பொள்ளாச்சியில் இருந்து கிழவன்புதூர் வழியாக மீனாட்சிபுரத்துக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று முன் தினம் கிழவன்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, டிரைவர் செல்போனில் பேசிக் கொண்டு பஸ்சை ஓட்டியதாக தெரிகிறது. இதை பஸ்சில் இருந்த பயணிகள் கண்டித்தனர்.
மேலும் இதுகுறித்து கேட்டதற்கு டிரைவர் தேவையில்லாத வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் பயணி ஒருவர் டிரைவர் செல்போனில் பேசிக் கொண்டு பஸ்சை ஓட்டுவதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். மேலும் இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தியிடம், பஸ்சில் பயணம் செய்த பயணி வீடியோ பதிவை கொடுத்து புகார் தெரிவித்தார். இந்த புகாரை தொடர்ந்து துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட பஸ்சின் தடம் எண் மற்றும் பஸ் சென்ற தேதி, நேரத்தை வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பஸ்சை ஓட்டியது முள்ளுப்பாடியை சேர்ந்த டிரைவர் முருகானந்தம் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் காந்தி சிலை சிக்னலில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசாருடன் சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என நூதன தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர், நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் கண்காணிப்பில் டிரைவர் சீருடையில் கையில் கையுறை அணிந்து கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து டிரைவர் முருகானந்தம் கூறியதாவது:-
செல்போன் பேசிக் கொண்டு பஸ்சை ஓட்டியதால் எனக்கு இந்த தண்டனையை போலீசார் அளித்து உள்ளனர். மேலும் செல்போன் பேசிக் கொண்டும், அதிவேகமாக செல்வதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும் எடுத்து கூறினார்கள். இனி நான் செல்போன் பேசிக் கொண்டு எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட மாட்டேன். இதுபோன்று மற்ற டிரைவர்களும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்துக்களை தடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது...
பொள்ளாச்சி பகுதிகளில் தனியார் பஸ்களை அதிவேகமாகவும், டிரைவர்கள் சிலர் செல்போனில் பேசிக் கொண் டே ஓட்டுவதாக புகார் கள் வந்தன. வழக்கமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். அந்த தொகையை செலுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதுபோன்ற நூதன தண்டனைகள் மூலம் நிச்சயம் அவர்களை திருத்த முடியும். மற்ற டிரைவர்களும் இதை பார்த்து திருந்துவார்கள். பஸ், மினி பஸ்களை விபத்தை ஏற்படுத்த கூடிய வகையில் அதிவேகமாகவும், செல்போனில் பேசியவாறும் மற்றும் குடிபோதையிலும் ஓட்டினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.