர்களை கொன்றுகொண்டிருக்கின்றது.
ஆயினும் நாமெல்லாம் பாரத தாயின் மக்கள், இன்றைய அணுவிஞ்ஞானம் ஐரோப்பியர் அல்லது யூதருடையது. ஆனால் மகா பாரதத்திலே அஸ்வத்தாமன் ஒரு புல்லை பிரம்மாஸ்திரமாக மாற்றினான், அதற்கு அர்ச்சுணனிடம் பதில் கனையும் இருந்தது.
அர்ச்சுணனுக்கு அதை கட்டுபடுத்தும் வித்தை தெரிந்தது, ஆனால் அஸ்வத்தாமனுக்கு தெரியவில்லை என்று சொல்லபட்டிருக்கின்றது.
அதாவது சாதாரணபொருளை அழிவு ஆயுதமாக செய்யலாம், அப்படிதான் வெறும் கல்லான யுரேனியம் அணுகுண்டாக மாறுகின்றது, அது அழிவுசக்தி ஆனால் கட்டுபடுத்தும் வித்தை நிச்சயம் உண்டு, என பாரதம் நம்பிக்கை அளிக்கின்றது.
ஒருவேளை அந்த நுட்பம் தெரியாதவர் வரும் முன், யாராவது அஸ்வத்தாமன் போல வீசிவிட்டால்? , அப்பொழும் காக்க பகவான் தான் வரவேண்டும்.
அப்படித்தான் இடிந்தகரை கடற்கரை அருகில் ஒரு கூட்டம் கடலைகளயும் தாண்டி வருடகணக்கில் கதறிகொண்டிருந்தது.
அந்த கதறல் நிச்சயம் அவர்களுக்கானது மட்டுமல்ல, மொத்த தென் தமிழ்,வட இலங்கை மற்றும் கேரள மக்களுக்கானது, அவர்களின் சந்ததிகளுக்கானது.
அதனைத்தான் ஏப்ரல் 26, செர்னோபில் கொடூரம் நினைவுபடுத்திகொண்டே இருக்கின்றது.
நேரடியாக பாதிக்கபட்ட 2 லட்சம் மக்கள், மறைமுகமாக பாதிக்கபட்ட 8 லட்சம் மக்கள், கால்நடைகள், அலங்கோரமான மனிதபிறப்புக்கள் என அதனை ஒருமுறை எண்ணினால் போதும்.
(1986ல் செர்னோபில் மக்கள் நெருக்கம் மிக குறைவு, நமது பகுதிகளை நினைத்தாலே "திக்").
அவனை அடக்கும் வரம் நமக்கு வரும்வரை அந்த அரக்கனை எழுப்பாதீர்கள், அவன் அப்படியே உறங்கட்டும் என உரக்க கத்த தோன்றும்,
ஞானியின் இதயம் துக்க வீட்டு சிந்தனையில் இருக்கும் என்கின்றன தத்துவ நூல்கள்.
அணுவினை நினைக்கும் பொழுதெல்லாம் இந்த செர்னோபில் தான் நினைவுக்கு வரும் அதற்கு ஞானம் எல்லாம் வேண்டாம், மனசாட்சி போதும்
ஆள்வோர்களுக்கு ஞானம் இல்லாவிட்டாலும், மனசாட்சியுமா இல்லாமல் போயிற்று?
ஆயினும் எழுப்பியே தீருவேன் என்று ஆட்சியர் அடம்பிடித்தால்?
"அர்ச்சுணனுக்கு தெரிந்த அந்த கட்டுபடுத்தும் வித்தையை, எமக்கு சொல்லமாட்டாயா பரந்தாமா?" என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.
அவர் புல்லாங்குழலோடு மாய சிரிப்பு சிரிக்கின்றார், அதன் அர்த்தம் நமக்கு புரியாது,
அந்த கண்ணனுக்கு மட்டும்தான் புரியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.