யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?
இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது.
சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?
இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.
உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்.
உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.
உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.
எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.
சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.
சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.
கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.
வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.
இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.
அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.
பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.
உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.
உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.
இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.
சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.
ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.
தியானம் செய். இயற்கையை நேசி.
வலிகள் மறையும்.
பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.
வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.