26/04/2018

மருத்துவ பட்ட மேற்படிப்பில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு 50%,உள் ஒதுக்கீடு இல்லை.. உச்ச நீதி மன்றம்...


இதனால், இன்று கிராமப்புற அரசு தொடக்க நலவாழ்வு நிலையங்களில் ( PHC), அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேரடியாக உடனே பாதிக்கப்படுவார்கள்.
ஆனால், நீண்ட கால அளவில் பார்த்தோமானால், ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

இன்று தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்வி, அரசு மருத்துவமனைகள், பொது நலவாழ்வு துறை சிறப்பான சாதனைகளுடன் நடைபோடுகிறது என்றால் அது அரசு மருத்துவர்களால் தான். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பட்ட மேற்படிப்பு க்கான இட ஒதுக்கீட்டால் தான். இன்று நிகழ்கின்ற சிறப்பான அரசு மருத்துவத் துறையின் வெற்றிகள் எல்லாம் கடந்த 20 ஆண்டுகளாகத் தரப்பட்ட சர்வீஸ் கோட்டாவால் தான்.

அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உள் ஒதுக்கீடு சமூக நீதியின் பரிணாம வளர்ச்சியின் இரண்டாம் கட்டம் ஆகும். இம்முறையால் தமிழகம் நலவாழ்வு த் துறையில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். இவை எல்லாவற்றுக்கும் ஆப்பு வைத்துள்ளது உச்ச நீதி மன்றத் தீர்ப்பு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவர்களுக்கான உள் ஒதுக்கீடு க்காக சளைக்காமல் போராடி வந்தனர் தமிழக அரசு மருத்துவர்கள்.
அவர்களுக்கு இத்தீர்ப்பு கடுமையான ஏமாற்றத்தையும் சோர்வையும் அளிக்கும்.

ஏற்கனவே, இந்தியாவிலேயே அரசு மருத்துவர்களில் குறைவான மாத ஊதியம் வாங்குபவர்கள் தமிழக அரசு மருத்துவர்கள். இருந்த போதிலும் அவர்களுக்கு அரசுப்பணியின் மீதிருந்த ஒரே ஈர்ப்பு சர்வீஸ் கோட்டா தான். அதை இல்லாமல் ஆக்கிவிட்டது நடுவண் அரசின் விதிகளும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும்.

நடுவண் அரசின் தவறான சமூக நீதியற்ற விதிமுறைகளாலும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பாலும் இனி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ நிபுணர்கள் கிடைப்பது குறையும். அந்நிலையில் தனியார் உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்படும். அரசு மருத்துவத் துறை படிப்படியாக தனியார் மயமாக இன்று முதல்படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இறுதியில், இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய பொதுமக்களே.

நியாயமான சமூக நீதிக் கோரிக்கைக்காக , ஏழை எளிய மக்களின் மருத்துவச் சேவைகளுக்காக கிராமப்புற மருத்துவர்கள் போராடுகின்றனர். அதற்கு நடுவண் அரசு விதிகள் தடை ஏற்படுத்துகிறது எனில் அவ்விதியை மாற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதே சரியான தீர்வாகும்.

கல்வி, மருத்துவக் கல்வி, சுகாதாரம் இவற்றை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்போது தான் இச்சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும்.
இதனை மீச்சிறுபான்மை அரசு மருத்துவர்களால் சாதிக்க முடியாத நிலையில் மக்களைத் திரட்டி மக்களோடு சேர்ந்து போராடி வெல்வதே சரியான போராட்ட அரசியல் வழி முறையாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.