12/05/2018

நாம் யார்..?


மனிதர்கள் என்று எவராலும் சொல்லிவிட முடியும்.

மனிதனைப் படைத்தவை பஞ்ச பூதங்கள் என்று ஏற்கபனவே பார்த்தோம். சர்வ வல்லமை படைத்தவனாக, உலகையே ஆளக்கூடிய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மனிதன் அந்நிலைக்கு எப்படி வந்தான்..?

"தேவன் தம்முடைய சாயலாக மனிதனை சிருஷ்டித்தார். அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்."- ஆதியாகமம். அதிகாரம் :1 வசனம்:27

"மக்களே நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்களுடைய இறைவனை மட்டும் வணங்குங்கள். அதனால் நீங்கள் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் தவிர்த்துக்கொள்ளலாம்." -குர் ஆன் அதிகாரம்:2 (அல்பக்கரா)வசனம்:22

மனிதன் நேரடியாக கடவுளால் படைக்கப்பட்டான் என்று மதங்கள் முரசறைந்தன. "மனிதன் முழுதாக ஆண்டவனால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமைகள் ஒன்றுகூடி உண்டான உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியே மனிதன். பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், மிருகமாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாக மனிதன் தோன்றினான்" என்று சார்லஸ்டார்வின் மதங்களுக்கு எதிராய் நின்றார்.

"புல்லாகிப் பூடாய் புழுவாய்
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவரச் சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்.."-சிவபுராணம், மாணிக்கவாசகர்.

வைணவக் கடவுள் விஷ்ணுவின் தசாவதாரங்கள் கூட உற்று நோக்கினால் மனித பரிணாமத்தையே காட்டி நிற்பதை உணரலாம்.

நீரில் வாழும் மீனாக - மச்சாவதாரம்.
நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையாக - கூர்மாவாதாரம்.
நிலத்தைத் தோண்டி வாழும் பன்றியாக - வராக அவதாரம்.
வானை அளந்த குறு வடிவமாக - வாமன அவதாரம்.
மனிதன் பாதி சிங்கம் பாதியாக - நரசிம்ம அவதாரம்.
முழு மனிதனாக - பரசுராம, பலராம அவதாரம்.
உழவுக்கு உதவும் ஆவினங்களை மேய்த்து காப்பவனாக - கிருஷ்ணாவதாரம்.
மக்களை காக்கும் பேரறிவு நாயகனாக - இராமாவதாரம்.

இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக இயற்கை பிரினிலையில் திருத்தப்பட்டு உயர்வான மனிதன் உருவாகியிருப்பதான இந்த அவதாரக் கதைகளுக்கும் டார்வின் கொள்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது புலப்படவே செய்கிறது.

மனிதன் தன் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அறிவுப்போராட்டத்தை நிகழ்த்தியே உயர்வுக்கு வந்திருக்கிறான். அறிவுப்போராட்டத்தின் உச்சக்கட்ட வெற்றியே மனிதன்.அளவில் பெரிய யானையிடமோ, திமிங்கலத்திடமோ, குரூரம் நிறைந்த சிங்கம், புலி, சிறுத்தையிடமோ உலகம் அடங்கவில்லை. உலகம் மனிதனின் கையில் கோலிகுண்டாய் சிறுத்துப்போனது. மேற்சொன்ன விலங்குகளையேக்கூட மனிதனே ஆட்டிப்படைத்தான்.. மனிதனுக்கு மிஞ்சிய ஒரு பரிணாம வடிவத்தை இன்னும் இயற்கை யோசிக்கவில்லை. இவ்வுலகின் முடிசூடாமன்னன் மனிதனே. வானவெளியும் கிரகங்களும், நட்சத்திரங்களும். நிலவும் அவனுக்கே சொந்தமானவை என்று பட்டயம் போட்டிருக்கிறது இயற்கை.இப்படிப்பட்ட மனித கூட்டத்திற்கிடையே இன்று நடப்பதென்ன..?

நதிகளின் பெயரில் போர்க்கொடி, மதங்களின் பெயரில் ரத்த வெறியாட்டம், மொழிகளின் பெயரில் கொலைவெறி, கடவுளர்களின் பெயரில் கலவரம், அரசியலின் பெயரில் அக்கிரமம், தனிமனித சுயநலம், வக்கிரம், போட்டி, பொறாமை, மனச்சிதைவு, தற்கொலை, தோல்வி, விரக்தி, சோகம்...ஏன்..ஏன்...?
அறிவு விலங்கான மனிதனுக்கு ஏன் இந்த அவலம்...? இந்த இழிநிலைக்கு காரணம் என்ன..?

கால் ஓட்டத்தில் நம்மை அறிந்து முறையாக உயர்த்திக்கொள்ள தவறியதே.

உண்மையில்..நாம் யார்.....?

நாம் உடல்களாக் இருக்கிறோம். உடல்களாக மட்டுமல்ல உயிர்களாக இருக்கிறோம். உடல் உயிர்களாக மட்டுமல்ல மனங்களாகவும் இருக்கிறோம். ப்குத்துப் பார்த்தால் இதுவே உண்மை. சூத்திரமாக நிறுவுவதானால்..

உடல்+உயிர்+மனம்= மனிதன்
உடல்+உயிர்-மனம்= விலங்கு/தாவரம்
உடல்-உயிர்-மனம்=சடப்பொருள்

உடலுடன் உயிர் பிணைகையில் அறிவு பிறக்கிறது. இந்த அறிவு பஞ்சபூதங்களின் சாரமாய் இருக்கிறது. இவ்வுலகில் ஆறுவகை உயிர்கள் இருப்பதாக தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் கூறும் சூத்திரம்

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவ அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - மரபியல்-571.

உடல்நிலையில் ஐம்பூதங்களையும், அப்பூதங்களுக்குரிய அறிவையும் ஒருங்கே அமையப்பெற்றவன் மனிதன். அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் இது ஆன்றோர் வாக்கு.

நிலம் முதல் பூதம். இதற்கு தொடு உணர்வு மட்டுமே உண்டு. இடம் விட்டு இடம் நகராது. நிலமும் நிலம் சார்ந்த தாவரங்களும் இடம்விட்டு இடம் நகர்வதில்லை. எரித்தாலும் வெட்டினாலும் எதிர்க்க முடிவதில்லை. ஓரறிவு நிலமே மனிதனின் உடல். உடலுக்கு தொடு உணர்ச்சி உண்டு. தட்பவெப்ப சூழலுக்கேற்ப நிலத்தின் தன்மையும் நிறமும் மாறுபடுவதுபோல தொடுவுணர்வுள்ள மனிதத் தோலிலும் நிற, தன்மை வேறுபாடுகள் உண்டு. நிலத்தில் செடி முளைத்தால் உடலில் முடி முளைக்கும். நிலத்திற்கு மணம் உண்டு. உடலுக்கும் மணம் உண்டு. மனித உடலை நிலம் ஆட்சி செய்கிறது."ஊன் வளர்த்தேன் உயிர் வளர்த்தனே" என்பார் திருமூலர். உயிர் வளர்வதற்கு உணவாக உட்கொள்லப்படும் அனைத்துமே மண்ணின் விளைவே.

இரண்டாவது பூதம் நீர். நீருக்கு இரண்டறிவு. இடம்விட்டு இடம் நகரும். நீரானது மனித உடலில் நாக்கை ஆட்சி செய்கிறது. வியர்வையாக, கண்ணீராக, உடலில் பெரும்பங்கில் நீரின் ஆட்சியே."செம்புலப்பெயல் நீர்போல் : மனித தன்னை சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள இந்த நீரின் நீர்மைப் பண்பே காரணமாகும்.

மூன்றாவது பூதம்... காற்று. நிலம்.. நிலத்தின்மேல் நீர்வெளியில் குமிழ்கள் உருவாகி காற்று உண்டாகிறது. உயிர்வெளியில் ஈரத்தையும் உலர்வையும், சூட்டையும், குளிரையும் சுமந்து செல்வது காற்றே. இது இயல்பாகவே வாசனைகளை சுமந்து செல்லும் இயல்புடையது. காற்றானது நம் உடலில் நாசியை ஆட்சி செய்கிறது. நாசியின் வழியாகத்தான் நாம் சுவாசிக்கிறோம். நறுமணத்தையும், சுகந்தத்தையும் நுகர்கிறோம்.

நான்காவது பூதம் நெருப்பு.எதையும் தன்வயத்தில் எடுத்துக்கொள்ளும் ஒளிவடிவமானாது. நெருப்பு கண்களை ஆட்சி செய்கிறது. வெளியொளியை கண்களால் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி உடலிலும் உயிர்ச்சூடாக பரவி நிற்பது நெருப்பே.

ஐந்தாவது பூதம் ஆகாயம். எங்கும் நிறைந்து அதிர்வுடன் கூடிய ஒலிவடிவமாய் ஈதர் என்கிற அலைகளை சுமந்துகொண்டிருக்கிறது ஆகாயம். ஓசைகளை மனிதன் அதிர்வலைகல் மூலமாகத்தான் கேட்கிறான். வானிலி,தொலைக்காட்சி, நவீன ஒலைபேசிகள் எல்லாமே ஆகாசவாணிமயம்.

உணரமுடியும், சுவைக்க முடியும், நுகரவும் சுவாசிக்கவும் முடியும், பார்க்க முடியும், கேட்க முடியும். மனிதரைப்போலவே மற்ற உயிர்களுக்கும் இது சாத்தியம்தான். இந்த ஐந்தறிவோடே மனிதனும் நின்று போயிருந்தால் ஆடு,மாடு போல மனிதனும் ஒரு விலங்கே. அவனும் ஒரு அடிமைதான். ஆறாவது அறிவாக மனம் வாய்த்த சமுக விலங்கே மனிதன். மனதை இதமாக பயன்படுத்துபவன் மனிதன் என வடநூல்கள் சொல்லும். மெய்வழிச்சாலை ஆண்டவர் மனுஷனை "மனு ஈசன்"எனபார்.

மனம் வாய்த்த காரணத்தால்தான் அடங்குபவனாக வாழாமல் அடக்குபவனாக மனிதன் வாழ்கிறான். வாழ்வான். மனம் மனித பரிணாமத்தின் மகுடம். மனம் வாய்த்த பிறகு மனிதன் அழத்தேவை இல்லை. மெய்மை இப்படி இருக்க மனித நிலையோ இன்று அவநம்பிக்கையின் எல்லையில் அலைந்து கொண்டிருக்கிறது. மனித முன்னேற்றத்துக்கான ரகசியம் மனதில்தான் ஒளிந்திருக்கிறது. அலாவுதீன் விளக்கும், அலிபாபா குகையும் மனம்தான். மந்திரக்கோலும், மந்திரக்கம்பளமும் மனம் தான். மோசேயின் கைத்தடியும் மனமே.

மனம் கேட்டால் கொடுக்கும், தட்டினால் திறக்கும், கறந்தால் கறக்கும், வடிக்க வடிக்க ஊறும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.