கேரளாவில் 20 வயது கல்லூரி பெண் மாயமாகியுள்ளார். அவர் காணாமல் போய் 46 நாட்கள் ஆகியும் கேரளா போலீசார் இன்னும் அவரை கண்டு பிடிக்கவில்லை. இதனையடுத்து தன் தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் என கேரள இளம்பெண் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜேஸ்னா. இவர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி புஞ்சவாயல் பகுதியில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்கு செல்வதாக வீட்டை விட்டு கிளம்பியிருக்கிறார். அத்தை வீட்டுக்கும் ஜேஸ்னா வீட்டுக்கும் சுமார் 20 கி.மீ தூரம் இருக்கும். 3 பேருந்துகள் மாறித் தான் செல்ல வேண்டும். ஜேஸ்னா, அத்தை வீட்டிற்கு வழக்கமாக செல்வதுதான். அதுபோலத் தான் மார்ச் 22ம் தேதியும் சென்றிருக்கிறார். ஆனால் அவர் அத்தை வீட்டை அடையவில்லை. இதுகுறித்து ஜேஸ்னாவின் குடும்பத்தார் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 46 நாட்களாகியும் ஜேஸ்னா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே ஜேஸ்னா சுய விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். அதேசமயம் ஜேஸ்னாவின் குடும்பத்தினர் கூறும்போது, “ ஜேஸ்னாவிற்கு பெரிய அளவில் எந்த நண்பர்களும் இல்லை. வீட்டிலும் பிரச்னை இல்லை. அப்படியிருக்க அவர் ஏன் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் ” என தெரிவிக்கின்றனர். ஜேஸ்னாவை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகப்படுகின்றனர்.
கடந்த மாதம் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஜேஸ்னாவின் பெற்றோருக்கு தங்கள் மகள் கடத்தப்பட்டுள்ளாரா..? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இதனிடையே ஜேஸ்னா விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை கண்டுபிடிக்க வேண்டும் என சமூக வலைத்தளவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கேரளா போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தன் தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தெரிவிக்கவும் என ஜேஸ்னாவின் சகோதரி தமிழக மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.